வி.கார்மேகம், தேவகோட்டை

1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோயில் 8 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது என்கிறார்கள். தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மீனாட்சிஅம்மன் கோயில் பகுதிகளைச் சீரமைக்க மட்டுமே 2 ஆண்டுகள் ஆகும் என்கிறாரே தக்கார்?

உருவாக்குவது எளிது, சீரழித்தால் சீரமைப்பது கடினம். ஆன்மிகமாக இருந்தாலும்... அரசியலாக இருந்தாலும்.

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி

Advertisment

"புதிதாக கட்டப்பட்டுவரும் நடிகர் சங்க கட்டிடத்தில் கருணாநிதி பயன்படுத்திய பேனாவை வைக்கவேண்டும்' என்கிறாரே நடிகர் விஷால்?

பேனாவை வைப்பது கௌரவம் தருகின்ற ஓர் அடையாளம். அதே நேரத்தில், கலைஞரின் "பராசக்தி', "மனோகரா', "மந்திரிகுமாரி' போன்ற படங்களில் ஒன்றை காலத்திற்கேற்ற வகையிலும், அதன் கருத்தும் கட்டமைப்பும் சிதைக்காத வகையிலும் ரீ-மேக் செய்தால் அது கலைஞரின் பேனாவுக்குப் பெருமை, அப்படி நடிக்க விஷால் உள்பட எந்த நடிகர் முன்வருவார்?

ஜெயசீலன், அயனாவரம், சென்னை

Advertisment

மதச்சார்பற்ற நாட்டின் சுதந்திரதினத்தில் குறிப்பிட்ட மதத்தின் அடையாளத்துடன் தமிழ்நாட்டு முதல்வர் மூவர்ணக்கொடி ஏற்றியது சரியா?

10 ஆண்டுகள் தலைப்பாகையுடன் செங்கோட்டையில் கொடியேற்றி இருக்கிறார் சீக்கியரான மன்மோகன்சிங். ஜாகிர் உசேன், பக்ருதின் அலி அகமது போன்ற குடியரசுத் தலைவர்கள் குல்லா அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். எடப்பாடி பழனிசாமி நெற்றியில் விபூதி-குங்குமம் அணிந்திருந்தார். அவருடைய தலைவியான செல்வி.ஜெயலலிதா நாமக் கீற்று அணிந்தபடி கொடி ஏற்றியுள்ளார். மதச்சார்பற்ற தன்மை என்பது எந்த மத அடையாளமும் இல்லாமல் இருப்பதுதான். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்கும் மதநல்லிணக்கமே மதச்சார்பற்ற தன்மையாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

mavalianswers

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

"விஸ்வரூபம்-2' பார்த்தீர்களா?

நன்றாக இருக்கிறது. படத்தின் தொடக்கத்தில் மக்கள் நீதி மய்யத்தின் பரப்புரை காட்சியை வைத்த கமலின் உத்தி. கடைசியில் வைக்காமல் தவிர்த்தது ஏன் என்பது அவருக்கே தெரியும்.

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6

கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 1971-ல் தொடங்கிய பிச்சைக்காரர் -தொழுநோயாளிகள் மறுவாழ்வு மையங்களின் தற்போதைய நிலை என்ன?

கலைஞர் ஆட்சியின் முன்னோடித் திட்டங்களில் இதுவும் ஒன்று. பிச்சைக்காரர்களையும் தொழுநோயாளிகளையும் சமூகம் அருவருப்புடன் ஒதுக்கிவந்த காலத்தில், இந்திய அளவில் அன்னை தெரசாவும், உலக அளவில் சேகுவேராவும் தொழுநோயாளிகள் நலனில் அக்கறை செலுத்தியவர்கள். தமிழகத்தில் அதை கலைஞர் செய்தார். தமிழ்நாடு தழுவிய அளவில் 10 இடங்களில் இத்தகைய மையங்கள் அமைக்கப்பட்டன. எப்போதெல்லாம் தி.மு.க. ஆட்சி அமைகிறதோ, அப்போதுதான் இந்த மையங்கள் சீரமைக்கப்படும். 2001-ல் ஜெ. ஆட்சியில் நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்ட செய்தியை அறிந்த ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே விண்ணப்பள்ளி என்ற இடத்தில் உள்ள மறுவாழ்வு மையத்தின் தொழுநோயாளர்கள் தங்களுக்கு உணவு வேண்டாம் என மறுத்து, கலைஞரின் விடுதலை செய்தி கேட்கும்வரை உண்ணாநோன்பு இருந்து, தங்கள் நன்றியைக் காட்டினார்கள். கலைஞர் மரணமடைந்த நிலையில்... காஞ்சி மாவட்டம் பரனூரில் உள்ள மையத்தினர், "அவரால்தான் நாங்கள் வாழ்வு பெற்றோம்' என்பதை உரக்கச் சொல்லியிருக்கிறார்கள்.

எம்.முகம்மதுரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"பழிச்சொல் கண்டு கலங்கவில்லை' என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?

"பதவி சுகம் தவிர, வேறு எதற்காகவும் கலங்கமாட்டோம்...' என்பதைச் சொல்லாமல் சொல்கிறாரோ!

ஆன்மிக அரசியல்

நித்திலா, தேவதானப்பட்டி

"அய்யாவழி' வைகுண்டரின் நெறியைப் பின்பற்றுபவர்கள், தங்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என நாடார்கள் அமைப்பின் மூலம் தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்களே?

ayya

கர்நாடகாவில் லிங்காயத்துகளை, முந்தைய சித்தராமையா அரசு தனி மதமாக அறிவித்த நிலையில், தமிழ்நாட்டில் வள்ளலாரின் வழியில் வாழ்பவர்கள் தங்களை தனி மதமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சைவ நெறிப்படி வாழ்பவர்கள் நெல்லையில் மாநாடு நடத்தி தங்களை "சிவமதம்' என அறிவிக்கக் கோரினர். இந்தியா என்ற தேசத்துக்குள் பல தேசிய இனங்கள் உள்ளடங்கியிருப்பதுபோல, இந்து மதம் என மொத்தமாகக் குறிப்பிடும் மதத்திற்குள் ஏராளமான சமயங்கள் உள்ளன. அய்யாவழியைப் பின்பற்றுவோரும் அத்தகையவர்கள்தான்.

19-ஆம் நூற்றாண்டில் திருவனந்தபுரம் சமஸ்தானத்திற்குட்பட்ட இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த முத்துக்குட்டி என்பவர், சாதி ரீதியிலான அடக்குமுறைகளுக்கு எதிராக ஆன்மிக நெறியைக் கையிலெடுத்து போராடிய வைணவ பக்தர். அய்யா வைகுண்டராக வணங்கப்பட்டவர். அனைத்து சமுதாயத்தினரும் ஏற்றத்தாழ்வு காணாமல் நீர் அருந்த முத்திரி எனும் பொதுக்கிணறு அமைத்தவர். மேல்சாதிக்காரர்கள் முன்பாக ஒடுக்கப்பட்ட சமுதாய பெண்கள் தோள்சீலை (மாராப்பு) அணிவது குற்றமாகக் கருதப்பட்ட காலத்தில் அவர்களின் உரிமைப் போராட்டத்தில் துணைநின்று, தனது வழிபாட்டுத் தலத்தில் தோள்சீலை போட்டு வர அனுமதித்தவர். அனைத்து வகையிலும் சமஉரிமையை வலியுறுத்தியவர். வழிபாட்டு முறைகளிலும் இந்து மதத்தின் சாதிய ஏற்றத்தாழ்வுக்கு மாறானது அய்யா வைகுண்டரின் ஆன்மிக வழி. அந்த வழியை 80 லட்சம் பேர் பின்பற்றுவதாகவும் அவர்களைத் தனிமதமாக அறிவிக்க வேண்டும் என்றும் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.