ம.தமிழ்மணி, குப்பம் -ஆந்திரா

இந்தியாவில் பல கிராமங்களுக்கு இன்னும் சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி, வீட்டுவசதி, சடலங்களை எடுத்துச் செல்ல வழி இல்லாத நிலை... இப்படி எத்தனையோ வசதிகளை மறந்த கண்ணில்லாத மத்திய -மாநில அரசுகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில்... டிஜிடல், நவீன இந்தியா என்று கூறிக்கொள்ள அரசுக்கு என்ன தகுதி இருக்கிறது?

Advertisment

இந்தியாவின் அடிப்படைக் கட்டமைப்பு களை வலுப்படுத்த வேண்டும் என்றால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உண்மையான அங்கீகாரம் கிடைத்தாக வேண்டும். மத்திய அரசு எனப்படும் ஒன்றிய அரசிடம் அதி காரங்கள் குவிந்திருக்கும் வகையிலேயே நமது அரசியலமைப்புச் சட்டம் அமைந்துள்ளது. மாநிலங்களிடமிருந்த அதிகாரங்கள் பலவும் ஒன்றிய அரசு வசமாகியுள்ளன. மிச்சமிருக்கும் அதிகாரத்தைக் கொண்டு உள்ளாட்சி அமைப்பு களை வலுப்படுத்த வேண்டிய மாநில அரசுகள் அதைச் செய்வதில்லை. அதிகாரப் பரவலாக்கம்- தற்சார்பு ஆகியவை இல்லாதவரை கிராமங்களுக் கான அடிப்படைக் கட்டமைப்புகள் கிடைக் காது. அத்துடன், இந்தியாவுக்கே உரிய சிறப்பு குணமான சாதிக் கட்டமைப்பு இறுக்கமாக இருக்கும் வரை எத்தனை டிஜிட்டல் புரட்சிகள் ஏற்பட்டாலும் முழுப் பலனைத் தராது. சாதிப் பிடிமானம் சற்று தளர்வாக உள்ள நகர்ப் புறங்களில் கல்வியறிவும் புதிய தொழில்வாய்ப்பும் அமையும் போது அங்கே எல்லாமே வேகமாக டிஜிட்டல் மயமாகின்றன. உள்ளாட்சிகளை உற்று நோக்காத வரை சமச்சீரான வளர்ச்சி சாத்தியமில்லை.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

காமராஜருக்கு பிறகு சிறந்த முதல்வரை தமிழகம் காணவில்லை என்கிறாரே இயக்குனர் எஸ்.ஏ.சி..?

கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா எனப் பல முதல்வர்களையும் சந்திக்கும் வாய்ப்பு பெற்றவர் எஸ்.ஏ.சந்திரசேகர். கிடைத்ததைவிட கிடைக்காதது சிறப்பாகத் தெரிவது இயல்பு.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்

இலங்கை இப்போது எப்படி இருக்கு.?

Advertisment

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் போட்டி நெருப்பை உருவாக்கி குளிர் காய்ந்து கொண் டிருக்கிறது. தமிழர் பகுதிகளில் சிங்களக் குடியேற்றம் தொடர்கிறது. சிங்களப் பகுதி களில் அந்நிய முதலீடுகள் பெருகுகின்றன. குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாமே என்பதுபோல பொருளாதார உதவி என்ற பெயரில் இலங்கையைத் தன் வசப்படுத்தி, ஈழத்தமிழர்கள் வாழும் பகுதிகளில் காவிக் கொடியைப் பறக்க விடுவதற்கேற்ற ஒப்பந்தங் களுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது மோடி அரசு. இந்தியப் பெருங்கடலை தனது கப்பற்படைத் தளமாக்க சீனா முயற்சித்துக்கொண்டிருக்கிறது. இலங்கைக் குள் இரண்டு நாடுகளும் நடத்தும் போட்டி யை உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது அமெரிக்க கழுகு.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு-77

"மக்கள் இயக்கமாக... மீண்டும் மஞ்சள் பை' என்ற திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவங்கியுள்ளது பற்றி?

மஞ்சள் பை என்றாலே 40 வயதுக்கு மேற்பட்டவர் களுக்கு பள்ளிக்கூட நினைவுகள்தான் வரும். உள்ளூர் துணிக்கடையில் தீபாவளிக்கோ, பொங்கலுக்கோ புதுத்துணி எடுக்கும்போது கொடுத்த மஞ்சப்பையின் நிறம் வெளுத்துப் போகும்வரை அதுதான் ஸ்கூல் பேக். வீட்டில் பெரியவர்கள் கடைக்குச் செல்லும்போது அதுதான் கேரி பேக். அப்புறம் பாலித்தீன் கவர்கள் வந்ததும் மஞ்சப் பை அநாகரிகமாகத் தெரிய ஆரம்பித்தது. பட்டிக்காட்டான் என்ற பட்டத்தைக் கொடுத்தது. பாலித்தீன் பரவலால் சூழலியல் பாதிப்பு குறித்து இயற்கை ஆர்வலர்கள் வலியு றுத்தியபோதும், ஒன்றுக்கு இரண்டு பாலித்தீன் பைகளை வாங்கி வெயிட்டான பொருட்களை எடுத்துச் செல்வது மக்களின் வழக்கமானது. எல்லா இடங்களிலும் பாலித்தீன் நீக்கமற நிறைந்ததுடன் கடல் முதல் கால்வாய்வரை எல்லாவற்றையும் ஆக்கிரமித்தது. கனமழையில் சென்னை போன்ற பெரிய நகரங்களில் தண்ணீர் சூழக் காரணமான தில் பாலித்தீன் குப்பைகளுக்குப் பெரும் பங்கு உண்டு. பட்ட பிறகு புத்தி பெறுவதுபோல, பாதிப்புக்குப் பிறகு, பாலித்தீன் பைகளைக் குறைத்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதனால் அரசாங்கமே மீண்டும் மஞ்சப்பை என்ற விழிப்புணர்வு திட்டத்தைத் தொடங்கி யுள்ளது. மக்களின் பங்கேற்பும் ஒத்துழைப்பும் இல்லாமல் எந்த விழிப்புணர்வுத் திட்டமும் வெற்றி பெறாது.

Advertisment

bb

சாரங்கன், கும்பகோணம்

திரைப்படங்களில் "ஐட்டம் ஸாங்' தேவையா?

ஒரு திரைக்கதையின் தன்மைக்கேற்ப எல்லாமும் தேவை என்கிறார்கள் திரைப்படைப்பாளிகள். அது எந்தளவில் எடுபடும் என்பதை ரசிகர்கள் தீர்மானிக்கிறார்கள். "புஷ்பா' படத்தில், "உம் சொல்றியா மாமா' என்கிற ஒத்த பாட்டுக்காக சமந்தா ஆடியிருக்கிறார். படத்தின் ஹீரோயின் ராஷ்மிகா ஆடிய "ஏ... சாமி' ரசிகர்களிடம் பட்டைய கௌப்புது.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

இந்த கேள்வியை படிக்கும் போது மாவலியாரின் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறதோ அதையே பதிலாக சொல்லுங்கள்?

மார்கழி அதிகாலைப் பனியில் சிலர் உடற்பயிற்சிக் காக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இரவு நேர அமைதி இன்னும் சில நேரத்தில் குலைந்துவிடும் என்பதற்கு அடை யாளமாக சில வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. தொலைக்காட்சி சேனல்களில் திருப்பாவையும் திருவெம் பாவையும் ஓடிக்கொண்டிருக்கிறது. கடிகாரமும் வாழ்க்கை யும் பேட்டரி தீரும்வரை ஓடிக்கொண்டே இருக்கிறது.