அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
அமேசான் விளம்பரத்தில் பாரதிராஜா நடித்ததை நடிகர் சங்கம் கண்டித்தது பற்றி?
"பாரதிராஜா எங்களைவிட சிறப்பாக நடிக்கக்கூடியவர்' என்று அவரால் அறிமுகப்படுத் தப்பட்ட நடிகர் -நடிகையர் சொல்வது வழக்கம். அமேசான் விவகாரத்திலும் அமேசான் விளம்பரத்திலும் டபுள் ரோல் செய்து அசத்திவிட்டார் இயக்குநர் இமயம்.
ஜி.இராமச்சந்திரன், லாக்காபுரம், ஈரோடு
கடை ஏழு வள்ளல்கள் பற்றிப் படித்தது மறந்துவிட்டது. அவர்களையும் அவர்களின் சிறப்புகளையும் நினைவுபடுத்த முடியுமா?
பாரி மன்னன் முல்லைக்குத் தேர் கொடுத் தவன். ஓரி எனும் வல்வில் ஓரி, கொல்லிமலைக் கலைஞர்களுக்குத் தனது நாட்டையே பரிசளித்த வன். காரி எனும் மலையமான் திருமுடிக்காரி, ஆட்டக் குதிரைகளையும் அளவில்லாத பொருட் களையும் கேட்டவர்களுக்குப் பரிசளித்தவன். பேகன், குளிரில் நடுங்கிய மயிலுக்குப் போர்வை அளித்தவன். நள்ளியோ தன்னிடம் பரிசு கேட்டு வருபவர்கள் அதன்பிறகு வேறு யாரிடமும் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத அளவிற்கு அள்ளி வழங்கிய மன்னன். அதியமான் தனக்கு கிடைத்த அரிய மருத்துவம் கொண்ட நெல்லிக்கனியை தனது நட்பிற்குரிய புலவரான ஔவையாருக்கு அளித்து, அவர் நீண்டகாலம் வாழ்ந்து தமிழ் வளரக் காரண மானவன். ஆய் எனும் வள்ளல் தனக்கு நச்சுப் பாம்பு வழங்கிய அரிய வகை ஆடையை சிவபெரு மானுக்கே வழங்கியதாகக் கூறப்படுகிறது. விடுதலைப் போராட்ட வரலாற்றில் இடம்பெற்ற வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி., பாரதியார் ஆகியோரையே யார் எனக் கேட்கும் ஒன்றிய அரசின் அதிகாரிகள் உள்ள நாட்டில், எப்போதோ வாழ்ந்த கடையேழு வள்ளல்களை நினைவுபடுத்திக் கொள்ள நினைக்கும் உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72
ஜல்லிக்கட்டு, கிரிக்கெட் எதை மிகவும் ரசிப்பீர்கள்?
ஜல்லிக்கட்டு, ஆண்டுக்கொரு முறை அசத்து கின்ற நம் மண்ணின் பாரம்பரிய விளையாட்டு, கிரிக்கெட் -டெஸ்ட் மேட்ச்-ஒருநாள் போட்டி-20 ஓவர் என விதவிதமான வகையில் நம் மண்ணோடு மண்ணாகக் கலந்துவிட்ட விளையாட்டு. வாடி வாசலிலிருந்து சீறிவரும் காளையும், பவுலர் கையிலிருந்து விக்கெட்டை நோக்கி வரும் பந்தும், அதனை எதிர்கொள்பவர்களின் திறமையின் அடிப்படையில் விளையாட்டை ரசிக்க வைக்கிறது.
வண்ணை கணேசன், சென்னை 110
பென்னிகுயிக் சிலை இங்கிலாந்தில் நிறுவ ஏற்பாடு செய்யப்படும் என அறிவித்துள்ளாரே முதல்வர் மு.க.ஸ்டாலின்?
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள் பெரியாறு- வைகைப் பாசனத்தால் வளம் பெறுவதற்காக இன்றைய கேராளவின் இடுக்கி மாவட்டத்தில் அன்றைய (1895) காலத்தில் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஆங்கிலேயப் பொறியாள ரான கர்னல் ஜான் பென்னிகுயிக். ஆங்கிலேய அரசு போதுமான நிதி அளிக்காதநிலையில், இங்கிலாந் தில் இருந்த தனது சொத்துகளை விற்று, தமிழர் களுக்கான அணையைக் கட்டி முடிக்க முன்வந்த வர். அவர் கட்டிய அணையால் இன்று 2 லட்சத் துக்கும் அதிகமான ஏக்கர் நிலம் பாசன வசதி பெற்றுள்ளது. தென்மாவட்ட மக்கள், குறிப்பாக மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்கள் பென்னிகுயிக்கை தெய்வமாக வழிபடுகிறார்கள். அவர் பெயரில் டீக்கடைகள் முதல் வணிக நிறுவனங்கள் வரைப் பலவும் அமைந்துள்ளன. பென்னிகுயிக்குக்கு மதுரை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் சிலை வைத்தது கலைஞர் அரசு. தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள லோயர்கேம்ப்பில் மணிமண்டபம் கட்டியது ஜெயலலிதா அரசு. அவர் பிறந்த இங்கிலாந்து கேம்பர்ளி நகரத்தில் உள்ள மையப் பூங்காவில் அவருக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் சிலை வைக்க, லண்டன் வாழ் தமிழர்கள் முயற்சியுடன், செயின்ட் பீட்டர்ஸ் தேவாலய நிர்வாகத்திடம் உரிய அனுமதி பெறப்பட்டிருப்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நம்மை அடிமைப்படுத்தி ஆட்சி நடத்திய வெள்ளைக் காரர்களிடையே மலர்ந்த மனிதநேய ரோஜா பென்னிகுயிக். அவர், காலந்தோறும் மலர்ந்து மணம் வீசுகிறார்.
லட்சுமிசெங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு சில குறைபாட்டுகளுக்கு காரணமான அலுவலர்கள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் அறிவித்திருப்பது, பரிசுத் தொகுப்பு வழங்குவதில் கோட்டை விட்டிருப் பதைத்தானே காட்டுகிறது?
மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபோது வழங்கப்பட்ட கொரோனா கால நிவாரண மளிகைத் தொகுப்பு தரமாக இருந்ததை பொதுமக்களே பாராட்டினார்கள். குறுகிய கால இடைவெளியில் அது வழங்கப்பட்டது. ஆனால், முன்கூட்டியே பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்டும் ஆங்காங்கே குளறுபடிகள் என்றால் கோட்டைக்குள் ஓட்டைப் போட்ட பெருச்சாளிகளைக் கண்டறிந்து தண்டிக்க வேண்டியது கட்டாயம்.
மஞ்சுளா சிவலிங்கம், தரமணி
கடன் என்பது இந்திய ஏழைகளுக்கு சுமையாகவும், பணக்காரர்களுக்கு சுகமாகவும் இருப்பதன் மர்மம்?
வெள்ளத்தில் தத்தளிப்பவருக்கு தண்ணீர், எமன். கப்பலில் உலகம் சுற்றுபவருக்கு தண்ணீர், தேவதை.