அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

ஆகஸ்ட் 15-ல் கொடியேற்றும் உரிமையை மாநில முதல்வர்களுக்குப் பெற்றுத் தந்தவர் கலைஞர். அந்த உரிமையைப் பயன்படுத்தும் வாய்ப்பை அவரது மகனான செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பெறுவாரா?

Advertisment

உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு இருந்தால் பெறுவார். கட்சியில் உள்ள கலைஞரின் உடன்பிறப்புகள் மட்டுமல்ல, மு.க.ஸ்டாலினின் ரத்த உறவான "உடன்பிறப்புகளின்' ஒத்துழைப்பும் அதிமுக்கியம்.

Advertisment

mavalianswers

மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்

தேசிய அரசியலில் வாஜ்பாய்-அத்வானி நட்பு, மாநில அரசியலில் கலைஞர்-பேராசிரியர் நட்பு?

இரண்டு நட்புமே அவரவர் ஏற்றுக்கொண்ட கொள்கைவழி நட்பு. ஆனால் அத்வானி, வாஜ்பாய் நட்பில் அவர்களின் சித்தாந்த தலைமை எடுத்த முடிவின்படி இருவரும் மாற்றி மாற்றி முன்னிறுத்தப்பட்டதும் பின்தள்ளப்பட்டதும் உண்டு. கலைஞர்-பேராசிரியர் நட்பு என்பது அரசியலில் காணமுடியாத தோழமை உணர்வு கொண்டது. அண்ணா மறைந்த பிறகு, தன்னைவிட இளையவரான கலைஞரின் தலைமையை ஏற்பது குறித்து ஆரம்பத்தில் யோசித்த பேராசிரியர், அதன்பின் "இயக்க நலனே முக்கியம்' என்கிற முடிவுடன் கலைஞரின் கடைசி மூச்சுவரை அவருக்குத் தோளோடு தோள் நிற்கும் தோழரானார். பல நெருக்கடியான சூழலிலும் இயக்கத்தை தொண்டர் பலத்துடன் கலைஞர் கட்டமைத்த நேரத்தில், அதன் சித்தாந்த பலத்தை வலிமைப்படுத்தும் பணியை ஏற்றுக்கொண்டவர் பேராசிரியர். "என் உயரம் எனக்குத் தெரியும்' என வெளிப்படையாகச் சொன்னவர் கலைஞர். அதனைச் சொல்லாமல் செயல்படுத்திய பேராசிரியரிடம் தி.மு.க. நிர்வாகிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளம்.

எம்..சண்முகம், கொங்கணாபுரம்

கலைஞர் எனும் "சகாப்தம்' குறித்து?

"பராசக்தி'யில் ஒரு வசனம் எழுதியிருப்பார். "ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன், அதுபோல என் சுயநலத்தில் பொதுநலமும் உண்டு' -இந்த வசனம்தான் கலைஞர் எனும் சகாப்தம். இதில் சுயநலம் என்பதில் சுயமரியாதையும் கலந்திருக்கிறது. சின்ன கிராமத்தில், அவமதிக்கப்பட்ட சமூகத்தில், பண பலமின்றி, பண்ணையார்களின் ஆதிக்கத்தின்கீழ் வாழ்ந்த குடும்பத்திலிருந்து சுயமரியாதைச் சூறாவளியாக கிளர்ந்தெழுந்தவர் கலைஞர். சமூகநீதிப் பாதையில் பயணித்து, ஆதிக்கவாதிகளுக்கு சவால்விடும் சக்தியாக உயர்ந்தார். தன்னைப் பாதித்த அவமதிப்பு அழுக்குகளை சாப்பிட்டு, எப்படி சமுதாய தடாகத்தை சுத்தம் செய்தாரோ அதுபோலவே, ஒடுக்கப்பட்டிருந்த சமூகம் அனைத்திற்கும் சட்டரீதியான பல வாய்ப்புகளை வழங்கி சுயமரியாதை கிடைக்கச் செய்தார். கலைஞர், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல. விமர்சனத்திற்குரிய அந்த அழுக்குகளை அயராத உழைப்பாலும் அரசியல் பண்பாட்டாலும் தின்று செரித்து சுத்தப்படுத்தி, சகாப்தமானவர்.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

பன்"முக'த்தன்மை கொண்ட கலைஞர் "மு.க'ருணாநிதியில், எந்த மு.க.வை மாவலிக்குப் பிடிக்கும்?

புராணத்தில் கூறப்படும் திராவிட மன்னன் மாவலிகூட வஞ்சகமாக அழுத்தப்பட்டு புதையுண்டான். ஆனால், புதைக்கப்படும் நேரத்திற்கு முன்புகூட வஞ்சக சூழ்ச்சிகளை சட்டநீதி மூலம் வென்ற "திராவிடப் பேரரசன்' மு.க.தான் மாவலியின் நாயகன்.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

கலைஞருக்கான இறுதி அஞ்சலியில் எந்த நிகழ்வு முக்கியமானது?

எங்கோ ஒரு குக்கிராமத்தில் பிறந்த எளியவரும் கூட் ஒட்டுமொத்த இந்தியாவே அஞ்சலி செலுத்தும் வகையில் வலிமையான தலைவராக முடியும் என கலைஞர் விதைத்துச் சென்றுள்ள உழைப்பும் தன்னம்பிக்கையும்.

_____________________________________

ஆன்மிக அரசியல்

ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்

பிராமணரல்லாதார் ஒருவர் ஆகம கோவிலின் அர்ச்சகராக ஆகி இருக்கிறாரே, இந்நேரம் கலைஞர் உயிருடன் இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பார்?

Advertisment

அனைவரையும் படைத்த ஆண்டவனின் கருவறையிலேயே சாதி பேதம் பார்த்து, அவர்கள்தான் உயர்ந்தவர்கள், இவர்களெல்லாம் தாழ்ந்தவர்கள் என்று அர்ச்சனை செய்வதற்கான தகுதியை நிர்ணயித்திருப்பதை எதிர்த்து திராவிட இயக்கம் தொடர்ந்து போராடிவருகிறது. நாத்திகரான பெரியார், ஆத்திகர்களின் வழிபாட்டு உரிமைக்காக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் போராட்டத்தை கையிலெடுக்க, 1971-லேயே அதற்கான சட்டத்தை பிறப்பித்தார், அப்போதைய முதல்வர் கலைஞர். ஆகமத்தைக் காட்டி உச்சநீதிமன்றம் வரை சென்று, சட்டச் சிக்கலை உருவாக்கிவிட்டார்கள் உயர்குலத்தோர். அதனால், தனது உரிமைப் போராட்டம் வெற்றி பெறாமல், நெஞ்சில் தைத்த முள்ளுடன் இறந்தார் பெரியார். அதன்பிறகு, 2006-ல் அந்த முள்ளை அகற்றும் வகையில், சட்டம் இயற்றி, ஆகம விதிகள்படி அனைத்து சாதியினருக்கும் அர்ச்சகர் பயிற்சி அளித்தது கலைஞர் அரசு. 200-க்கும் மேற்பட்ட பல சமுதாயத்தினரும் அர்ச்சகர் பயிற்சியுடன் தீட்சைபெற்ற நிலையில், உயர்குலத்தோர் மீண்டும் உச்சநீதிமன்றம் மூலம் சட்டச் சிக்கலை உருவாக்கினர். அந்த சிக்கல் தீர்ந்து, நல்ல தீர்ப்பு வந்தபோது ஜெயலலிதா தலைமையிலான ஆட்சி நடந்தது. ஆகமப் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்க ஜெ. அரசு முன்வரவில்லை. அதேநேரத்தில் கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் வாய்ப்பு உருவாகியது. இந்நிலையில்தான், தமிழ்நாட்டின் மதுரையில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தவரான மாரிச்சாமி முதன்முறையாக இந்து அறநிலையத்துறை சார்பில் அர்ச்சகராக்கப்பட்டுள்ளார். 200-க்கும் அதிகமானவர்கள் இதேபோன்ற வாய்ப்பை எதிர்பார்த்து உள்ளனர். பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியதன் மூலமாக, ஆன்மிக உரிமையை நிலைநாட்டிய பகுத்தறிவாளராக மரணத்திற்குப் பிறகும் சாதித்திருக்கிறார் கலைஞர்.