மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி

கேள்வி கேட்பவர்கள், பதில் சொல்பவர்கள் இருவரில் யாருக்கு மூளை அதிகம் வேலை செய்யும்..?

தீக்குச்சி உரசினால்தான் அடுப்பு எரியும். இரண்டிலுமே இருப்பது நெருப்புதான். தணல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!

செந்தில்குமார். எம் சென்னை - 78

Advertisment

தான் தமிழ் மக்களுக்காக சிறையில் விரதம் இருந்ததாக சசிகலா சொல்வது ஆச்சரியமாக உள்ளதே?

அவர் சிறைக்குச் சென்றதே தமிழர்களுக்கான தியாகம். சிறைவாசக் காலத்தில் ஷாப்பிங் போனது தமிழ் மக்கள் மீதான பரிவு. ரிலீஸ் ஆகி வந்து ஓய்வெடுத்தது தமிழ்நாட்டு நலனுக்கான தியானம். இப்போது கட்சி நிர்வாகிகளுடன் பேசி ஆடியோ வெளியிடுவது அனைத்தும் தமிழ் மந்திரம். கலர் கலரா ரீல் விடுவது என்கிற கவுண்டமணி காமெடிதான் நினைவுக்கு வருகிறது. சசிகலாவைப் போலவே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர் ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலா. 10 ஆண்டு சிறைத்தண்டனை முடித்து வெளியே வந்ததுமே அவர் விவசாயிகளைத் தொடர்ந்து சந்திக்கும் செயல்திட்டத்தை வகுத்திருக்கிறார். அவர்கள்தான் அவரது லோக் தளம் கட்சியின் வாக்குவங்கி.

சி. கார்த்திகேயன், சாத்தூர்

Advertisment

"சட்ட மேலவை அமைப்போம்' என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றது நிறைவேற சாத்தியக்கூறுகள் உண்டா?

mm

1986-ல் எம்.ஜி.ஆர். ஆட்சியில் மேலவை கலைக்கப்பட்டது. அ.தி.மு.க சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்ட நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா ஏற்கனவே திவால் நோட்டீஸ் கொடுத்திருந்தது சர்ச்சை ஆனதால் அவர் எம்.எல்.சி. ஆவது தடைப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க அதிகளவில் வெற்றி பெற்றதால் அதற்கான மேலவை பிரதிநிதித்துவமும் கிடைக்கும் வாய்ப்பு இருந்தது. இந்த இரண்டு காரணங்களையும் முன்வைத்து சட்டமன்ற மேலவையைக் கலைத்தது எம்.ஜி.ஆர். அரசு. அதன்பிறகு, 1989, 1996, 2006 என தி.மு.க ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் மேலவையை மீண்டும் கொண்டு வருவோம் என வாக்குறுதி அளித்து மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முழுப்பலனைத் தரவில்லை. ஒன்றிய அரசின் ஒத்துழைப்பின்றி 2021-லும் மேலவையைக் கொண்டுவர முடியாது. ராஜாஜி, அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ம.பொ.சி., குன்றக்குடி அடிகளார், புலவர் புலமைப்பித்தன் உள்ளிட்ட பலர் ஒவ்வொரு கட்டத்திலும் மேலவையில் எம்.எல்.சி.களாக இருந்திருக்கிறார்கள். அறிவார்ந்தோர் அவை எனப்படும் மேலவையை, பதவி கிடைக்காதவர் களுக்கான புகலிடமாக மாற்றாமல் இருந்தால், மேலவை மீண்டும் அமைவது தமிழ்நாட்டுக்கு சிறப்பு சேர்க்கும்.

பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி மாவட்டம்

மாநில அரசின் மக்கள்நலத் திட் டங்கள் மக்கள் மனங்களில் சென்ற டைவதுபோல், மத்திய அரசின் திட்டங் கள் சென்றடைவது இல்லையே ஏன்?

யாருக்கு என்ன தேவை என்பதைப் பொறுத்தே மக்கள் நலத் திட்டங்களுக்கு ஆதரவு கிடைக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கு மாநில அரசின் மூலம் கலர் டி.வி., மிக்சி, கிரைண்டர், லேப்டாப் போன்றவை கிடைத்துள்ளன. கல்வி -வேலைவாய்ப்பும் பரவலாகக் கிடைத்துள்ளது. வடமாநிலங்கள் பலவற்றில் இப்போதுதான் வீடுகளுக்கு கழிப்பறையே அரசின் திட்டம் மூலம் கிடைத்து வருகிறது. மோடி அரசின் கழிப்பறைத் திட்டம், அது தேவைப்படும் மாநிலங்களில் ஆதரவைப் பெறும். வீடு -கழிப்பறை ஆகிய வசதிகளை ஏற்கனவே பெற்றுவிட்ட மாநிலங்களில் அந்தத் திட்டம் வாக்குகளாக மாறாது. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் சொன்னதுபோல, மாநிலங்களில் உள்ள வாக்காளர்கள்தான் ஒன்றிய அரசை தேர்ந்தெடுக்கிறார்கள். ஒன்றியத்திற்கென தனி வாக்காளர்கள் என்று யாருமில்லை.

நித்திலா, தேவதானப்பட்டி

mm

யூரோ கோப்பை கால்பந்தாட்டப் போட்டி, விம்பிள்டன் டென்னிஸ் போட்டி இவை இந்தியர்களின் இயல்பான நேரத்துக்கு மாறாக இருந்தாலும் வெகுநேரம் பார்க்கும் ரசிகர்களும் இருக்கிறார்களே? விளையாட்டு என்பது அதன் மீது ஆர்வம் உள்ளவர்களுக்கு விளையாட்டானதல்ல. உற்சாகம்... ஊக்கம்... உந்துசக்தி அனைத்தையும் விளையாட்டு தரும். அது விளையாடு பவர்களுக்கு மட்டுமல்ல, அதனை ஆர்வமாகப் பார்க்கின்ற வர்களுக்கும்தான். கால்பந்து போட்டிகளில் இந்தியா பெரியளவில் வெற்றி பெறுவதில்லை. விம்பிள்டனில் பங்கேற்ற இந்தியர் களும் குறைவுதான். ஆனால், அந்த விளையாட்டுகள் தரும் உணர்வு எல்லா டினருக்கும் பொதுவானது. கிரிக்கெட், கபடி எல்லாமும் அப்படித்தான். ஆட்டத்தை ரசிக்க ஆரம்பித்துவிட்டால், தேச எல்லைகளைக் கடந்த மனிதனை மனது கண்டடையும்.

வாசுதேவன், பெங்களூரு

புலிக்கு தண்ணிக்குள் தண்ணி காட்டும் குட்டி வாத்து வைரல் வீடியோ?

எல்லாரும் எல்லா நேரத்திலும் பலசாலிகளாக இருந்துவிடமுடியாது. தரையில் புலிப் பாய்ச்சல் காட்டலாம். தண்ணீரில் வாத்துதான் புலி.