அ.தமிழ்க்குமரன், ஈரோடு

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்பு போல பேசுவதில்லையே?

அவருடைய கட்சியினரால், பேசத் தெரியாதவர் -தடுமாறுகிறார் -துண்டுச் சீட்டைப் பார்த்துப் படிக்கிறார் என்று விமர்சிக்கப்பட்டவர் முதலமைச்சராகவே ஆகிவிட் டார். சொல்லைவிட செயல் பெரிது எனக் காட்டியிருக்கிறார். அதனால், சீமான் தனது கட்சியின் வெற்றிக் கணக்கைத் தொடங்குவதற்கான வியூகங்களில் கவனமாக இருக்கக்கூடும்.

சீனிவாசன், கண்டனூர்

Advertisment

தி.மு.கவின் வாக்குறுதிகளை நம்பி தமிழக மக்கள் ஏமாந்து நிற்கிறார்கள் என நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை சொல்வது உண்மைதானே?

ஆட்சிக்கு வந்து 100 நாட்களில் தி.மு.க நிறைவேற்றிய வாக்குறுதிகளும் உள்ளன. நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளும் உள்ளன. குறிப்பிட்ட காலக்கெடு விதித்து, அதற்குள் நிறைவேற்றுவோம் என்று உத்தரவாதம் அளிக்க வேண்டிய கடமையும் மு.க. ஸ்டாலின் தலை மையிலான அர சுக்கு இருக்கிறது. ஆனால், டால ருக்கு எதிரான ரூபாயின் மதிப் பை குறைப்போம், பெட்ரோல் -டீசல் விலையைக் குறைப்போம், ஆண்டுக்கு பலகோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்றெல்லாம் மோடியும் பா.ஜ.க.வும் அடுக்கி வைத்த வாக்குறுதிகள் என்னாயிற்று என்ற உண்மையை அண்ணாமலை சொல்லலாம்.

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6

Advertisment

கோவில்களில் உள்ள சாமியை பக்தர்களே பூசை செய்யும் வழக்கத்தை மாற்றி, பூசாரிகளை -அர்ச்சகர்களை நியமித்தது எந்த ஆட்சி?

முன்னோர் வழிபாடு, குலசாமி வழிபாடு, நடுகல் வழிபாடு இவையெல்லாம் பக்தர்களே நேரடியாக பூசை செய்யும் வழக்கம் கொண்ட வழிபாடுகள். பண்பாட்டுத் தாக்கத்தால் பெருங் கோவில்களும் அதற்குரிய தெய்வங்களும் பெருகியபிறகு வழிபாட்டு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் அர்ச்சகர்கள் -பூசாரிகள் ஆகியோரே பூசை செய்ய வேண்டும் என்ற நிலை உருவாகிவிட்டது. கி.பி. 6-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு, மன்னராட்சிக் காலத்தில் இந்த பண்பாட்டு மாற்றங்கள் தமிழ்நாட்டில் நடந்தன. பல்லவர் காலம் தொடங்கி விஜயநகரப் பேரரசு -மராட்டிய ஆட்சியாளர்கள் காலம் வரை ஏற்பட்ட பண்பாட்டுத் தாக்குதல்களே இப்போதுவரை ஆகமங்கள் என்ற பெயரில் பக்தர்களே நேரடியாக கடவுளுக்கு பூசை செய்வதைத் தடுத்து வைத்திருக்கிறது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு, சென்னை-110

வலிமைமிக்க அமெரிக்க படையை ஓடவிட்ட தாலிபான்களைப் பார்த்து பாடம் கற்க வேண்டும் என இந்திய அரசுக்கு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா எச்சரிக்கை விடுத்திருக்கிறாரே?

ஒரு நாட்டின் பிரச்சினையை அப்படியே இன்னொரு நாட்டில் பொருத்திப் பார்க்க முடியாது. ஒவ்வொரு நாட்டின் இறையாண்மை பாதுகாக்கப்படும் வகையிலேயே நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். ஆப்கானிஸ்தான் மண்ணில் சோவியத் யூனியன், அமெரிக்கா என வல்லரசுகள் வாலாட்டியதன் விளைவுதான், தாலிபான்கள் என்கிற மத அடிப்படைவாத தீவிரவாதிகளின் வளர்ச்சி. காஷ்மீரைப் பொறுத்தவரை, அதன் உரிமைகள் குறித்து இந்தியாவின் ஆட்சியாளர்கள் உரிய கவனம் செலுத்தாத நிலையில், பக்கத்தில் உள்ள பாகிஸ்தான் ஆதரவுடன் தீவிரவாதம் வளர்க்கப்பட்டது. மெகபூபாவும் அவருக்கு முன்பு முதல்வர்களாக இருந்தவர்களும் ஜனநாயக வழியில் வந்தவர்கள்தான். தாலிபான்களை மெகபூபா சுட்டிக்காட்டுவது தவறான உதாரணம். எச்சரிக்கையாகப் பேசவேண்டியவர் அவர்தான்.

எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு

"ராகுல்காந்தியால் யாருக்கும் எந்தப் பயனும் இல்லை' என்று ரயில்வே இணையமைச்சர் ராவ்சாஹேப் தன்வே விமர்சிக்கிறாரே?

mm

ராகுல்காந்தியை குறைத்து மதிப்பீடு செய்வது என்பது பா.ஜ.க.வின் அரசியல் வியூகங்களில் ஒன்று. அதற்கேற்ப, தலைவர் இல்லாத நிலையில் இரண்டு ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தள்ளாடிக்கொண்டிருக்கிறது. இதுபோல, பா.ஜ.க. -அ.தி.மு.க. -தமிழ்த் தேசிய கட்சியினர் உள்ளிட்டோரால் குறைத்து மதிப்பிடப்பட்டவர்தான் மு.க.ஸ்டாலின். தன் அயராத உழைப்பால், அரசியல் வியூகத்தால், தலைமைப் பண்பால் நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் வெற்றிபெற்று, எதிரிகளின் கணிப்புகளை நொறுக்கினார். அதுபோன்ற ஒரு வெற்றிக்கு ராகுல்காந்தி கடுமையாக உழைக்க வேண்டியிருக்கிறது.

நித்திலா, தேவதானப்பட்டி

"உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம்' என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் எந்த நம்பிக்கையுடன் சொல்கிறார்?

அரசியலில் இறங்கிவிட்டால் தங்களின் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். கமலைப் பொறுத்தவரை, "கிராம சபை கூட்டத்தை நடத்த வேண்டும்' என அ.தி.மு.க. ஆட்சியிலும் வலியுறுத்தினார். தி.மு.க. ஆட்சியிலும் வலியுறுத்துகிறார். உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்துக்கூட இதை இப்போது வலியுறுத்தக்கூடும். அவர் காட்டுகிற ஆர்வத்தை அவரது கட்சி நிர்வாகிகளும் காட்ட வேண்டும். கமல் முன்வைத்த கோரிக்கைகளில், "எழுத்தாளர்கள் -கலைஞர்களுக் கான விருதுகள்' -"நல்லாசிரியர்', "கலைமாமணி' விருது போன்றவற்றிற்கு சம்பந்தப்பட்டவர்களே விண்ணப்பித்து விருது வாங்கவேண்டும்' என்ற நடைமுறையை மாற்றவேண்டும் என்ற கோரிக்கை பரிசீலனைக்குரியது.