வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17
ஓர் உயிரைக் காப்பாற்ற ராணுவ ஹெலிகாப்டரை பயன்படுத்தும் நிகழ்வு இதற்கு முன் நடந்ததில்லையா? எதில் அரசியல் பண்ணுவது என்ற விவஸ்தை அரசியல்வாதிகளுக்கு இல்லாமல் இருப்பது ஏன்?
ஓ.பி.எஸ். தம்பிக்கு ராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டதை விமர்சிப்பது விவஸ்தை கெட்ட அரசியலாகவே இருக்கட்டும், ஓகி புயலின்போது தவித்த மீனவர்களைக் காப்பாற்ற அந்த ராணுவ ஹெலிகாப்டர்களுக்கும் அதற்கு உத்தரவிடக்கூடியவர்களுக்கும் "விவஸ்தை' இல்லாமல் இருந்தது ஏன் என்பதுதான் விமர்சனத்திற்கான காரணம்.
திராதி, துடியலூர், கோவை
"2001 செப்டம்பரிலேயே தமிழக முதல்வராகி இருக்கலாம்' என்ற தினகரனின் அசால்ட் பேச்சு?
டான்சி வழக்கினால் ஜெயலலிதாவின் பதவி பறிக்கப்பட்ட அந்த நிலையில், சசிகலா குடும்பத்தினரில் யாரையுமே முதல்வராக்கியிருக்க மாட்டார் ஜெ. ஆனால், சசிகலா கை காட்டியவர்களுக்கு வாய்ப்பு என்பதுதான் அ.தி.மு.க. நிலவரம். அந்த வகையில், தினகரனுக்கு நெருக்கமான ஓ.பி.எஸ். முதல்வரானார். நான்தான் "கிங் மேக்கர்' என்று தினகரன் சொல்லிக் கொள்ளலாம். அவர் கிங் அல்ல!
உமரி பொ.கணேசன், மும்பை-37
முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பாகிஸ்தானில் ஆட்சியைப் பிடித்துள்ளாரே, நம் நாட்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் பிரதமர் ஆசை வருமா?
நடிகர்களுக்கு முதல்வர் ஆசை மிகுந்துவிட்ட நாட்டில், கிரிக்கெட் வீரர்களுக்கு பிரதமர் ஆசை வரக்கூடாதா? கீர்த்தி ஆசாத், சித்து, அசாருதீன் போன்ற இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு அரசியல் ஆசை ஏற்பட்டு ஏதேனும் ஒரு கட்சியின் சார்பில் களமும் கண்டிருக்கிறார்கள். ஆல்ரவுண்டரான பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் 1996-ல் அரசியல் கட்சி ஆரம்பித்து தேர்தல் களங்களைத் தொடர்ச்சியாகக் கண்டு சிறுவெற்றியில் தொடங்கி, எதிர்க்கட்சி வரிசைக்கு முன்னேறி, இப்போது அதிக இடங்களைப் பிடித்த கட்சியின் தலைவராக இருக்கிறார். இப்போதும்கூட மற்ற கட்சிகளின் ஆதரவுடன்தான் அவரால் ஆட்சி அமைக்க முடியும். இம்ரான் அளவுக்கு கடும் போராட்டம் நடத்தும் அரசியல் ஆசையுடன் இந்திய கிரிக்கெட் வீரர்கள் யாருமில்லை. அதற்கான சூழலும் இங்கு இல்லை.
நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
பேரறிஞர் அண்ணா தனது வெளிநாட்டுப் பயணத்தில் போப்ஆண்டவரை சந்தித்து திருக்குறளைத் தந்தார். ருவாண்டா நாட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி 200 பசுக்களை வழங்கியிருக்கிறாரே?
மாடு வளர்ப்பும் மாட்டுக்கறி சாப்பிடுவதும் அதிகமுள்ள ருவாண்டாவுக்கு பசுக்களை வழங்கியிருக்கிறார் மோடி. பேரறிஞர் அண்ணாவோ போப்பாண்டவரிடம் திருக்குறளை மட்டும் வழங்கவில்லை. போர்ச்சுகல் நாட்டின் பிடியில் இருந்த கோவா மாநிலத்தின் விடுதலைக்காகப் போராடி சிறைப்பட்டிருந்த ரானடே என்பவரை விடுவிக்கவேண்டும் என போப்பிடம் கோரிக்கை வைத்து அதனை நிறைவேற்றினார். ரானடே சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபோது, அண்ணா உயிருடன் இல்லை. எந்த நன்றியும் எதிர்பாராமல் மற்றவர்களின் உரிமைப் போராட்டத்திற்கு குரல் கொடுத்தவர் அன்றைய முதல்வர். பசுமாட்டிலும் விளம்பரம் தேடுபவர் இன்றைய பிரதமர்.
ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி
"நடிகர்களைவிட அதிக வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள்' என்கிறாரே நடிகர் சூர்யா?
நடிகர்களின் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கூட கிடைக்கும். இன்றைய நிலையில், விவசாயிகளின் வியர்வை ஆறாகப் பெருகினாலும் சல்லிக்காசுகூட கிடைப்பதில்லை.
____________________
ஆன்மிக அரசியல்
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை.
மேட்டூர் அணையிலிருந்து அபரிமிதமான நீரை திறந்துவிடும்போது, இந்துமத முறைப்படி பூஜை செய்வது மதச்சார்பற்ற அரசுக்கு ஏற்புடையதா?
தண்ணீருக்கு எந்த மதமும் சாதியும் கிடையாது. அது எல்லா மதத்தினரின் தாகத்தையும் தணிக்கும். அதனால் எல்லா சாதியினரின் நிலங்களும் செழிக்கும். மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டாலும், அது கடைமடைப் பகுதிவரை சென்றாலும் ஆங்காங்கே மலர் தூவி வரவேற்பது வழக்கமாக இருக்கிறது. மலர்களைப் பயன்படுத்துவது பெரும்பாலும் எல்லா மதங்களிலும் அனுமதிக்கப்பட்டதுதான். அதே நேரத்தில், இந்துமத நம்பிக்கைக்குரிய சடங்குகள், வழிபாடுகளை மட்டும் நடத்துவது என்பது மதச்சார்பற்ற அரசுக்குரிய நெறிமுறையல்ல. மேட்டூர் அணையை இந்த முறை தமிழ்நாட்டின் முதலமைச்சரே நேரடியாக திறந்து வைத்தது முதல் நிகழ்வாகும். இதுபோன்ற நிகழ்வுகளில் ஒரு மதத்திற்குரிய பூசைகள் மட்டும் செய்வது, அரசின் பாரபட்சமான அணுகுமுறையைக் காட்டுவதாக அமையும். இதற்காகத்தான் அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது 1968-ஆம் ஆண்டு வெளியிட்ட அரசாணையில் அரசு அலுவலகங்களிலும் நிர்வாகங்களிலும் எந்த மத அடையாளங்களும் கடவுள் படங்களும் இருக்கக்கூடாது என்று உண்மையான மதச்சார்பற்றத் தன்மைக்கான அரசாணையை வெளியிட்டார். ஆனால், அவருக்குப் பிறகு தொடர்ந்த ஆட்சிகளில் ஆங்காங்கே மதச் சடங்குகளுடன் அரசு கட்டட அடிக்கல் நாட்டு விழாக்கள் நடந்தன. பேருந்துகளில் டிரைவர்-கண்டக்டரின் இஷ்ட தெய்வங்களின் படங்கள் மாட்டப்பட்டன. ஜெயலலிதா ஆட்சி அமைந்ததும் அரசு சார்பில் வெளிப்படையாகவே இந்துமத வழிபாட்டு முறைகள் கடைப்பிடிக்கப்பட்டு இன்றும் தொடர்கின்றன. ஆன்மிக அரசியலோ, பகுத்தறிவு அரசியலோ ஓட்டு அரசியல் என்று வந்துவிட்டால் எல்லாரையும் எல்லாவற்றையும் வாக்குகளாக மாற்ற வேண்டியிருக்கிறது.