Skip to main content

மாவலி பதில்கள்

வீ.ஹரிகிருஷ்ணன் புத்தூர், திருச்சி-17

தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் வந்துவிட்டதே, இதனால் யாருக்கு பலன், யாருக்கு பயம்?

பலன் பெற்று வருபவர்களுக்கு பயம் ஏற்படாவிட்டால், லோக் ஆயுக்தா சட்டத்தால் எந்தப் பலனும் இல்லை.

எம்.முகமது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

சென்னை -பரங்கிமலை ரயில் விபத்தில் 5 பேர் பலியானதற்குக் காரணம் பயணிகளின் கவனமின்மையா, ரயில்வேயின் அலட்சியமா?

mavalianswers


கூட்ட நெரிசல்-படிக்கட்டுப் பயணம் இவற்றால் ரயில் விபத்துகளும் பயணிகள் மரணமும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதில் பரங்கிமலை விபத்தில் 5 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவிட்டது. மாநகரத்தின் மக்கள் தொகைக்கேற்ப பொது போக்குவரத்து வசதிகள் அதிகப்படுத்தப்படாமல் இருப்பதும், அதில் பேருந்துக் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதும் மின்சார ரயிலின் கூட்ட நெரிசலை அதிகப்படுத்தி, படிக்கட்டுப் பயணத்தால் விபத்துகளை உண்டாக்குகின்றன. போக்குவரத்து விதிகள் குறித்த பயணிகளின் அலட்சியமும் இதில் அடங்கும் என்றாலும், கோர விபத்துகளுக்கான முதன்மைக் காரணம் ரயில்வே துறையை நிர்வகிக்கும் அரசாங்கம்தான்.


மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை

எல்லாரும் வங்கியில் கணக்கு தொடங்க வேண்டுமென வலியுறுத்தும் அரசு, எல்லாருக்கும் ரேஷன் கடையில் உணவுப் பொருள் கிடைப்பதை உறுதிப்படுத்துவதில்லையே?

"பசியெடுத்தால் பணத்தைச் சாப்பிடு' என்கின்றன நம்மை ஆளும் அரசுகள். காகிதத்தைச் சாப்பிடும் கழுதைகளாக மக்களை நினைக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.ஆர்.ஜெயச்சந்திரன், திருச்சி-25

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.பிக்கள் வாக்களிக்க, அ.தி.மு.க. அமைச்சர்கள் பா.ஜ.க.வை விமர்சிப்பது எப்படி இருக்கிறது?

அரசியலுக்கே உரிய இலக்கணமாக இருக்கிறது. பேச்சு எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும், செயல் எங்களுக்குச் சாதகமாக இருந்தாகவேண்டும் என டெல்லி முதலாளிகள் சொன்னதை நிறைவேற்றித் தந்திருக்கிறார்கள் தமிழ்நாட்டுச் சேவகர்கள்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

ஆந்திராவில் அண்ணா கேன்டீன் ஆரம்பித்து சாப்பாடு, சிற்றுண்டி இவையெல்லாம் 5 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதே?

தமிழ்நாட்டின் அம்மா உணவகம்தான் ஆந்திராவுக்கு முன்னோடி. ஜெ. ஆட்சிக்காலத் திட்டங்களில் ஏழைகளுக்கு மட்டுமின்றி, நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினருக்கும் பலன் தந்த திட்டம் "அம்மா உணவகம்'. உயர்தர சைவ ஓட்டல்களில் ஒருவேளை டிபன் சாப்பிட ஒரு மாத சம்பளத்தை எழுதி வைக்கவேண்டிய அளவுக்கு விலைவாசி உயர்வு இருந்த சூழலில், அம்மா உணவகத்தின் மலிவு விலை உணவு பெரும் வரவேற்பைப் பெற்றது. ஜெ.வுக்கு முன்பே தி.மு.க. ஆட்சியில் உயர்தர சைவ ஓட்டலிலும் மலிவு விலையில் மதிய சாப்பாடு போடவேண்டும் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. ஓட்டல் அதிபர்களோ, கோபாலபுரத்தின் கொல்லைப்புற வாசல் வழியாக கிச்சன் கேபினட்டைப் பிடித்து அந்தத் திட்டத்தை தகர்த்துவிட்டார்கள். ஜெ ஆட்சியில் போயஸ்கார்டன் பெருங்கதவு வழியாக யாரும் நுழைய முடியவில்லை. தற்போது தமிழ்நாட்டில் அம்மா உணவகங்கள் தரம் குறைந்துவரும் நிலையில், தமிழ்நாட்டைப் பார்த்து ஆந்திரா வழிமொழிந்திருக்கும் அண்ணா கேன்டீன் பசியாற்றட்டும்.


ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி

"மகான்களைத் தோற்றுவிக்கும் ஞானபூமியாக தமிழகம் திகழ்கிறது' என்கிறாரே முதல்வர்?

தெர்மாகோலால் அணையை மூடிய மகான், ஆற்றில் வந்த ரசாயனக்கழிவை சோப்பு நுரை என்ற மகான், எதிர்க்கட்சித்தலைவர் வெளிநாடு சென்றதால் மழை பெய்தது என்ற மகான் என ஏராளமான "மகான்கள்' அண்மைக்காலமாக தமிழகத்தில் தோன்றியிருக்கிறார்களே.

_______________________
ஆன்மிக அரசியல்

எஸ்.பூவேந்தஅரசு, பொன்நகர், சின்னதாராபுரம்

"ஆசை அறுமின்கள், ஆசை அறுமின்கள் ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்' என்ற பாட்டு கடவுள் மீதும் பற்று வைக்கக் கூடாது என்கிறதே?

பற்று வைக்க முடியாவிட்டால் என்ன, ஆன்மிகவாதிகளுக்கும் இறை நம்பிக்கை என்பது நல்ல வரவுதானே! மெய்ஞானியரான திருமூலர் சைவநெறிப்படி இறை நம்பிக்கை கொண்டவராயினும், அவருடைய பாடல்களில் வாழ்வியல் நெறியே முதன்மை பெற்றிருக்கும். அதனால்தான் "ஈசனோடாயினும் ஆசை அறுமின்கள்' எனத் தனது திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார். இதுதான் தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு மிக்க ஆன்மிகமாகும். வடமொழி வேதங்களை எதிர்கொண்ட தமிழ்மறைகள் பலவும் தனித்துவமான ஆன்மிக முறையை சுட்டிக்காட்டுகின்றன. "ஆசைப் படப் பட ஆய் வரும் துன்பங்கள், ஆசை விட விட ஆனந்தம் ஆமே' என்று அந்தப் பாடல் நிறைவடைகிறது. இறைவன் திருவடி உள்பட எதன் மீது ஆசைப்படத் தொடங்கினாலும், அந்த ஆசை நிராசையாகும்போது துன்பங்களே நிறையும். ஆசையைத் துறக்க துறக்க ஆனந்தம் அதிகமாகும், ஆசை கொள்ளும்போது எதிர்பார்ப்பு அதிகமாகும். எதிர்பார்ப்பு நிறைவேறாவிட்டால் ஏமாற்றத்தில் வாழ்க்கை தொலைந்துபோகும். வாழ்வைத் தொலைத்துவிட்டு, வேறு எதன் மீது ஆசைப்படப்போகிறாய் எனக் கேட்காமல் கேட்கிறார் திருமூலர். ஆசையே துன்பத்துக்கு அறிகுறி என்பது புத்தரின் தத்துவம். சமஸ்கிருத வேதமரபுக்கு எதிராக இந்தியத் துணைக்கண்டத்தின் வடக்கிலும் தெற்கிலும் இருந்த ஞானிகள் ஏறத்தாழ ஒரே மாதிரியாகத்தான் சிந்தித்துள்ளனர். தன்னைச் சுற்றியுள்ள மனிதர்கள் மீதான அன்பும் கருணையுமே ஆன்மிகத்தின் அடிப்படை என்பது இந்த ஞானிகளின் வாக்கு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்