வாசுதேவன், பெங்களூரு

மெரினா, சாந்தோம் கடற்கரையில் தேங்காய், மாங்காய் பட்டாணி சுண்டல் சாப்பிட்டது நினைவில் இருக்கின்றதா?

mavalianswers

மெரினாவையும் சாந்தோமையும் சினிமாவில் காட்டத் தொடங்கிய காலத்திலிருந்து, மெரினா என்ற பெயரிலேயே படம் வெளியான காலம்வரை இந்த தேங்காய் -மாங்காய் -பட்டாணி சுண்டல் தமிழ்நாடு அளவில் பிரபலமாகிவிட்டது. கடல் அலையையும் கடற்காற்றையும் விட சுண்டல் முக்கியத்துவம் பெற்றது. இப்போது ஃபாஸ்ட் புட் கடைகள் பெருகி, ச்செஸ்வான் ஃப்ரைடு ரைஸ் அயிட்டங்களை இளசுகள் விரும்புகிற நிலையிலும், மெரினாவின் பாரம்பரியமான சுண்டலுக்கும், மிளகாய் பஜ்ஜிக்கும் தனி மதிப்புதான். சில ஆண்டுகளுக்கு முன்புவரை, கடற்கரையில் தாகம் எடுப்பவர்களின் தண்ணீர் தேவைக்காக, மணலில் ஊற்று தோண்டி அதிலிருந்து நீர் எடுத்து, ஒரு கிளாஸ் 10 பைசா, 25 பைசா என விற்று வந்தார் கள். அது மணலுக்குள் புதைந்து, மினரல் வாட்டர் பாட்டில்கள் சேல்ஸ் ஆக ஆரம்பித்துவிட்டன.

Advertisment

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல 7 பேர் விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என்கிறாரே ஓ.பி.எஸ்?

ஓ.பி.எஸ். சொல்வது நியாயம்தான். தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் கூறியது மட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருந்தபோதும் வலியுறுத்தியதை நிறைவேற்ற வேண்டும். ஆனால், இந்த நியாயத்தை ஓ.பி.எஸ். திடீரென பேசுவது, அவரது கட்சித் தலைவி சொன்ன ‘செலக்டீவ் அம்னீஷியாவைக் காட்டுகிறது. 7 பேர் விடுதலை என்பது ஜெயலலிதா கையில் நீதிமன்றம் தூக்கிக் கொடுத்த லட்டு. அதைப் புட்டுப்புட்டு போட்டவரும் அவர்தான். மாநில அரசுக்கு உள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்திருப்பதை விட்டுவிட்டு, மத்திய அரசுக்கு 3 நாள் கெடு விதித்தார் ஜெயலலிதா. மத்திய காங்கிரஸ் அரசு, இதுதான் சந்தர்ப்பம் என கோர்ட்டுக்குப் போய்விட்டது. அப்போது தொடங்கிய சட்டப் போராட்டம் குடியரசு தலைவர்வரை போய் நிற்கிறது. லட்டைப் புட்டாலும் பூந்திதான். தி.மு.க. அரசு நினைத்தால் பூந்தியை உருட்டி லட்டாக்கலாம்.

Advertisment

உமா சங்கர், மலேஷியா

"தமிழ்நாட்டில் மிக விரைவில் பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சர் பதவியில் அமரத்தான் போகிறார். அதை பிரதமர் மோடியே பார்க்கத்தான் போகிறார்'' என்கிறாரே அண்ணாமலை?

தமிழ்நாட்டில் கால் ஊன்றுவோம் என்ற பா.ஜ.க., அ.தி.மு.க.வில் தோள் ஊன்றி 4 சீட்டு களை வென்றிருக்கிறது. ஏற்கனவே இப்படித்தான் 2001-ல் தி.மு.க. தோளில் ஏறி 4 சீட்டுகளை பா.ஜ.க. வென்றது. அப்போது தி.மு.க.வை எதிர்க்கட்சியாக்கியது. இப்போது அ.தி.மு.க.வை எதிர்க்கட்சியாக்கி உள்ளது. அப்போது வாஜ்பாய் பிரதமராக இருந்தார். இப்போது மோடி பிரதமராக இருக்கிறார். காலம் மாறினாலும் காட்சிகள் மாறாமல் இருப்பதை அண்ணாமலையை விட, மேலே இருப்பவர்கள் நன்றாக அறிவார்கள்.

நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி

முன்னாள் மந்திரிகள் மீதான ஊழல் நடவடிக்கை தொடருமா அல்லது நின்றுவிடுமா?

தொடர்வதும் விடுவதும் அரசியல் சூழலைப் பொறுத்தது. ரெய்டுகள் அ.தி.மு.க. ஆட்சியிலும் தி.மு.க. ஆட்சியிலும் எதிர்க்கட்சிகள் மீது மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிக்கிய பணம், நகை, பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால், வழக்கு விசாரணையில் தண்டிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர்? ஜெயலலிதா மீதான கலர் டி.வி. ஊழல், டான்சி நில ஊழல், ப்ளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு உள்ளிட்ட எல்லாவற்றிலும் மேல்முறையீடுகளில் அவர் விடுதலை செய்யப்பட்டார். சொத்துக் குவிப்பு வழக்குதான் அவரை சிக்க வைத்தது. அதுவும், 1991-96 காலகட்டத்தில் அவர் முதல்வராக இருந்தபோது வெறும் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்கினார். அதாவது, 5 ஆண்டுகளில் மொத்த வருமானமே வெறும் 60 ரூபாய்தான். ஆனால், 65 கோடி அளவுக்கு சொத்து வாங்கியிருந்தார். அந்த சொத்துக்கான வருமானம் என்ன என்பதுதான் வழக்கு. தானாக வலையில் சிக்கிய திமிங்கலமானார் ஜெயலலிதா. 20 ஆண்டுகளுக்கு மேல் வாய்தா மேல் வாய்தா வாங்கியும் அவரால் தப்பிக்க முடியவில்லை. ஜெயலலிதாவிடம் அமைச்சர்களாக இருந்தவர்கள் அடிமைகளாக இருந்திருக்கலாம். ஆனால், ஜெயலலிதா போல கணக்கு காட்ட முடியாதவர்கள் அல்ல. உள்நாடு -வெளிநாடு என கச்சிதமாக கணக்கெழுதிவிட்டார்கள். ஊழலை ஆதாரப்பூர்வமாக நிரூபிப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இந்த சுறா மீன்கள் சிக்கும்.

ம.தமிழ்மணி, வெள்ளக்கோவில்

சட்டமன்றம் என்றால் 110 விதி என்பது தலைஎழுத்தா?

110 என்பது செய்தி சேனல்களுக்கு தலைப்பெழுத்து. அது தலை எழுத்தா, தலை நிமிர வைக்கும் எழுத்தா என்பது அறிவிப்புகளை செயல் படுத்த வேண்டிய ஆள்வோரின் திறமையில் உள்ளது.