மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
சர்தார் வல்லபாய் பட்டேல் மேலும் சில காலம் இருந்திருந்தால் போர்த்துகீசியர்களிடமிருந்து கோவா முன்கூட்டியே விடுதலை பெற்றிருக்கும் என்கிறாரே பிரதமர் மோடி?
கோவா வரைக்கும் எதுக்குப் போகணும்? இதோ பக்கத்திலே இருக்கிற பாண்டிச்சேரியும் காரைக்காலும் பிரெஞ்ச் ஆட்சியின்கீழ் இருந்தன. இந்தியாவின் பெரும்பகுதி பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த நிலையில், சுதந்திரப் போராட்ட வீரர்களான அரவிந்தர், பாரதியார் உள்பட பலருக்கும் பாண்டிச்சேரிதான் பாதுகாப்பான இடமாக இருந்தது. பின்னர், காங்கிரஸ் தலைவர்களும் தங்களுக்கான பாதுகாப்பு பகுதியாக பாண்டிச்சேரி-காரைக்கால் பகுதிகளைக் கருதினர். பிரிட்டிஷ் இந்தியாவுடன் சேர்த்து, பிரெஞ்ச் பாண்டிச்சேரியையும் விடுதலை செய்யுமாறு, அந்த மண்ணைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் கோரியதைக்கூட அகில இந்திய காங்கிரஸ் தலைமை, இப்ப என்ன அவசரம் என்கிற ரீதியில்தான் அணுகியது என்று புதுச்சேரி சுதந்திரப் போராட்ட வரலாறு பற்றிய புத்தகத்தில் தொழிற் சங்கவாதியான வி.சுப்பையா பதிவு செய்துள்ளார். பட்டேலும் காங்கிரஸ் தலைவர்தான். பா.ஜ.க. பிரமுகர் அல்ல. அப்போது பா.ஜ.க. என்ற கட்சியும் கிடையாது. கோவா விடுதலைக்காகப் பாடுபட்ட வலதுசாரித் தலைவர் ராணடே போர்த்துகீசிய அரசால் சிறைப்படுத்தப் பட்டிருந்தார். அவரை விடுதலை செய்வதற்குக்கூட பட்டேல் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களால் முடியவில்லை. அறிஞர் அண்ணா அமெரிக்கா செல்லும் வழியில், வாடிகன் நகரில் போப்பை சந்தித்து, ராணடேவின் விடுதலைக்கு கோரிக்கை வைத்தார். போப் உத்தரவை போர்த்துக்கீசிய நாடு ஏற்றது. ராணடே விடுதலையானார். ஆனால், அதற்கு முன் அண்ணா இறந்துவிட்டார். மேடை அரசியலில் இந்த வரலாற்றைச் சொல்ல மாட்டார்கள். வடைகளைச் சுட்டுத் தள்ளுவார்கள்.
ச.தங்கவேலு, வாழவந்தான்கோட்டை
மு.க.ஸ்டாலின் ஆட்சியிலாவது அரசு வேலைகள் தகுதியானவர்களுக்கு கிடைக்குமா?
1996-2001 தி.மு.க. ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறையில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தகுதியோடு வழங்கப்பட்ட வேலை என வெளிப்படையாக அறிவித்தார் கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் க.அன்பழகன். 2006-2011 தி.மு.க ஆட்சியில் வி.ஏ.ஓ. பணி இடங்கள் அவ்வாறே நிரப்பப்பட்டன. இப்போதும் அந்த எதிர்பார்ப்பு உள்ளது. தகுதியானவர்களும் இருக்கிறார்கள். ஆனால், அரசு வேலைதான் கடந்த 25 ஆண்டுகளில் பெருமளவு குறைக்கப்பட்டுவிட்டது.
லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
கிரிப்டோ கரன்சி என்றால் என்ன என்று தங்கமணிக்கு தெரியாதாமே?
போலீஸ் துறையை தன்னிடம் வைத்திருந்த முன்னாள் முதல்வரான எடப்பாடி பழனிசாமிக்கு, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியாது. அவரது அமைச்சரவையில் மந்திரியாக இருந்த தங்கமணிக்கு கிரிப்டோ கரன்சி என்றால் என்னவென்று தெரியாது. அப்பாவி வேடம் போடுவது போன்ற ஆபத்து வேறு எதுவுமில்லை.
டி.சந்திரன், ஈரோடு
வாரணாசி தெருக்களில் பிரதமர் மோடி, உ.பி. முதல்வருடன் நள்ளிரவில் வலம் வந்திருக்காரே?
வாரணாசி, மோடியின் தொகுதி. அது அமைந்திருக்கும் மாநிலமான உத்தரபிரதேசத்தில் விரைவில் தேர்தல் நடக்க இருக்கிறது. தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துவிட்டால், 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ய முடியாது. நள்ளிரவில் வாக்கு சேகரிக்க முடியாது. அதனால் முன்கூட்டியே நடக்கிறார். மெட்ரோ ரயிலில் முதல்வர் ஆதித்யநாத் யோகியுடன் பயணிக்கிறார். ரயில்வே கடிகாரத்திற்கு கீழே நின்று படம் எடுத்து ஷேர் செய்கிறார். கலி காலத்தை மிஞ்சியது தேர்தல் காலம்.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72
திரிணாமூல் காங்கிரஸ் அகில இந்திய கட்சியாக வளர்ந்து வருகிறதா?
இந்திய தேசிய காங்கிரஸ் என வெள்ளைக்கார ஆட்சியில் வெள்ளைக்காரர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புதான் காங்கிரஸ். பின்னர் அது சுதந்திரப் போராட்ட இயக்கமாகத் தீவிரமெடுத்தது. காந்தி இருந்த போதே காங்கிரசிலிருந்து சோஷலிஸ்ட்டுகள் தனியாக செயல்பட்டனர். இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் காங்கிரசில் இருந்தவர்கள். திராவிட இயக்கத்தை வலுப்படுத்திய பெரியாரும் காங் கிரசில் இருந்தவர். சுதந்திரத்திற்குப் பிறகு, காங்கிரஸ் அகில இந்திய அளவிலும், மாநில அளவிலும் பல பிரிவுகளாயின. அதில் ஒன்றுதான், மம்தாவால் மேற்குவங்கத்தில் உருவான திரிணாமூல் காங்கிரஸ். 137 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட காங்கிரஸ், சரியான தலை(மை) இல்லாமல் தள்ளாடும் நிலையில், அதன் மற்ற பிரிவுகள் கிளை பரப்ப முயற்சிக்கின்றன.
மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை
இவரை முதல்வராக தேர்ந்தெடுத்தது நீங்கதானே சின்னம்மா, இப்ப நொந்து என்ன ஆகப்போகிறது என்று அ.தி.மு.க தொண்டர்கள் கேட்க மாட்டார்களா?
தொண்டர்கள் கேட்பார்கள் என்ற பயம் இருந்திருந்தால் எத்தனையோ தலைமைகள் சரியாக இருந்திருக்கும். அவர்கள் நேரடியாகக் கேட்பதில்லை. கேட்க நினைத்தாலும் அனுமதிக்கப்படுவதில்லை.