உமா சங்கர், மலேஷியா
"தமிழ்நாட்டில் கடன்கார ஆட்சி நடக்கிறது'' என எச்.ராஜா கூறியுள்ளது பற்றி உங்கள் கருத்து?
ஒன்றிய அரசுக்கு சொந்தமான 6 லட்சம் கோடி சொத்துகளை ஏலம் விட்டு வியாபாரம் செய்கின்ற டெல்லி ராஜாக் களின் ஆட்சி நீடித்தால் தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியாவில் இருக்கிற எல்லா மாநிலங்களும் கடன்கார மாநிலங்களாகத் தான் ஆகும்.
தா.விநாயகம். ராணிப்பேட்டை.
உத்தரப்பிரதேசத்தில் கல்லீரலை தானம் செய்து தம்பியின் உயிரை காப்பாற்றிய சகோதரிகளை பற்றி?
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை களில் மிகவும் சிக்கலான சிகிச்சைகளில் ஒன்று, கல்லீரல் மாற்று சிகிச்சை. ரத்தவகை பொருந்தியிருந்தால்தான் இந்த சிகிச்சையை செய்ய முடியும். அதனால் ரத்த உறவு களையே மருத்துவத்துறையினர் பெரும் பாலும் தேர்வு செய்வார்கள். ஆனாலும், சில உறவுகள் இத்தகைய சிகிச்சைக்குத் தயங்குவார்கள். தம்பிக்காக அக்காக்கள் கல்லீரல் தானம் தந்தது உறவின் மேன்மை யைக் காட்டுகிறது. தமிழ்நாட்டில் சசிகலா கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக, விபத்தில் மூளைச் சாவு அடைந்த இளைஞரின் உடலை, அவரது உறவினர்களுக்கே தெரி யாமல் ஏர் ஆம்புலன்ஸில் தூக்கி வந்து, அ.தி.மு.க அரசின் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்த நிகழ்வுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த சகோதரிகளின் அர்ப்பணிப்பு உணர்வின் பெருமை புரியும்.
தே.மாதவராஜ், திருவள்ளுவர் நகர், கோயமுத்தூர்-45
எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டணி அமைத்து இருப்பது 2024 வரை தாக்குப் பிடிக்குமா?
அது மாநிலக் கட்சிகளின் கைகளில் இருக்கிறது. கை சின்னத்தைக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறையில் இருக்கிறது. பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் அதிகம் பாதிக்கப்படுவது மாநில உரிமைகளும் நலன்களும்தான். மாநிலங்களில் உள்ள கட்சிகளும் அங்கே போட்டியிடும் பா.ஜ.க அல்லாத தேசிய கட்சிகளும் இதனை உணர்ந்து வியூகம் வகுத்தால் 2024-ல் தாக்குப்பிடிப்பது மட்டுமல்ல, பா.ஜ.க.வுக்கு எதிரான தேர்தல் தாக்குதலில் வெற்றிபெறவும் வாய்ப்பு அதிகம்.
அண்ணாஅன்பழகன், அந்தணப்பேட்டை.
சட்டப்பேரவையில் 50 ஆண்டுகளை தாண்டும் அமைச்சர் துரைமுருகன் பற்றி?
எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் எதிர்க்கட்சியாக தி.மு.க இருந்தபோது இடி- மின்னல்- மழை என 3 எம்.எல்.ஏக்களை சொல்வார்கள். அதில் ஒருவர், துரைமுருகன். மற்றவர்கள் ரகுமான்கான், க.சுப்பு. எதிர்க்கட்சியாக இருந்தபோதும் ஆளுங்கட்சியாக இருந்தபோதும் கலைஞரிடம் நெருக்கமாக இருந்தவர் துரைமுருகன். ஜெயலலிதா ஆட்சியிலும் சட்ட மன்றத்தில் துரைமுருகனின் குரல் ஓங்கி ஒலித்தது. கலைஞர் ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது தமிழ்நாட்டின் நீர்ஆதாரங்களை மேம்படுத்தியதுடன், அவற்றின் உரிமைக்காக அண்டை மாநிலங்களுடன் அவர் மேற்கொண்ட சந்திப்புகள்- உரையாடல்கள்- சட்டப் போராட்டங்கள் பலனைத் தந்தன. 1971-ல் தொடங்கிய அவரது சட்டமன்றப் பயணம், 1991 தேர்தலைத் தவிர்த்து மற்ற எல்லா தேர்தல்களிலும் வெற்றிப்பயணமாகவே அமைந்திருக்கிறது. பேரவையைக் குலுங்க குலுங்க சிரிக்க வைக்கவும், குலுங்கி அழ வைக்கவும், உணர்ச்சிவசப்படச் செய்யும் வலிமை வாய்ந்தவர்.
முகமது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
தன் தந்தை கலைஞரின் பக்தர் என்கிறாரே ஓ.பி.எஸ்?
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முதல் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடத்தை ஒட்டியுள்ள பகுதியில் கலைஞருக்கு ரூ.39 கோடி செலவில் நினைவிடம் அமைக்கப்படும் என அறிவித்ததுடன், அதற்கான மாதிரி வரைபடத்தையும் வெளி யிட்டுள்ளார். முதல்வரின் அறிவிப்பை வரவேற்றுப் பேசிய முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம். தனது தந்தையார், தீவிர கலைஞர் பக்தர் என்றும், அவரது பெட்டியில் எப் போதும் கலைஞ ரின் பராசக்தி, மனோகரா வசனப் புத்தகங்கள் இருக்கும் என்றும், அவர் இல்லாத நேரங்களில் அதை எடுத்துப் படித்த தாகவும், சமுதாய மாற்றத்திற்கான கருத்துகளுடன் கலைஞரின் வசனங்கள் இருக்கும் என்று புகழ்ந்திருக் கிறார். கலைஞரின் தமிழை ஓ.பி.எஸ் மட்டுமல்ல, அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர், அவரைத் தொடர்ந்து வழிநடத்திய ஜெயலலிதா உள்பட அ.தி.முக.வின் முன்னணியினர் பலரும் ரசித்திருக்கிறார்கள். கலைஞரின் பேனா அத்தகைய வலிமை கொண்டது. அதனால்தான் அதே வடிவத்தில் அவரது நினைவிடம் உருவாகிறது.
பி.மணி, குப்பம், ஆந்திரா மாநிலம்
தி.மு.க அரசு மக்களுக்கு நல்ல சேவை செய்யவேண்டும் என்கிற நிலையில் இல்லாமல் அ.தி.மு.க ஆட்சியில் ஏற்படுத் திய ஊழல்களை வெளிக்காட் டவே அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறதே என்று எண்ணத் தோன்றுகிறதே?
ஒரே ஒரு கொடநாடு... ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் கேட்கிற அளவுக்கு அ.தி. மு.க.வை அலற வைத்திருப்பதன் எஃபெக்ட் அப்படித் தோன்று கிறது.