மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி
சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கும் குற்றவாளிகளுக்கு காலம் தண்டனை தருமா?
காலம் தண்டிக்கும். ஆனால், அதற்கான காலம் எப்போது வரும் என்பது தெரியாததால், சில குற்றவாளிகள் உரிய நேரத்தில் தண்டனை பெறுகிறார்கள். பல குற்றவாளிகள் சட்டத்தி லிருந்து தப்பித்தது போலவே காலத்திட மிருந்தும் நெடுங்காலம் தப்பிவிடுகிறார்கள்.
தூயா, நெய்வேலி
ஒரு கேள்விக்கு சுருக்கமான பதில் சிறப்பா? விரிவான பதில் சிறப்பா?
அது கேள்வியில் அடங்கியுள்ள செய்தி யைப் பொறுத்தது. நித்திலா, தேவதானப் பட்டி என்பவர் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகள் லீலாவதி மரணம் ஏற்படுத்திய தாக்கம் பற்றிக் கேட்டிருக்கிறார்.
வாழும் போது மறக்கப்பட்டவர்கள் மரணத்தில் நினைக்கப்படுகிறார்கள் என்று ஒரு வரியில் அதற்குப் பதிலளித்து முடித்துவிடலாம்.
எம்.ஜி.ஆரின் சொந்த வாழ்க்கையில், திரை வாழ்க்கையில், அரசியல் வாழ்க்கையில் தொடர்புடைய பெண்மணிகளின் வாழ்க்கையையும், அவருடைய சொந்த அண்ணன் மகளான லீலாவதியின் வாழ்க்கையையும் ஒப்பிட்டுப் பல நினைவலைகளைக் கிளறி விடும் போது அதற்கு விரிவான பதில் தேவைப்படுகிறது.
1984-ல் எம்.ஜி.ஆர். உடல்நலன்குன்றி, நினைவிழந்த நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையிலிருந்து, மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புரூக்ளின் டவுன்ஸ்டேட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். மூளையில் பாதிப்பு, பக்கவாதம், இவற்றுடன் சிறுநீரக பாதிப்பும் அவருக்கு ஏற்பட்டிருந்தது. அன்றைய உயர்நவீன சிகிச்சைகள் அவருக்கு வழங்கப்பட்ட நிலையில், மெல்ல நினைவு திரும்பினார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை தேவைப்பட்டது.
ரத்த உறவுகளின் சிறுநீரகம்தான் சிகிச்சைக்குப் பொருத்தமாக இருக்கும். எம்.ஜி.ஆருக்கு வாரிசுகள் இல்லாத நிலையில், அவரது அண்ணன் எம்.ஜி.சக்கர பாணியின் மகள் லீலாவதியின் ரத்த வகை பொருந்தியதால், அவருடைய இரண்டு சிறுநீரகங்களில் ஒன்று, எம்.ஜி.ஆருக்குப் பொருத்தப்பட்டது. எம்.ஜி.ஆர். நலம் பெற்றார். அமெரிக்காவில் இருந்தபடியே ஆண்டிப் பட்டியில் போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக முதலமைச்சரானார்.
அதன்பின், மூன்றாண்டு காலம் ஆட்சி செய்த எம்.ஜி.ஆர். 1987 டிசம்பர் 24ஆம் நாள் மரணமடைந்தார். அவரது உயிலின்படி, அவர் வாழ்ந்த ராமாவரம் தோட்டம், ஜானகி அம்மையாரின் வசமானது. அதனைத் தொடர்ந்து அவருடைய உறவினர் கள் அதனை அனுபவித் தனர். எம்.ஜி.ஆர். உருவாக்கிய அ.தி.மு.க என்ற கட்சி ஜானகி அணி-ஜெயலலிதா அணி எனப் பிரிந்த நிலையில், கட்சி உடைந்தால் அதற்காக எழுதி வைக்கப்பட்ட சொத்துகளைப் பொது நலனுக்குப் பயன்படுத்த வேண்டும் என்று உயிலில் இருந்ததால், ஜானகி-ஜெயலலிதா அணிகள் ஒன்று சேர்ந்தன. பின்னர், கட்சியும் சின்னமும் ஜெயலலிதா வசமானது. முதலமைச்சரான ஜெயலலிதா தனது போயஸ் பங்களாவைப் புதுப்பித்ததுடன் சிறுதாவூர், கொடநாடு எஸ்டேட் எனப் புதுப்புது பங்களாக்களைக் கட்டினார்.
ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியான சசிகலாவும் அவரது குடும்பத்தினரும் சொத்துகளை வாங்கிக் குவித்தனர். ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு, சசிகலா சிறை செல்ல, அ.தி.மு.க. என்ற கட்சி எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் கைகளுக்கு வர, அவர்கள் மீதும் ஏகப்பட்ட ஊழல் புகார்கள். ஏராளமான சொத்து ஆவணங்களுடனான குற்றச்சாட்டுகள் என வசதியாக உள்ளனர்.
எம்.ஜி.ஆர். உருவாக்கிய கட்சியும், அவரது இரட்டை இலை சின்னமும் இன்றும் அ.தி.மு.க.வை 70 இடங்களுடனான எதிர்க் கட்சியாக சட்டமன்றத்தில் உட்கார வைத்திருக் கிறது. அந்த எம்.ஜி.ஆர். உயிர்ப் பிழைக்கத் தனது சிறுநீரகங்களில் ஒன்றை வழங்கிய அவரது அண்ணன் மகள் லீலாவதி, கணவரை இழந்து, சொந்த வீடு இல்லாமலேயே இறந்து விட்டார். அவரது கடைசி ஆசை என்பது, தனது மகளுக்கு சொந்தமாக வீடு ஒன்றைக் கொடுத்து விட்டு கண்மூட வேண்டும் என்பதுதான்.
உதவி கேட்டவர்களுக்கெல்லாம் அள்ளிக் கொடுத்த வள்ளலான எம்.ஜி.ஆர், திருச்சி உறையூரில் பங்களா ஒன்றை வாங்கினார். தனது பெயரிலேயே அதனைப் பதிவு செய்தார். தன் உயிரை மீட்ட அண்ணன் மகளுக்கும், அண் ணன் குடும்பத்தாருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அதனை அவர்களுக்குத் தர வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். அது நிறைவேறுவதற்குள் அவர் மறைந்துவிட்ட நிலையில்... அந்த பங்களாவை கட்சி சொத்து என ஜெயலலிதா -சசிகலா -இ.பி.எஸ். -ஓ.பி. எஸ். எல்லாரும் அதனையும் கணக்கு காட்டி விட்டார்கள். கட்சியால் அவர்கள் எல்லாரும் வளமான வாழ்வை அனுபவிக்க, கட்சியின் நிறுவனரான எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் வழங்கி உயிர்காத்த அவர் அண்ணன் மகள் லீலாவதி தனது கடைசி ஆசையும் நிறைவேறாமலேயே இறந்துவிட்டார்.