சீனிவாசன், கண்டனூர், சிவகங்கை
தோற்றாலும் ஜெயித்தாலும் பா.ஜ.க.வில் பதவி கிடைக்கிறதே?
தமிழிசை, எல்.முருகன், அண்ணாமலை இவர்களை மனதில் வைத்து, ஏன் என் வயித்தெரிச்சலைக் கிளறுகிறீர்கள் எனக் கேட்கிறாராம் ஹெச்.ராஜா.
ஏ.எஸ்.நடராஜன், சிதம்பரம்-1
திரைப்படங்களில் பலரும் பாடல்கள் எழுதியிருந்தாலும் கண்ணதாசனுக்கு மட்டும் தனி இடம் இருப்பது எப்படி?
தமிழ்த் திரைப்படங்களில் பாடல் எழுதிய ஒவ்வொரு கவிஞரும் தனித்துவமானவர்கள். திரைமொழி என்பது கவித்துவமான எளிமையுடன் இருக்கவேண்டும். சிட்டி முதல் பட்டி வரையிலான ரசிகர்களை ஒட்டுமொத்தமாக ஈர்க்க வேண்டும். அப்போதுதான் அந்தப் பாடலை ஒவ்வொருவரின் உதடுகளும் முணுமுணுக்கும். முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜபாகவதர் காலம் முதல், எப்போதும் சூப்பர் ஸ்டாரான ரஜினி காலத்திற்கும் அதற்குப் பிந்தைய காலத்திற்கும் இதுதான் திரை இலக்கணம். இந்த இலக்கணத்தை நன்கறிந்து, இலக்கியத்தையும் அனுபவத்தையும் சரியான விகிதத்தில் கலந்து எழுதியவர் கவியரசு கண்ணதாசன். ‘"சட்டி சுட்டதடா... கை விட்டதடா'’ என்று தொடங்குகின்ற பல்லவி, கிராமப்புறங்களில் வாழும் எளிய மக்களின் மொழி. அதனால் எல்லா உதடுகளும் அந்த பல்லவியை இயல்பாக முணுமுணுக்கும். அதனைத் தொடர்ந்து வரும் சரணங்களில் ஒன்றில், “"எறும்புத் தோலை உரித்துப் பார்க்க யானை வந்ததடா... நான் இதயத் தோலை உரித்துப் பார்க்க ஞானம் வந்ததடா'”என்று சிந்தனையின் உச்சத்தைத் தொட்டிருப்பார். பாமரர்களின் மொழியில் தொடங்கி, பண்டிதர்களுக்கும் எட்டாத உயரத்தை அடையும் கலை அவருக்கு கைவந்ததால்தான் "கவியரசு' என புகழ் பெற்றார். அவரைத் தொடர்ந்து "கவிப்பேரரசு' உள்ளிட்ட பல பாடலாசிரியர்களால் தமிழ்த் திரைப்பாடல்கள் இலக்கியச் சிறகை விரித்துப் பறக்கின்றன.
நித்திலா, தேவதானப்பட்டி
அண்மையில் திரையில் ரசித்துப் பார்த்தது?
சின்னத்திரையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவை! பாரம்பரியப் பழக்கங்களையும் அறிவியல் தொழில் நுட்பங்களையும் இணைத்து வாழப் பழக்கப்பட்ட ஜப்பானியர்கள், அதே பாணியில் தொடக்க விழாவை அசத்தலாக நடத்தியிருந்தனர். பாரம்பரிய வீடு கட்டும் முறையிலான ஒலிம்பிக் சின்ன வடிவமைப்பும், ஆயிரக்கணக்கான ட்ரோன்களைக் கொண்டு வானத்தில் உருவாக்கிய உலக வரைபடத்துடனான பூமிப்பந்து வெகு அசத்தல். இளம் வீரர்கள் -மூத்த வீரர்கள் -மாற்றுத்திறனாளி -மருத்துவப் பணியாளர்கள் என அனைத்து தரப்பினரின் கைகளிலும் பயணித்து, ஒரு பெண் கையால் ஏற்றப்பட்ட ஒலிம்பிக் சுடர் அபாரம்.
பி.ராஜா, வாணியம்பாடி
மேகதாதுவில் கர்நாடகா அணை கட்டுவதை எதிர்த்து நடந்த தமிழக அனைத்துக் கட்சிகள் கூட்டத்திலும், டெல்லி சென்ற அனைத்துக் கட்சிக் குழுவிலும் பங்கேற்காத எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் திரும்பப் பெறப்படுமா?
அ.தி.மு.க ஆளுங்கட்சியாக இருந்தபோது அனைத்துத் துறை சம்பந்தமாகவும் தன் விருப்பத்திற்கேற்ப பதில் தந்தவர் ஜெயக்குமார். அதனை அனுமதித்திருந்தார் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இப்போது எதிர்க்கட்சித் தலைவராக உள்ள நிலையிலும் அதே ஜெயக்குமாரை ஆலோசனைக் கூட்டத்திலும், டெல்லிக்கு சென்ற குழுவிலும் பங்கேற்கச் செய்திருக்கிறார். 1989-90-ல் காவிரி பிரச்சினைக்காக தி.மு.க அரசு அமைத்த அனைத்துக் கட்சிக் குழுவின் டெல்லி பயணத்தில் அ.தி.மு.க பங்கேற்காதபடி மொத்தமாகப் புறக்கணித்தவர் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதா. அதற்கு இது பரவாயில்லை.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
அமைச்சர்களின் அறைகளில் உதயநிதி படம் என்பதெல்லாம் ஏற்கக்கூடியதா?
தவிர்க்க வேண்டியதும் தடுக்க வேண்டியதுமாகும். அரசியலில் எந்தக் கட்சியில் இருந்தாலும் பதவி வாங்கி விட முடியும் என நினைப்பவர்கள், முன்பு இருந்த கட்சியின் தலைமைக்கு விசுவாசத்தைக் காட்ட ஜெயலலிதா பெயரில் கல்லூரி தொடங்கி நடத்துவதும், இப்போதுள்ள கட்சியின் தலைமைக்கு விசுவாசத்தைக் காட்ட, தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் உதயநிதி படத்தை வைப்பதுமாக லாபக் கணக்கு போடுகிறார்கள். தனிப்பட்டவர்களின் இத்தகைய சுயநலம் கலந்த விசுவாசம், ஆட்சிக்கும் கட்சிக்கும் நல்லதல்ல. மக்களோடு பயணிக்கும் உதயநிதியின் எதிர்கால வளர்ச்சிக்கும் தேவையற்ற ஆணியே.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைக்க, காங்கிரஸ் கட்சி திறந்த மனதுடன் இருப்பதாக பிரியங்கா காந்தி கூறுகிறாரே?
பா.ஜ.கவுக்கு எதிரான கூட்டணியை அமைக்க வேண்டிய கட்டாயத்தைக் காங்கிரஸ் கட்சி இப்போதுதான் முழுமையாக உணர்ந்திருக்கிறது. பா.ஜ.க.வுக்கு மாற்றாகத் தங்களால் ஆட்சி அமைக்க முடியும் என நம்புகிற மாயாவதியும் அகிலேஷ் யாதவும் என்னசெய்யப் போகிறார்கள் என்பதைப் பொறுத்தே உ.பி. தேர்தல் முடிவுகள் அமையும்.