செந்தில்குமார். எம் சென்னை - 78

தே.மு.தி.க.வை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்வதாக பிரேமலதா விஜயகாந்த் சொல்வது?

இதுவரை கொண்டு போன கட்டங்கள் என்ன விளைவை ஏற்படுத்தின எனப் பரிசீலித்துப் பார்த்துவிட்டு, அடுத்த கட்டத்துக்கு கொண்டு போவது அரசியலில் தாக்குப்பிடிக்க உதவும். கேப்டன் விஜயகாந்த்தின் பெயரைக் காப்பாற்றும்.

மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.

Advertisment

ஆவின் துறையில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பெரும் ஊழல் செய்திருக்கிறாரா?

nn

ராஜேந்திர பாலாஜி மட்டுமல்ல, அவருக்கு அமைச்சர் பதவி கொடுத்த ஜெயலலிதாவும் ஊழலில் முதன்மையானவர்தான் என உச்சநீதிமன்றத்திலேயே உறுதி செய்யப்பட்டது. ஆனாலும், ஜெயலலிதாவுக்கு குடும்பம் இல்லை என்பது சாதகமாக அமைந்தது. ஒன்றரைக் கோடிக்கு ஆவின் ஸ்வீட்டை ஆட்டையப் போட்ட ராஜேந்திரபாலாஜிக்கும் குடும்பம் கிடையாது. மனைவி -பிள்ளைகள் என குடும்பம் கொண்ட லாலுபிரசாத் யாதவ்வோ, மாட்டுத்தீவன ஊழலில் சிறைப்படுத்தப்பட்டு ஜாமீனுக்குப் போராட வேண்டியிருந்தது. இந்தியாவின் டிசைன் அப்படி.

Advertisment

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

காலம் காலமாக "ஒன்றியம்' என்றாலே கிராமப்புறங்களில் குறிப்பிட்ட பகுதியை "ஊராட்சி ஒன்றியம்' என அழைக்கப்பட்டு வரும் நிலையில், திடீரென அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைந்து ஆட்சி செய்யும் அரசை, அந்தக் குறுகிய பொருள் கொண்ட ஒன்றியத்தை மத்திய அரசுடன் இணைத்து "ஒன்றிய அரசு' என மாற்றி அழைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது...?

எதுவும் காலம் காலமாக அழைக் கப்படுவதில்லை. காலத்திற்கேற்றபடிதான் அழைக்கப்படுகின்றன. பஞ்சாயத்து யூனியன் என்று சொல்லி வந்ததை, திராவிட இயக்க ஆட்சிக்குப் பிறகுதான் ஊராட்சி ஒன்றியம் -ஒன்றியப் பெருந் தலைவர் எனப் பரவலாக அழைக்கத் தொடங்கினார்கள். இந்தியாவை ஆளும் அரசை ஒன்றிய அரசு எனக் குறிப்பிடு வது குறுகிய நோக்கம் அல்ல. மாநிலங் களுக்கு அதிகாரமே இல்லை என்பது போல கல்வி, கலை, வரி வருவாய் என அனைத்து நிலைகளிலும் நாடாளுமன்றப் பெரும்பான்மையை வைத்துக்கொண்டு அதிகாரம் செலுத்தும்போது, இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்ற அரசியலமைப்புச் சட்டத்தின் வரிகளை உரக்கச் சொல்லும் எதிர்வினைதான், ஒன்றிய அரசு.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் தமிழ்நாடு அரசு தேவையற்ற நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது என்கிறதே பா.ஜ.க?

நீட் தேர்வு வந்ததற்கு, மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசும் அதனுடன் கூட்டணியில் இருந்த தி.மு.க.வும்தான் காரணம் எனச் சொல்லிக் கொண்டி ருந்தன பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும்! இப் போது நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தி.மு.க அரசு அமைத்ததும் அதனை எதிர்த்து நீதிமன்றம் செல்கிறது பா.ஜ.க.! இதன் மூலம் நீட் தேர்வு விவகாரத்தில் நாடகம் நடத்தி, வேடம் கலைந்து நிற்கிறது பாரதிய ஜனதா கட்சி.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77.

"ஜெ' பல்கலைக்கழகம்... "கொடநாடு' எஸ்டேட் என்ன ஆகும்?

சட்டம் தன் கடமையை சரியாகச் செய்யட்டும்.

எஸ்.கீர்த்திவர்மன், புதுச்சேரி

ஸ்டான் ஸ்வாமி இறப்புக்கு பொறுப்பு யார்?

அதிகார அம்புகளை தங்கள் விருப்பப்படி வேட்டைக்குப் பயன்படுத்துபவர்கள்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி மாவட்டம்

"முதல்வர் மு.க.ஸ்டா-ன், எம்.கே.தியாகராஜ பாகதவர் பேரன் சாய்ராம் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவியும் வீடு ஒதுக்கீடும் செய்துள்ளது குறித்து?

dd

தமிழ்த்திரையுலகின் "முதல் சூப்பர் ஸ்டார்' -திரையரங்கில் ரிலீசாகி மூன்று தீபாவளிகளைக் கண்ட திரைப்படத்தின் நாயகன். "ஏழிசை வேந்தர்' எனப் பாராட்டப்படும் குரல்வளம் கொண்டவர். கன்னத்தைக் கிள்ளிப் பார்க்க ஆசைப்படும் ஆண்-பெண் ரசிகர் களைக் கொண்டவர். எம்.கே.தியாகராஜ பாகவதர். அப்படிப்பட்டவர் லட்சுமி காந்தன் என்பவரின் கொலை வழக்கில் சிக்கி சிறைப்பட்டார். அது அவரது திரைவாழ்வையும் அகவாழ்வையும் பெரியளவில் பாதித்தது. கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனும் பாகவதருடன் அந்த வழக்கில் சிறைப்பட்டார். பிரிட்டிஷ் ஆட்சியில் லண்டன் ப்ரிவி கவுன்சில் வரை சட்டரீதியாகப் போராடித்தான் அவர்களை மீட்க வேண்டியிருந்தது. தமிழ்நாட்டு கலைஞர்களை மீட்க வேண்டும் என்பதற்காகத் தந்தை பெரியார் வழக்கு நிதியாக தலைக்கு ஒரு ரூபாய் கொடுங்கள் என இயக்கத்தினரிடமும் பொதுமக்களிட மும் நிதி திரட்டினார். திராவிட இயக்கம் அன்று தொட்டு இன்று வரை எம்.கே.தியாகராஜபாகவதரின் திறமையை மதித்து, அவர் தரப்புக்கு ஆதரவாக இருக்கிறது என்பதன் வெளிப்பாடுதான் எம்.கே.டி. குடும்பத்தாருக்கு முதல்வர் அளித்துள்ள நிதியுதவி. எம்.கே.டி.க்கும் மு.க.ஸ்டாலினுக்கும் ஒரே நாளில்தான் பிறந்தநாள், மார்ச் 1.