சங்கரசுப்பிரமணியன், பாளையங்கோட்டை, நெல்லை
அரசியலில் பகைக்கு நடுவே பண்பாட்டை எதிர்பார்க்க முடியுமா?
கடந்த ஆகஸ்ட் 20-ந் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள். நாடாளுமன்றத்தில் அவரது படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டபோது பிரதமர் மோடி உள்ளிட்ட பா.ஜ.க.வினர் கலந்து கொண்டனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியிடம் நலன் விசாரித்துப் பேசினார். அதே நாள் மாலையில், பா.ஜ.க அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து எதிர்க்கட்சிகளுடன் காணொலியில் உரையாற்றினார் சோனியாகாந்தி. காங்கிரஸ் கட்சி மக்களுக்கு விரோதியாகிவிட்டது என்று பா.ஜ.க.வினர் விமர்சித்தனர். அவ்வளவுதான் அரசியல் பண்பாடு.
சு.வெங்கடேஷ், கோட்டயம்
ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளைத் திரும்பப் பெற்றதால் அமெரிக்கா தலை குனிந்து நிற்கிறது என்று இந்நாள் அதிபர் பைடனை விமர்சிக்கிறாரே முன்னாள் அதிபர் டிரம்ப்?
உயர்ந்த ஜனநாயகப் பண்புகளைக் கொண்டதாகப் போற்றப்படும் அமெரிக்காவின் அரசியலும் நம்ம ஊரைப் போலத்தான் என்று அதிபர் தேர்தல் விவாதத்தின்போது தன்னுடைய பேச்சின் மூலம் வெளிப்படுத்தியவர் டிரம்ப். தோற்றபிறகும் அதனை ஏற்றுக் கொள்ள இயலாமல் ஏதேதோ செய்து பார்த்து தோற்றுப் போனார். அந்த ஆற்றாமையை ஆஃப்கானிஸ்தான் விவகாரத்தில் வெளிப்படுத்துகிறார். ஆப்கானிஸ் தானில் மட்டுமல்ல ஈராக் தொடங்கி பல நாடுகளிலும் அமெரிக்கப் படைகள் புகுந்து அந்தந்த நாட்டை நாசப்படுத்திவிட்டு, கடைசியில் அம்போ எனக் கைவிட்டு வருவது தான் வரலாறு. வியட்நாம் மக்கள்தான் அமெரிக்கப் படை களுக்கு சரியான பதிலடி கொடுத்தார்கள். பைடன்-டிரம்ப் காலத்திற்கு முன்பாக கென்னடி, ரீகன், ஜார்ஜ் புஷ், ஜூனியர் புஷ் காலத்திலிருந்தே அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் படையெடுப்புகளின் இருண்ட வரலாறு தொடர்கிறது.
நித்திலா, தேவதானப்பட்டி
ஒருவரின் உயிரைக் குறி வைத்து யாகம் நடத்தினால் என்ன நடக்கும்?
கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்ட வைக்கம் என்ற ஊரில் கோவில் அமைந்துள்ள தெருவில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டி ருந்த காலத்தில், அந்தத் தீண் டாமையை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார் பெரியார். அவரை சிறையில் அடைத்தபோதும், போராட் டத்தின் தீவிரம் குறையவில்லை. அதனால், சமஸ்தானத்து புரோகிதர்கள் பெரியாருக்கு எதிராக யாகம் நடத்தினார்கள். யாகம் செய்து முடித்தபோது, திருவிதாங்கூர் சமஸ்தானத்து மன்னர் இறந்து போய்விட்டார். அதன்பின், போராட்டத்தின் விளைவால், கோவில் உள்ள தெருவில் அனைத்து மக்களும் நடப்பதற்கு அனுமதி கிடைத்தது. யாகத்தின் பலன்கள் இப்படியும் இருக்கும்.
சாரங்கன், கும்பகோணம்
எல்லா மாநிலங்களிலும் தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றால் கேரளாவில் மட்டும் ஓணம் சிறப்பு பெறுகிறதே, ஏன்?
தீபாவளி-ஓணம் இரண்டுக் கும் புராணக் கதைகள் உண்டு. கிருதயுகத்தில், வராக (பன்றி) அவதாரம் எடுத்த திருமால், பாதாளம் நோக்கி சென்று அசுரனுடன் போரிட்டு இரண்யாட்சன் என்ற அரக்கனை வென்று வந்தார் திருமால். போரிட்ட களைப்பில் இருந்த அவருக்கு, பூமாதேவியின் தொடுதல் சுகமாக அமைய, இருவரது உறவினால் பவுமன் என்ற மகன் பிறந்தான். அவன் கடும் தவம் செய்து, பெற்ற தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படாதபடி பிரம்மனிடம் வரம் பெற்று நரகாசுரன் என்ற பெயரையும் பெற்றான். அவனது ஆட்சியில் மக்கள் வதைபட, அதனால் திருமால் கிருஷ்ணர் அவதாரம் எடுத்தார். பூமாதேவி சத்யபாமாவாக அவதரித்தார். இருவரும் திருமணம் செய்துகொண்டனர். நரகாசுரன் தனது மகன் என்ற நினைப்பு சத்யபாமாவாக மாறியிருந்த பூமாதேவிக்கு மறந்திருந்தது. நரகாசுரனை வதம் செய்ய கிளம்பிய கிருஷ்ணர் தனக்குத் தேரோட்டியாக சத்யபாமாவை அழைத்துச் சென்றார். சண்டையில் கிருஷ்ணர் காய மடைந்து மயக்கமடைந்த போது, தேரோட்டி வந்த சத்யபாமா, நரகாசுரனை எதிர்த்து போர் செய்து அவனை அழித்தார். தன் தாயைத்தவிர வேறு யாராலும் மரணம் வரக்கூடாது என வரம் பெற்றிருந்த நரகாசுரனுக்கு அதன்படியே மரணம் நிகழ்ந்தது.
கேரளாவைச் சேர்ந்த மாவலி (மகாபலி) மன்னனின் சிறப்பான ஆட்சியைப் பொறுக்க முடியாத தேவர்கள், திருமாலின் உதவியை நாடினர். வாமன (குள்ள) அவதாரம் எடுத்த அவர், மாவலியிடம் மூன்றடி நிலம் யாசகம் கேட்டார். மன்னனும் சரி என்றான். உத்தரவாதம் கிடைத்ததும், வாமன உருவத்திலிருந்து பூமிக்கும் ஆகாயத்திற்குமாக விஸ்வரூபம் எடுத்தார். ஓரடியால் புவி முழுவதையும் அளந்தார். இன்னொரு அடியால் வானத்தை முழுமையாக அளந்தார். கொடுத்த வாக்குறுதிப்படி மூன்றாவது அடிக்கான இடத்தை மாவலி கொடுத்தாக வேண்டும். அதனால், தன் தலையை நீட்ட, மூன்றாவது அடியை, மாவலி மன்னனின் தலையில் வைத்து, பூமிக்குள் அழுத்தினார் திருமால். மாவலி மண்ணுக்குள் புதைந்தான். அவன் ஆண்டுக்கொரு நாள் தனது மக்களை சந்திக்க வரும் நாளே ஓணம் பண்டிகை எனப்படுகிறது. மற்ற மாநிலத்தவர்கள் அவதார மகிமையை கொண்டாடுகிறார்கள். கேரள மக்கள் தங்கள் மண்ணை ஆண்ட மன்னனின் பெருமையைக் கொண்டாடுகிறார்கள்.
தூயா, நெய்வேலி
புளியந்தோப்பு அடுக்கு மாடிக் குடியிருப்புகள்?
முந்தைய ஆட்சியின் லட்சணம். இன்றைய ஆட்சிக்கு எச்சரிக்கை.