செ.அருள்செல்வன், புலியூர்
வரலாற்றைப் பற்றிய கவலையோ பயமோ இன்றைய அரசியல்வாதிகளுக்கு உண்டா?
அதெல்லாம் வரலாற்றில் நிலைபெற விரும்பும் வகையில் தொண்டாற்றும் அரசியல் தலைவர்களுக்குரியது. இந்தத் தேர்தலில் விதைத்து, அடுத்த தேர்தலுக்குள் அறுவடை செய்துவிடவேண்டும் எனத் திட்டமிட்டு செயல்படுகிற அரசியல்வாதிகளைப் பார்த்து வரலாறுதான் கவலையும் பயமும் கொள்கிறது.
வி.கார்மேகம், தேவகோட்டை
ரகுபதி கமிஷன் விசாரணையை உயர்நீதிமன்றம் முடக்கியுள்ள நிலையில், மற்ற விசாரணை கமிஷன்கள் என்னவாகும்?
அறியாதோரும் பேசுகின்ற சர்க்காரியா கமிஷனில் தொடங்கி, அண்மையில் அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி கமிஷன்வரை எல்லாவற்றிலும் அரசியல் உள்நோக்கம் உண்டு. அந்த உள்நோக்கத்தின் அடிப்படையில் விசாரணை நடைபெறும்போது, ஆட்சியாளர்களின் விருப்பங்களுக்காக மக்களின் வரிப்பணம் வீணாவது மட்டுமே விசாரணையின் முடிவாக இருக்கிறது. தி.மு.க. ஆட்சியில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டதில் உள்ள முறைகேடுகளை விசாரிப்பதற்காக ஜெயலலிதா ஆட்சியில் அமைக்கப்பட்ட ரகுபதி கமிஷன் ஆறு ஆண்டுகளாகி, ஜெ. மரணமடைந்தபிறகும் விசாரணையை முடிக்கவில்லை. இதற்காக செலவிடப்பட்டுள்ள தொகை 4,11,00,000. அதுபோலவே ஜல்லிக்கட்டு விசாரணைக்காக அமைக்கப்பட்ட ராஜேஸ்வரன் கமிஷனுக்கு 2,38,80,000 ஜெ. மரண மர்மத்தை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி கமிஷனுக்கு 77,44,000. தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் கமிஷனுக்கு 22,75,000 என மக்களின் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளது. முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கும் கமிஷன்களின் செலவுத்தொகை தொடர்பாக விசாரிக்கவே தனி கமிஷன் அமைக்கப்படவேண்டிய நிலைமை உள்ளது.
உமரி பொ.கணேசன், மும்பை-37
"எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்று சொல்லும் அளவுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ். அப்படி எதை தாங்கினார்?
அவருக்கும் அவர் வகிக்கின்ற பதவியால் தமிழ்நாட்டுக்கும் இழைக்கப்பட்ட அவமானத்தை!
சோ.பூ.அரசு, பெ.ம.கூடலூர்-639 202
அடிமை இந்தியாவில் பிரிட்டிஷார் வகுத்தளித்த சட்டங்கள், சுதந்திர இந்தியாவிலும் அப்படியே தொடருவது ஆட்சியாளர்களின் சௌகரியத்துக்குத்தானே?
பிரிட்டிஷார் வகுத்த சட்டத்தை மேம்படுத்தி, இந்தியாவுக்கேற்ப வலுவாக கட்டமைத்தவர் சட்டமேதை அம்பேத்கர். அதற்காக அந்தக் குழுவில் இருந்த சக சட்ட அறிஞர்களுடன் அவர் போராட வேண்டியிருந்தது. அப்படி உருவாக்கப்பட்ட சட்டம் 1950-ல் நடைமுறைக்கு வந்து, 1951-லேயே முதல் திருத்தத்தைக் கண்டது. இதுவரை 100-க்கும் அதிகமான முறை இந்திய அரசியல் சட்டம், தண்டனைச் சட்டம் உள்ளிட்டவை திருத்தம் செய்யப்பட்டுள்ளன. இருந்தும், இன்னும் சில சட்டங்கள் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் போடப்பட்ட தண்டவாளங்கள்போல அப்படியே இருக்கின்றன என்றால், ஆட்சியாளர்கள் அதில் சுகமாகப் பயணம் செய்கிறார்கள் என்று அர்த்தம். காலத்திற்கேற்ப ரயிலின் வடிவமைப்பும் மாறும்.
பி.மணி, வெள்ளக்கோவில்
ஜெ.வுக்கான சிகிச்சை பற்றி அப்பல்லோ வெளியிட்ட அறிக்கை, கலைஞருக்கான சிகிச்சை பற்றி காவேரி வெளியிடும் அறிக்கை -என்ன வேறுபாடு?
தலைவர்களும் நிர்வாகிகளும் எளிதில் செல்லக்கூடிய கோபாலபுரம் இல்லத்துக்கும், வாசலில் உள்ள பெரிய இரும்புகேட் அருகில் நின்று, உள்ளே என்ன நடக்கிறது என தெரியாமல் இருந்த போயஸ் கார்டன் வீட்டுக்குமான வேறுபாடு.
______________________________
ஆன்மிக அரசியல்
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
ஆன்மிக அரசியலால் சாமியார்கள் கை ஓங்குமா?
இந்திய அரசியலில் எப்போதுமே சாமியார்களின் கை ஓங்கித்தான் இருக்கிறது. முதல் குடியரசுத் தலைவர் ராஜேந்திரபிரசாத் தொடங்கி பலரும் சாமியார்களின் மடங்களையும் ஆசிரமங்களையும் நாடிச்செல்வது வழக்கமாக இருக்கிறது. இந்தியாவின் தலைநகர் டெல்லியா, காஞ்சியா என யோசிக்கின்ற அளவுக்கு குடியரசுத் தலைவர் பதவியில் இருந்தோரும், பிரதமர் பதவி வகித்தோரும் சங்கரமடத்துக்கு நேரடி வருகை தந்து அதன் செல்வாக்கை உயர்த்தினர். குடியரசுத் தலைவர்களில் கே.ஆர்.நாராயணனும், பிரதமர்களில் வி.பி.சிங்கும் மட்டுமே இதற்கு விதிவிலக்கு. ஒரு நேரத்தில், காஞ்சி சங்கர மடாதிபதிகளுக்கு மரியாதை செலுத்திய முன்னாள் முதல்வர் செல்வி.ஜெயலலிதா, பின்னர் அதே மடாதிபதிகளை சங்கரராமன் கொலை வழக்கில் சிறையில் அடைத்து, காஞ்சி மடத்தின் செல்வாக்கைத் தவிடுபொடியாக்கினார். ஆனாலும் அந்த மடம் உள்பட இப்போது பல மடங்களும் ஆசிரமங்களும் கார்ப்பரேட் சாமியார் நிறுவனங்களும் இந்திய அரசியலில் செல்வாக்குடன்தான் இருக்கின்றன. இந்திராகாந்தி ஆட்சியில் தீரேந்திர பிரம்மச்சாரி, நரசிம்மராவ் ஆட்சியில் சந்திராசாமி போன்றோர் முக்கிய பங்காற்றினர். பா.ஜ.க.வின் வளர்ச்சிக்குப் பிறகு சாமியார்கள் நேரடியாகவே அரசியலில் ஈடுபட்டு, தற்போது உத்தரபிரதேசத்தின் முதல்வர் பொறுப்புவரை வரமுடிந்திருக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களுக்கு இணையான கார்ப்பரேட் வியாபாரம், சேவை என்ற பெயரில் ஆன்மிகத்துக்குத் தொடர்பில்லாத அறிவியல் மருத்துவம், இயற்கை வளங்களை அழித்து இயற்கை வழியிலான வாழ்க்கை என்ற பெயரில் தியான மண்டபங்கள் இப்படி எல்லா வகையிலும் ஜனாதிபதி -பிரதமரின் நேரடித் தொடர்புடன் சாம்ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருக்கும் சாமியார்களுக்கு தனியாக ஆன்மிக அரசியல் எதற்கு?