நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
உ.பி. வன்முறையில் ராகுல் குடும்பத்தினர் லாபம் தேடுவதாக பா.ஜ.க. குற்றம் சாட்டியுள்ளதே!
நேரு குடும்பத்தைச் சேர்ந்த ராகுலும் பிரியங்காவும் எப்படி லாபம் தேடலாம்? வன்முறை யில் லாபம் தேடுவது நியாயமா? அல்லது அரசியல் ரீதியாக லாபம் தேடத்தான் காங்கிரசுக்குத் தெரி யுமா? குஜராத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத் தைத் தொடர்ந்து, அன்றைய முதல்வர் மோடி தலைமையிலான அரசாங்கத்தின் ஆதரவுடன் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டி விட்டு... பல நூறு உயிர்களைக் கொன்று, அந்த மதவெறியையே அரசியலாக்கி, இந்தியாவின் பிர தமராகும் அளவுக்கு லாபம் தேடி, 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து முதல்வர் -பிரதமர் என பதவி வகிப்பவர்களின் கட்சியினர், காங்கிரஸை நோக்கிக் குற்றம்சாட்டுவது சரிதானே!
வாசுதேவன், பெங்களூரு
நோபல் பரிசு, ஒலிம்பிக்ஸ் இவைகளில் இந்தியர்களின் அதிக அளவு பங்களிப்பது இல்லாதது?
ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் அதிகம் பதக்கம் பெறாமல் இருப்பதற்கு இந்தியா வின் விளையாட்டுத்துறை சார்ந்த அர சியல் மிக முக் கியப் பங்கு வகிக்கிறது. தொடர்ச்சி யாக அது அம்பலப்பட்டு வருவதால், மெல்ல மெல்ல ஏற்படும் மாற்றங்களால் இம்முறை டோக்கியோ ஒலிம்பிக் கில் முன்பைவிட கூடுதல் பதக்கங்களை இந்தியா பெற்றது. நோபல் பரிசு என்பது அதற்கான கமிட்டி யிலும், அது சார்ந்து உலகளாவிய அளவிலும் உள்ள அரசியல் முக்கிய காரணமாகும். அமைதிக் கான நோபல் பரிசு, சோவியத் யூனியன் அதிபராக இருந்த மிகேல் கோர்பசேவுக்கும், அமெரிக்காவின் அதிபராக இருந்த பராக் ஒபாமாவுக்கும் வழங்கப் பட்டது. சமாதானப் புறா எனப் பாராட்டப்பட்ட இந்திய பிரதமர் நேருவுக்கு கொடுக்கவில்லை. இலக்கியப் படைப்புகளிலும் இந்தியர்கள் அந்தளவு நோபல் பரிசுகளைப் பெறவில்லை. எனினும், இம்முறை நிறவெறிக்கு எதிரான படைப்புகளை வழங்கும் தான்சானியா எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு, பத்திரிகையாளர்களான பிலிப்பைன்ஸின் மரியா ரீசாவ், ரஷ்யாவின் டிமிட்ரி முராடோவ் இருவருக் கும் வழங்கப்பட்டுள்ளது. துணிச்சலான முறையில் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்தியதற்காக பெண் -ஆண் என பேதமின்றி பரிசு வழங்கப்பட்டிருப்பதும் கவனத்திற்குரியது.
சி.கார்த்திகேயன், சாத்தூர்
அறிமுக பாடலில் "அண்ணாத்த'வோடு ரஜினிகாந்த், எஸ்.பி.பி. கூட்டணிக்கு எண்ட் கார்டாக அமைந்துவிட்டது பற்றி?
"இந்தத் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்' என்று பாடியவர் எஸ்.பி.பி. அதனால், அவருக்கு என்ட் கார்டு கிடையாது. "அண்ணாமலை- பாட்சா' தொடங்கி "அண்ணாத்த' வரை படத்தின் தொடக்கப் பாடலில் அசத்திய ரஜினி-எஸ்.பி.பி. கூட்டணி எப்போதும் எவர் கிரீன்தான்.
ம.ரம்யாராகவ், வெள்ளக்கோவில்.
தேர்தலில் தனக்கு சீட்டு வழங்கவில்லை என்று உள்ளடி வேலை செய்து தோற்கடிக்கப்படுகிற நிகழ்வை கட்சித் தலைமையால் கட்டுப்படுத்த முடியாமல் போவதேன்?
ஒரு கட்சி என்பது... தலைமைக்கு கட்டுப்படும் தொண்டர்கள், தொண்டர்களின் மனநிலையை அறிந்த தலைமை என, இருதரப்பிலும் சமமான புரிந்துணர்வு இருக்கவேண்டும். பதவியை மட்டுமே எதிர்பார்த்து கட்சியில் சேர்ந்து, உடனடியாக போஸ்டிங் வாங்கி கல்லா கட்டிவிட வேண்டும் என நினைப்பவர்களும் இருக்கிறார்கள். காலம் காலமாக கட்சிக்கு உழைத்தும் தலைமை யால் கண்டுகொள்ளப்படாதவர்களும் இருக்கிறார் கள். திட்டமிட்டே ஓரங்கட்டப்படுகிறவர்களும் உண்டு. இப்படி பல காரணங்களால், கட்சிக்கு எதிராக கச்சை கட்டி களமிறங்கி, உள்ளடி வேலைகளைப் பார்க்கிறவர்களால்தான், தலைமை அறிவிக்கின்ற வேட்பாளரைத் தோற்கடிப்பது தொடர்கிறது. காரணம் எதுவாக இருந்தாலும், வெளிப்பகையை விட உள்ளடிதான் ஒரு கட்சியின் கட்டமைப்பையும் எதிர்காலத்தையும் சிதைக்கின்ற புற்றுநோய்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
தமிழகத்தில் எந்தவித திட்டத்திலும் பாரத பிரதமரின் புகைப்படம் இடம்பெறவில்லை, இது விஷயத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சி கூடாது என்கிறாரே அதன் தேசியத் துணைத் தலைவர்?
பிரதமர் அறிவிக்கும் திட்டங்கள் எதிலும் தமிழே இல்லையே... எல்லாமே இந்தி -சமஸ்கிருதமாக இருக்கிறதே. உதாரணமாக, "பிரதமரின் வீடு வழங்கும் திட்டம்' என்று தமிழில் மொழிபெயர்க்காமல், இந்தி உச்சரிப்பில் "ப்ரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா' என தமிழ் எழுத்து களில் எழுதி, முழி பிதுங்க வைக்கிறதே ஒன்றிய அரசு?
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்
பா.ஜ.க. எம்.பி. வருண்காந்தி விவசாயிகளுக்கு ஆதரவாக பேச ஆரம்பித்து விட்டது பற்றி?
பா.ஜ.க.வில் இருந்தாலும் நேரு குடும்பத் தின் வாரிசு ஆயிற்றே! ராகுல்காந்தியின் குரல் அவரது சித்தப்பா மகனிடம் கொஞ்சமாவது வெளிப்படத் தானே செய்யும். அதுவும், உத்தரப்பிரதேசத்து மாநில எம்.பி.யான வருண்காந்தி, தனது தொகுதி மக்களின் மனநிலையும் அறிந்திருப்பாரல்லவா!
நித்திலா, தேவதானப்பட்டி
ஓடம் ஒருநாள் வண்டியில் ஏறும் -வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும் என்கிறார்களே?
68 ஆண்டுகளுக்கு முன்பு டாடா நிறு வனத்திடமிருந்த விமானங்கள் இந்திய அரசின் ஏர் இந்தியா நிறுவனத்திற்குள் வந்தன. இப்போது, அரசின் ஏர் இந்தியா நிறுவனம் அதே டாடா நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது.