மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்
இவ்வளவு தாமதமாக அரசியலுக்கு வந்ததற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்கிறாரே கமல்?
ஏன் வந்தீர்கள் என்று கேட்பது போல தேர்தல் களத்தில் மக்களின் தீர்ப்பு அமைந்துவிடக்கூடாது. இது கமலைப் போன்ற லேட் வருகையாளர்களுக்குப் பொருந்தும்.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஒரே விகித ஜி.எஸ்.டி. அமல்படுத்தப்படும்' என்ற ராகுலின் அறிவிப்பு?
ஜி.எஸ்.டி. என்பது காங்கிரசின் கனவுக் குழந்தை. ஆனால், மன்மோகன்சிங் அரசு அடக்கி வாசித்தது. பா.ஜ.க. அதைப் பெற்றெடுத்ததால், மோடி அரசு புகுந்து விளையாடுகிறது. ஒரே விகித ஜி.எஸ்.டி. என்பது, கழுத்துக்கு மேலே போகின்ற வெள்ளத்தின் அளவை இடுப்பு வரையிலாகக் கட்டுப்படுத்த உதவுமா?
வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி
கலைஞர் புதைத்த இடத்தின் ஈரம்கூட காயவில்லை. அண்ணன் அழகிரி உரிமைக் குரலை எழுப்பிவிட்டாரே?
கலைஞரின் கோடிக்கணக்கான கொள்கைவழி உடன்பிறப்புகளில், அழகிரியும் ஸ்டாலினும் ரத்தபந்த உடன்பிறப்புகள்.. சகோதர உறவுகள் காலப்போக்கில் பங்காளிகளாக மாறுவது வழக்கம். அழகிரி எழுப்பியது உரிமைக் குரல் அல்ல. தனக்கான பங்கு என்ன என்பதை அறிவதற்கான குரல். கலைஞர் மறைந்த நிலையில், "உண்மை விசுவாசிகள்' யாரென்ற சகோதரச் சண்டை. எம்.ஜி.ஆர். மறைந்தபோது உடன்கட்டை ஏறும் அளவிலான சக்களத்திச் சண்டை. கல்லறை அரசியல்கள் விசித்திரமானவை.
அ.குணசேகரன், புவனகிரி
மாவலிக்கு வாஜ்பாயிடம் மிகவும் பிடித்த குணம் எது?
தீவிர ஆர்.எஸ்.எஸ்.காரரும் இந்துத்வா -இந்தி கொள்கைவழியாளருமான வாஜ்பாய், தனது ஆட்சிக்காலத்தில் கூட்டணிக் கட்சிகளின் கடிவாளத்திற்கு கட்டுப்பட்டிருந்தார். இதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதை உணர்ந்து, கடிவாளப் பிடிக்கேற்றபடி ஓடி, கூட்டணி ஆட்சியை இந்தியாவில் முதன்முறையாக முழுமையான 5 ஆண்டுகாலம் நிறைவு செய்த அவரது அணுகுமுறை.
மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை
இளைய சமூகத்தை ஈர்த்திட்ட அண்ணா, எம்.எஸ்.உதயமூர்த்தி, அப்துல்கலாம் ஆகியோரின் சிந்தனைக் கட்டுரைகள் எந்தளவுக்கு உங்களைத் தொட்டன?
உலக வரலாற்றிலிருந்து சாறெடுத்து அதனைத் தமிழ்ப் பண்பாட்டின் சிறப்புகளுடன் கலந்து சமுதாய மாற்றத்தை கண்முன்னே ஏற்படுத்தியவை அண்ணாவின் எழுத்துகள். அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் பெற்ற வளர்ச்சியில் உள்ள தனிமனித பங்களிப்பை இந்தியா போன்ற பல சிக்கல்கள் கொண்ட நாடுகளுடன் பொருத்திப் பார்க்க ஆசைப்பட்டவை உதயமூர்த்தியின் எழுத்துகள். வல்லரசு சிறகுடன் இந்தியா உயர்ந்து பறக்க வேண்டும் என்ற கனவை இளைய மனங்களில் விதைத்து இலக்கை நோக்கி பறக்கத் தூண்டியவை அப்துல்கலாமின் சிந்தனைகள்.
எம்.கல்யாணசுந்தரம், கும்பகோணம்
தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே?
சிலை கடத்தல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றச் சொன்ன அ.தி.மு.க. அரசு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தை, பொதுமக்களை குறிவைத்து சுட்டுக்கொன்ற தமிழக காவல்துறையே விசாரிக்கும் என பிடிவாதம் பிடித்த நிலையில், நீதிமன்றம் ஸ்டெர்லைட்டையும் அரசையும் குறிவைத்து உத்தரவிட்டுள்ளது.
பி.மணி, வெள்ளக்கோவில்
மாநிலத்தில் அதிகாரம் படைத்தவர் முதல்வரா அல்லது ஆளுநரா?
படையப்பா பாணியில் சொல்வதென்றால், முதல்வர்தான் அதிகாரம் படைத்தவர். ஆனால், தமிழ்நாட்டில் அவரது சட்டையை இப்போது அணிந்திருப்பவர் ஆளுநர்.
ஆன்மிக அரசியல்
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
ஆன்மிக அரசியல் வந்தால் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் கருத்து சுதந்திரம் பறிக்கப்படுமா?
ஆத்திகமும் -நாத்திகமும் உலக வரலாற்றில் தவிர்க்க முடியாத இரு தத்துவங்கள். எண்ணிக்கை அடிப்படையில் ஆத்திகத்திற்கான ஆதரவு மிக அதிகமாகவும், நாத்திகத்திற்கான ஆதரவு குறைவாகவும் இருக்கும். ஆத்திகர் அநேகம்பேர் சொந்த வாழ்வின் துயர அனுபவங்களால் நாத்திக தொனியில் அவ்வப்போது பேசுவது உண்டு. நாத்திகர் என்பவர் தன் வாழ்நாளின் இறுதிவரை உறுதியாக இருந்து அதனை நிரூபிக்க வேண்டியவராவார். இதுதான் இயல்பு. இதற்கு மாறாக, மத வழிப்பட்ட ஆன்மிகம் எப்போதுமே நாத்திகத்திற்கு எதிராக எல்லா அதிகாரங்களையும் பயன்படுத்துகிறது. புராணங்களில் நாத்திகர்களின் தலை வெட்டப்பட்டுள்ளது. முடியாட்சியில் தீ வைத்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த நவீன காலத்திலும்கூட நாத்திக கருத்துகளைப் பேசுவோருக்கு எதிராக மதவெறியர்கள் துப்பாக்கியை நீட்டி உயிரைக் குடிக்கிறார்கள்.
அண்மையில், கடவுளின் படைப்புகள் குறித்து கருத்து தெரிவித்து அவதிக்குள்ளாகியிருப்பவர் பிலிப்பைன்ஸ் நாட்டு அதிபர் ரோட்ரிகோ டியூடர்டே. கிறிஸ்தவம், முஸ்லிம், பவுத்தம் என எந்தெந்த மதங்கள் எந்தெந்த நாடுகளில் அதிகாரமிக்கதாக இருக்கின்றனவோ அங்கெல்லாம் கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவர்களின் உயிருக்கு உத்தரவாதமில்லாத சூழல் உருவாக்கப்படுகிறது. இந்துத்வா அமைப்பான பா.ஜ.க. தனி மெஜாரிட்டியுடன் மோடி தலைமையில் ஆட்சியை அமைத்தபிறகு இந்தியாவிலும் ஏறத்தாழ அதே நிலைதான். கடவுள் மறுப்பு கொள்கையாளர்கள் மட்டுமல்ல, மத சீர்திருத்தத்தை வலியுறுத்திய நரேந்திர தபோல்கர், கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷ் எனப் பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. ஆன்மிக அரசியல் வருவதற்கு முன்பே, மதவெறி அரசியல் இங்கே தன் வேலையைக் காட்டத் தொடங்கிவிட்டது.