ஜி.இராமச்சந்திரன், லக்காபுரம்
"புகை பிடித்தல் உடலுக்கு கேடு'’ என்று அரசாங்கம் விளம்பரம் செய்கிறது. ஆனால், கவிஞர்கள் -கதை ஆசிரியர்கள் தங்கள் சிந்தனை வளத்திற்காக புகைப்பிடித்து வருகிறார்களே?
மற்ற மனிதர்களைவிட சிந்தனையில் கவிஞர்களும் எழுத்தாளர்களும் மாறுபட்டி ருந்தாலும், மனிதன் என்ற வகையில் நுரையீரல், இதயம், ரத்த ஓட்டம் எல்லாவற்றிலும் அவர்களும் ஒரே வகையினர்தான். புகைப் பிடித்தல் அவர்களின் உடலுக்கும் கேடு தரும். சிந்தனையும் அதன் வழியிலான படைப்புகளும் ஒட்டுமொத்த மனித சமூகத்தின் கேடுகளையும் களைவதற்குத் துணை நிற்பதால், படைப்பாளிகளுக்கு மட்டும் இந்த புகைப் பிடிக்கும் பழக்கத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் காட்டப்படுகிறது எனக் கருதலாம்.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
"தீபாவளி' என்றதும் நினைவுக்கு வருவது?
பண்டிகைகளில் ஆடம்பரமும் கோலாகலமும் நிறைந்தது தீபாவளி. அது சமணர் விழா, பௌத்தர் விழா என்கிற ஆய்வாளர்கள் உண்டு. ஆரியத்தின் திணிப்பு என்கிற கருத்து உண்டு. நாயக்க மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட் டில் தீபாவளி முன்னிலைப்படுத்தப்பட்டது என்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். தீபாவளிக்காக சொல்லப்படும் புராணக் கதைகள் ஏராளம். ராமன் பட்டாபிஷேகம் தொடங்கி, நரகாசுர வதம் வரை பல கதைகள் இருக்கின்றன. புத்தாடை, பட்டாசு, இனிப்பு-காரம் எனப் பலவித பலகாரங்கள் இவையெல்லாம் தீபாவளியின் தனித்துவம். சில ஆண்டுகளுக்கு முன்புவரை, தீபாவளி நாளில் திரையரங்குகள் தோறும் புதுப்படங்கள் வெளியாகும். ரசிகர்கள் பெருந்திரளாகக் கூடியிருப்பார்கள். இப்படி பலவும் நினைவுக்கு வருகின்றன. எனினும், கால் நூற்றாண்டுக்கு முன், கிராமப்புறங்கள் பலவற்றிலும் தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில்தான் இட்லி-தோசை போன்ற காலை நேர உணவு இருக்கும். மற்ற நாட்களில் பழைய சோறு, நீராகாரம் என்றளவில் இருக்கும். இன்று, அந்த நிலை பெருமளவு மாறியுள்ளது. இந்த சமூக -பொருளாதார மாற்றத்தை நினைவில் கொள்வதும், அதை மேம்படுத்துவதும்தான் பண்டிகை நாட்களுக்கு சிறப்பு சேர்க்கும்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
இலக்கியத்தரத்தோடு சிந்திக்க வைத்த பட்டிமன்றங்கள் இப்போது, சிரித்துக் கைதட்ட மட்டுமே வைப்பதற்கு காரணமானவர்கள் யார்?
இலக்கிய -புராண கதாபாத்திரங்களை முன்வைத்து பட்டிமன்றங்கள் நடந்தது ஒரு காலம். அதன்பின், அந்த இலக்கியத்தின் மீதான சமுதாயப் பார்வையை முன்வைத்து பட்டிமன்றங்கள் நடந்தன. அப்புறம், திரைப்பாடல்கள் -திரை இசை என திரைத்துறை சார்ந்த தலைப்புகளில் பட்டிமன்றங்கள் நடந்தன. இப்போது குடும்பத்தினர் எதிர்கொள்ளும் சிக்கல்களை வைத்து பட்டிமன்றங்கள் நடக்கின்றன. இலக்கியம், சமூகம் என விவாதிக்கும்போது, பார்வை யாளர்களுக்கு அதுவரை அறிந்திராத புதிய புதிய செய்திகள் கிடைக் கும். அட.. அப்படியா என சிந்திக்க வைக்கும். குடும்பச் சிக்கல்கள் என்றால் ஒவ்வொரு மனிதனுமே அதில் கதாபாத்திரம்தான். அதுபற்றி விவாதிக்கும்போது அட, இதுதானா... இதை இப்படியும் சொல்லலாமா என்று தோன்றும். அது சிரிப்பை ஏற்படுத்தும். தனக்கான துன்பத்தை மற்றொருவர் நகைச் சுவையோடு சொல்லும்போது, தன்னைக் கேலி செய்வதைக்கூட அறியாமல் சிரிக்க வைக்கும் ஆற்றல் இன்றைய பட்டிமன்றங்களுக்கு இருக் கின்றன. "இடுக்கண் வருங்கால் நகுக' என்ற வள்ளுவரின் வாக்கைக் காப்பாற்று கிறார்கள் பட்டிமன் றப் பேச்சாளர்கள். இதற்கும் நீங் கள் சிரித் தால், கம்பெனி பொறுப்பல்ல.
வண்ணை கணே சன், பொன்னியம்மன் மேடு
குலுக்கல் முறையில் பரிசு தருவதாகக் கூறி, கொரோனா தடுப்பூசியை மக்க ளுக்குப் போடுவது சரியா?
விழிப்புணர்வு முறையில் போட லாம் என்றுதான் ஆரம்பத்தில் நினைத் தார்கள். கொரோனா என்ற சொல்லே மக்களை அச்சுறுத்தி வந்த நிலையில்... தடுப்பூசி போடுவதற்குப் பலரும் தயங்கியபோது, பிரபலமானவர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினால், மக்களிடம் எடுபடும் எனத் திட்டமிட்டார்கள். நடிகர் விவேக், நேரலையில் தடுப்பூசி போட்டார். ஆனால், அன்றிரவே அவருடைய உயிர் பறிபோனது. "தடுப்பூசிக்கும் விவேக்கின் உயிரிழப்புக்கும் தொடர்பில்லை' என மருத்துவ ரீதியான காரணங்களை விளக்கினாலும், மக்களிடம் ஏற்பட்ட அச்ச உணர்வு போகவில்லை. விழிப்புணர் வை வேறு வகையில் யோசித்தவர்கள், குலுக்கல் முறையைக் கையாண்டார்கள். பலன் கிடைக்கிறது என்றால் ரிஸ்க் எடுப்பது மனித இயல்பு. அது ஒர்க்அவுட் ஆவதால், தமிழ்நாட்டில் தடுப்பூசி போடுகிறவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு முகாமிலும் அதிகரிக்கிறது. தடுப்பூசி போட்டால் கொரோனா ரிஸ்க் குறைவு என்கிற விழிப்புணர்வும் மெல்ல மெல்ல ஏற்படத் தொடங்கி யுள்ளது.
நித்திலா, தேவதானப்பட்டி
மாவலி எனக்கு தரும் பதிலுக்கேற்ப ஒரு படத்தை இந்த இதழ் நக்கீரனில் வெளியிடுவார்களா?
சமூக நீதி -சுயமரியாதை அப்படியென்றால் என்ன என்பதை ஒற்றைப் படம் விளக்கிச் சொல்லிவிட்டதே! கோயில் அன்னதானத்தில் விரட்டியடிக்கப்பட்ட பழங்குடி சமுதாயத்துப் பெண்ணை மரியாதையுடன் அழைத்து வந்து, தன் பக்கத்தில் உட்கார வைத்து, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சமபந்தி விருந்து சாப்பிட்ட படம்தான் அது.