வாசுதேவன், பெங்களூரு
பொலபொலவென்று உதிர்ந்துவரும் மக்கள் நீதி மய்யம் கட்சி?
இரவெல்லாம் ஆலோ சித்து, கற்பனையில் மடம் கட்டி, விடிந்ததும் அவரவர் பிழைப்பைப் பார்க்கப் போய் விடுவதை "ஆண்டிகள் கூடி மடம் கட்டினார்கள்' என்பார்கள் தமிழக கிராமத் தினர். ஆண்டிகள் கட்டும் மடம் போலத்தான், அறிவு ஜீவிகள் என நினைத்துக் கொள்கிறவர்கள் கூடி கட்சி நடத்துவதும். ஆகப் பெரிய அறிவு ஜீவியாகக் கற்பனை செய்து கொண்டு மய்யமாக நின்ற கமலுக்கும், அவரின் இருபுறமும் நின்ற மற்ற அறிவுக் கொழுந்துகளுக் கும் அரசியலின் அரிச்சுவடி பாடம் நடத்தியிருக் கிறார்கள் வாக்காளர்கள். தேர்தல் எனும் தேர்வில் தேற முடியாத அளவுதான் மக்கள் நீதி மய்யம் பாடம் படித்திருக்கிறது. அதனால்தான் பொலபொல வென உதிர்ந்துகொண்டிருக்கிறது.
ஜெயப்பிரகாஷ், அரண்மனைப் புதூர் -தேனி
"கொரோனா தொற்றுக்கிருமி ஒரு உயிர். நம்மைப் போன்று அதற்கும் உயிர்வாழ உரிமை உண்டு'' என உத்தரகாண்ட் பா.ஜ. க. முன்னாள் முதல்வர் திரிவேந் திரசிங் ராவத் கூறியுள்ளது குறித்து?
கொரோனா உயிர் வாழலாம். மற்ற வைரஸ் -பாக்டீரியாக்கள் உயிர் வாழலாம். ஆனால், மாட்டுக் கறி சாப்பிடுபவர்கள் உயிர் வாழக் கூடாது. மாற்றுக் கருத்துகள் சொல் பவர்கள் உயிர் வாழக்கூடாது. அவர்கள் நரேந்திர தபோல்கர், கௌரி லங்கேஷ் கதிக்கு ஆளாக்கப் படுவார்கள் என்ற அச்சத்தை விதைத்திருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசும், அந்தக்கட்சி ஆளும் மாநில அரசுகளும்! அது மட்டுமல்ல, டெல்லியில் தடுப்பூசி கேட்டு பிரதமர் மோடிக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவர்கள் கைது செய்யப்பட்டுள் ளனர். பிக்பாஸ் பிரபலமான நடிகை ஓவியா "is this democracy or democrazy..." என்று டிவிட் செய்துள்ளார். அது தான் மோடி அரசுக்கும் உத்தரகாண்ட் முன்னாள் முதல்வருக்குமான நற்சான்றிதழ்.
நித்திலா, தேவதானப்பட்டி
"தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைவதைப் பார்க்க கலைஞர் இல்லையே' என மாவலி கவலைப்படுகிறாரா?
ஒரு வலிமையான தலைவர் என்பவர் தன் காலத்திற்குப் பிறகும் தனது இயக்கம் தொடர்ந்து நடைபெறுவதற்கான கட்ட மைப்பை உருவாக்குபவராவார். அந்த வகையில், தி.மு.க.வை நிறுவிய அறிஞர் அண்ணா, தன் தம்பிகளை வளர்த்தெடுத்தார். அதில், கலைஞர் என்ற தம்பி அண்ணாவின் மறைவுக்குப் பிறகு அரை நூற்றாண்டு காலம் இயக்கத்தைக் கட்டிக்காத்தார். கலைஞரின் மறைவுக்குப் பிறகு, தி.மு.க. என்ன வாகுமோ என்று தொண் டர்களும், அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக விமர்சகர்களும் எதிர்பார்த்த நிலையில், கலைஞருக்குப் பிறகும் தி.மு.க. வலிமையாக இருக்கிறது என்பதை கட்சி அமைப்பின் வழியாகவும், தேர்தல் களத்தின் வழியாகவும் நிரூபித்து, தனிப்பெரும் பான்மையுடன் முதல்வராகியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இது கலை ஞர் உருவாக்கிய கட்டமைப் புக்கான தொடர் வெற்றிதான். இந்த வெற்றியை ரசித்துப் பார்க்கவும், கொள்கை வழியில் பயணம் தொடர்ந்திட ஆலோசனை வழங்கிடவும், சித்தாந்த எதிரிகளுக்கு தன் கூர்மையான பேனாவால் சவுக்கடி தரவும் மூத்த பத்திரி கையாளர் சின்னகுத்தூசி இல்லையே என்பதுதான் அவரது நினைவு நாளை (மே 22)யொட்டி மாவலியின் மனதில் தோன்றும் கவலை.
சு.வெங்கடேஷ், கோட்டயம், கேரளா
கோட்டைக்குச் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா நிவாரண நிதியாக 50 லட்ச ரூபாயை வழங்கி யிருக்கிறாரே சூப்பர் ஸ்டார் ரஜினி?
ரஜினியை முதல்வராகக் கோட்டைக்கு அனுப்ப வேண்டும் என அவரைத் தங்களின் சுய லாபத்துக்குப் பயன்படுத்த நினைத்தவர்கள் தீவிரமாக வேலை பார்த்தார்கள். ரஜினியோ மக்கள் நலன் கருதி கோட்டைக்குச் சென்று முதல்வரிடம் நிவாரண நிதி வழங்கியிருக்கிறார்.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
ஓராண்டுக்கு மேலாக ஆன்லைனில் வகுப்பு நடத்தினாலும், "முழுக் கட்டணமும் செலுத்தினால்தான் மாணவர்களுக்கு பாஸ் போடுவோம்' என்று தனியார் பள்ளிகளும் கல்லூரிகளும் பெற்றோரை நிர்பந்திப்பது நியாயமா?
நியாயம், அநியாயம் பார்த்தால் கல்வியை வணிகமாக நடத்த முடியாது. மாணவர்கள் நலன் மீது அக்கறையை வணிக நோக்கத்தில் உள்ளவர்களிடம் எதிர்பார்க்க முடியாது. அதற்கு, சமூக அக்கறை சார்ந்த மனது வேண்டும். தஞ்சையிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பூண்டியில் அமைக்கப்பட்ட ஸ்ரீபுஷ்பம் கல்லூரியும், அதன் தாளாளராக இருந்த துளசி அய்யா வாண்டை யாரும்தான் அதற்கு சரியான எடுத்துக்காட்டு. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டமான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடு துறை மாவட்டங்களில் உள்ள நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள எளிய குடும்பத்து மாணவர்களைப் பட்டதாரியாக்கிய பெருமை புஷ்பம் கல்லூரிக்கு உண்டு. முதல் தலைமுறை பட்டதாரிகள் பலரை உருவாக்கிய கல்லூரி. படிப்பு மட்டுமின்றி பண்புகளை யும் வளர்த்த கல்லூரி. ஏழை மாணவர்கள் பலரைத் தன் சொந்த இடத்தில் தங்க வைத்து, கல்வியும் உணவும் இலவசமாக வழங்கி, வாழ்வில் ஒளியேற்றியவர் அண்மையில் மறைந்த துளசி அய்யா. அரசியலில் காந்திய நெறியைக் கடைப் பிடித்த காங்கிரஸ்காரர் என்றாலும், தனது கல்வி நிறுவனத்தில் பெரியாரின் சமூக நீதியை நிலைநாட்டியவர்.