பா.ஜெயப்பிரகாஷ், தேனி
"ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. ''DO (OR) DIE ' என்னைப் பொறுத்தவரை அதை 'DO (AND) DIE ' என்று எடுத்துக் கொள்வேன்'' என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளது பற்றி.?
"செய் அல்லது செத்துமடி' என்கிற ஆங்கிலப் பொன் மொழியை சுதந்திரப் போராட்டக் காலத்தில் காந்தி பயன் படுத்தினார். வெள்ளையர்களை வெளியேற்றுவதற்கான போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் மன வலிமைக்கு அது மந்திரச் சொல்லாக அமைந்தது. மு.க.ஸ்டாலின் அதை சற்றுத் திருத்தி செயல்பட விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார். "செய்து முடித்தபின் செத்து மடி' என்பதுதான் அவரது திருத்தம். அதுவும் தனது செயல்பாட்டின் அடிப்படையிலான கருத்து என்றும் அவர் சொல்லியிருக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட்டபோது, காஞ்சி மடத்தின் விஜயேந்திரர் எழுந்து நிற்காமல் உட்கார்ந்திருந்தது தொடர்பான வழக்கில், “"தமிழ்த்தாய் வாழ்த்து என்பது இறை வணக்கப் பாடல் போலத்தான். அதற்கு எழுந்து நிற்க வேண்டும் என்ற சட்டம் எதுவுமில்லை'’என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. அடுத்த சில நாட்களில், "தமிழ்த்தாய் வாழ்த்து, தமிழ்நாடு அரசின் மாநிலப் பாடல். அது இசைக்கப்படும்போது எல்லாரும் எழுந்து நிற்கவேண்டும்''’என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட, அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோருக்கு மட்டும் எழுந்து நிற்பதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படும். இனி, விஜயேந்திரர் போன்றவர்கள், தங்களை மாற்றுத்திறனாளி என்றோ, கர்ப்பிணி என்றோ சொல்லி, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும்போது உட்கார்ந்திருக்க முடியாது. 'உர், ற்ட்ஹற் ஜ்ண்ப்ப் ய்ங்ஸ்ங்ழ் க்ண்ங்' என்பது போல இருக்கிறது முதல்வரின் இந்தச் செயல்பாடு.
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு-77
"கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், அவதூறுகளை பரப்புவது, வதந்திகளை பரப்புவது தான் பா.ஜ.க.வின் அரசியல்' என்கிறாரே விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமா. இது குறித்து?
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினரான தொல்.திருமாவளவன் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அவசர மாக விமான நிலையத் திற்கு செல்ல வேண்டிய நிலையில், அவர் தங்கியிருந்த இடத்தில் வாசலில் மழை நீர் தேங்கியிருந்ததால், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொண்டர்கள் நாற்காலிகளை வரிசையாகப் போட்டு, அவை சாயாமல் பிடித்துக்கொண்டு அதன் மீது ஏறி, திருமாவை நடந்து வரச் செய்தனர். பேண்ட்டும் ஷூவும் ஈரமாகிவிடக்கூடாது என்பதற்கான ஏற்பாடு இது. இதைக் கொச்சைப் படுத்தி வைரலாக்கியது பா.ஜ.க. அதுபோலவே, அமைச்சர் ஒருவருடன் திருமா பேசிக்கொண்டி ருக்கும்போது, கைகட்டி உட்கார்ந்திருந்ததையும் திரித்து வெளியிட்டு வைரலாக்கியது. "அவதூறு பரப்புவதும், அவதூறு பரப்புகிறவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களை விடுதலை செய்யவேண்டும்' என குரல் கொடுப்பதும், பா.ஜ.க. தொண்டர்கள் முதல் மாநிலத் தலைமை வரை தொடர்கிறது. திருமாவளவன் மிகச் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
"மோடி அரசின் புத்தாண்டு பரிசுகளை என்ஜாய் பண்ணுங்க' என ப.சிதம்பரம் கூறியுள்ளாரே?
பெட்ரோல் -டீசல் விலை உயர்வு என்பது ஆண்டுதோறும் கிடைக்கும் பரிசு. மத்திய அரசின் கல்வி நிலையங்களில் பல ஆயிரம் இடங்களைக் காலியாக விட்டு வைத்திருப்பதை "புத்தாண்டு பரிசு' என்கிறார் ப.சிதம்பரம்.
தே.மாதவராஜ், கோயமுத்தூர்-45
1971-ல் பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன்விழாக் கொண்டாட்டத்தில் அன்றைய பிரதமர், ராணுவ தளபதி போன்றோரை இருட்டடிப்பு செய்துள்ளதே ?
பங்களாதேஷ் என்ற புதிய நாடு பிறப்பதற்கு காரணமானது இந்தியா முன்னெடுத்த அந்தப் போர். 6 மாதங்கள் திட்டமிட்டு, 7 நாளில் பாகிஸ்தானை சரணடைய வைத்த இந்திய ராணுவத்தின் திறமைமிகு வெற்றி. அதனை முன்னெடுத்தவர் பிரதமர் இந்திராகாந்தி. அதற்கான வியூகத்தைக் கச்சிதமாக வகுத்தவர் ஃபீல்டு மார்ஷல் மானக் ஷா. இந்த வெற்றிக்காக இந்திராவை கட்சி எல்லை கடந்து, "துர்காதேவி' என்று பாராட்டினார் வாஜ்பாய். இந்திராவின் பெயரை மறைத்திருக்கிறது வாஜ்பாய் கட்சியைச் சேர்ந்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு.
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
"அ.தி.மு.க. மந்திரிகள் அனைவரும் ஊழல் திலகங்களாக காரணமே ஜெயலலிதாதான்' என்பதை ஏன் யாரும் உரக்கச் சொல்வதில்லை?
உரக்கச் சொன்னால், ஊழல் வழக்கில் குற்ற வாளியாக உச்சநீதிமன்றம் வரை சென்று உறுதிப் படுத்தப்பட்டவர், அரசு செலவில் கட்டப்பட்டுள்ள சமாதியிலிருந்து எழுந்து வந்து ஒரிஜினல் முகத்தைக் காட்டுவாரோ என்ற பயமாக இருக்கலாம்.
வாசுதேவன், பெங்களூரு
தினசரி காலண்டர், மாதாந்திர காலண்டர்?
அன்றாடம் வாங்கும் பால் போன்றது தினசரி காலண்டர். மளிகை சாமான்களைத் தேவையான அளவு வாங்கி வைப்பது போன்றது மாதாந்திர காலண்டர். எந்தவித காலண்டர்களாக இருந்தாலும் எல்லாருக்கும் தேதி, ஒரே மாதிரிதான் இருக்கும். ஆனால், ஒவ்வொருவருக்கும் நாட்கள் வெவ்வேறு மாதிரிதான் அமைகின்றன.