மாவலி பதில்கள்

mavali

பி.மணி, குப்பம் -ஆந்திரா

ஜெயலலிதா, மம்தா இவர்களின் அரசியல் ஆளுமையை ஒப்பிடுக?

ஆண்கள் நிறைந்துள்ள அரசியலில் ஜெயலலிதா, மம்தா இரண்டு பெண்மணி களுமே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி சாதித்தவர்கள். இருவருமே மத்திய அரசின் கடிவாளத்துக்கு அடங்காதவர்கள். ஜெய லலிதாவை எம்.ஜி.ஆர். வலுக்கட்டாயமாக அரசியலுக்கு கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க.வை ஜெயலலிதா தன் வசமாக்கிக் கொண்டார். மம்தாவோ பொதுநல ஈடுபாட்டுடன் அரசியலுக்கு வந்தார். காங்கிரசில் உரிய முக்கியத்துவம் இல்லாததால், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்து, 35 ஆண்டுகால இடதுசாரி கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற்று, தொடர்ந்து மும்முறை ஆட்சியைப் பிடித்துள்ளார். மம்தாவின் பா.ஜ.க எதிர்ப்பு வெளிப்படையானது. ஜெயலலிதா பா.ஜ.க.வை ஆதரித்தும் இருக்கிறார். எதிர்த்தும் இருக்கிறார். "மோடியா லேடியா' என்றவரின் இறுதி நாட்கள் மர்மமானவை.

செந்தில்குமார், எம் சென்னை-78

"ஸ்டாலின் கனவில்கூட ம

பி.மணி, குப்பம் -ஆந்திரா

ஜெயலலிதா, மம்தா இவர்களின் அரசியல் ஆளுமையை ஒப்பிடுக?

ஆண்கள் நிறைந்துள்ள அரசியலில் ஜெயலலிதா, மம்தா இரண்டு பெண்மணி களுமே அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி சாதித்தவர்கள். இருவருமே மத்திய அரசின் கடிவாளத்துக்கு அடங்காதவர்கள். ஜெய லலிதாவை எம்.ஜி.ஆர். வலுக்கட்டாயமாக அரசியலுக்கு கொண்டு வந்தார். எம்.ஜி.ஆர் உருவாக்கிய அ.தி.மு.க.வை ஜெயலலிதா தன் வசமாக்கிக் கொண்டார். மம்தாவோ பொதுநல ஈடுபாட்டுடன் அரசியலுக்கு வந்தார். காங்கிரசில் உரிய முக்கியத்துவம் இல்லாததால், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்து, 35 ஆண்டுகால இடதுசாரி கூட்டணியை எதிர்த்து வெற்றி பெற்று, தொடர்ந்து மும்முறை ஆட்சியைப் பிடித்துள்ளார். மம்தாவின் பா.ஜ.க எதிர்ப்பு வெளிப்படையானது. ஜெயலலிதா பா.ஜ.க.வை ஆதரித்தும் இருக்கிறார். எதிர்த்தும் இருக்கிறார். "மோடியா லேடியா' என்றவரின் இறுதி நாட்கள் மர்மமானவை.

செந்தில்குமார், எம் சென்னை-78

"ஸ்டாலின் கனவில்கூட முதல்வராக முடியாது' என? எதிர்கட்சிகள் ஏளனம் செய்ததே?

2016-க்குப் பிறகு இந்த ஏளனம் அளவுகடந்து சென்றது. "ஒருபோதும் முதல்வராக முடியாது' என்றார் டி.டி.வி. தினகரன். "மு.க.ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை' என்றார் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை என்றார். "ஸ்டாலின் ஜாதகப்படி முதல்வராக வாய்ப்பில்லை' என்றார்கள் ஜோதிடர்கள். ஸ்டாலினை "இலவு காத்த கிளி' என்றார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். "கடைசிவரை கனவு பலிக்காது' என்றார் செல்லூர் ராஜூ. "ஸ்டாலின் ராசியில்லாதவர்' என்றார் தம்பிதுரை. "எல்லா ஜோசியரிடமும் கேட்டும் ஸ்டாலினுக்கு ஜாதக கட்டம் சரியில்லை என்று சொல்லிவிட்டார்கள்' என்றார் ஹெச்.ராஜா. அதுபோலவே ஆர்.பி.உதயகுமார், எல்.முருகன், ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என்று பலரும் சொன்னார்கள். உடன்பிறந்த அண்ணனான மு.க.அழகிரியேகூட, "ஸ்டாலின் முதல்வராக முடியாது' என்றார். எல்லா கணிப்புகளையும் ஜாதகங்களையும் மீறி, கடும் உழைப்பாலும் வியூகத்தாலும் காலத்தை தனக்கு சாதகமாக்கி, ‘"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்'’ என உறுதிமொழியேற்று முதல்வராகியிருக்கிறார்.

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"நரேந்திர மோடிதான் உலகின் தலைசிறந்த திகில் பட இயக்குனர்' என்கிறாரே ராம்கோபால் வர்மா?

தனது கதைகளை மிஞ்சுகிற வகையில் தினம் ஒரு கதை சொல்பவரின் ஆற்றலைக் கண்டு வியந்திருக்கலாம் அந்த இயக்குநர்.

நித்திலா, தேவதானப்பட்டி

முதல்வர் மு.க.ஸ்டாலினும் மற்ற அமைச்சர்களும் உளமார உறுதி கூறி பதவி ஏற்றுள்ளனரே?

இங்கிலாந்தில் கடவுள் பெயரால் மட்டுமே உறுதி கூறமுடியும் என்ற நிலையில், பிராட்லா என்ற சீர்திருத்தவாதியின் கடும் போராட்டத்தால் கடவுளின் பெயராலோ அல்லது உளமார உறுதி கூறியோ பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ளலாம் எனத் திருத்தம் செய்யப்பட்டது. அதே வாய்ப்பு இந்திய ஜனநாயகத்திலும் உண்டு. ஒருசிலர் கடவுள் பெயரால் உறுதி எடுப்பார்கள். ஒருசிலர் உளமார உறுதி கூறுவார்கள். 1967-ல் அறிஞர் அண்ணா தலைமையிலான அமைச்சரவையில் அனைவரும் உளமார உறுதியேற்றனர். 1969, 1971-ல் கலைஞர் அமைச்சரவையும் அப்படித் தான். 1977, 1980, 1985-ல் பதவியேற்ற எம்.ஜி.ஆர். அமைச்சரவையிலும் உளமார உறுதியேற்றனர். ஜெயலலிதா முதல்வரானபோதுதான் அண்ணாவின் வழிக்கு மாறாக, கடவுளின் பெயரால் உறுதியேற்கும் படலம் மீண்டும் ஆரம்பமானது. எனினும் 1989, 1996, 2006 தி.மு.க ஆட்சிகளில் அனைவரும் உளமார உறுதி ஏற்றனர். 10 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அதே வழி பின்பற்றப்பட்டுள்ளது. இதில் ஜெயலலிதா அமைச்சரவையில் இடம்பெற்று ஆண்டவன் பெயரால் உறுதி மொழி ஏற்ற முத்துசாமி, ராஜகண்ணப்பன், அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில்பாலாஜி ஆகியோரையும் இம்முறை உளமார உறுதி மொழி ஏற்கச் செய்திருக்கிறார் ஸ்டாலின்.

வாசுதேவன், பெங்களூரு

அன்று நேரில் கலந்து மகிழ்ந்த திருமண நிகழ்ச்சிகள், இன்று காணொலி மூலம் பங்கு பெறும் திருமண நிகழ்வுகள் ஒப்பிடுக?

திருமண நிகழ்ச்சிகள்கூட பரவா யில்லை. இந்த கொரோனா காலத்திற்கு முன்பே வெளிநாடுகளில் குடியேறிவிட்டவர்கள் வீடியோ கான்பரன்சிங்கில் திருமணம் நடத்தி, சொந்த ஊர் உறவினர்களின் வாழ்த்துகளைப் பெற்றுவந்தனர். ஆனால், கொரோனாவால் உள்ளூர் திருமண நிகழ்வுகளும் அப்படி ஆகிவிட்டன. அதைவிட எதிர்பாராத ஒன்று மரண நிகழ்வுதான். வாய்விட்டு அழக்கூட முடியாதபடியும், நேரில் சென்று அஞ்சலி செலுத்த முடியாதபடியும் பல மரணங்கள் மனித உறவுகளைப் பிளந்துவிட்டன.

m

சி. கார்த்திகேயன், சாத்தூர்

ஸ்டாலின் -தமிழகம், கேரளா -பினராயி விஜயன், மே.வங்கம் -மம்தாவின் வெற்றி... பி.ஜே.பி.க்கு ஒரே நாடு கோஷத்திற்கு இடைஞ்சலாகத்தானே இருக்கும்?

இந்திய ஒன்றியத்தின் பன்முகத் தன்மையே பா.ஜ.க.வுக்கு இடைஞ்சலாகத்தான் உள்ளது. அந்த பன்முகத்தன்மைக்கு கிடைத்த வெற்றியாக இந்த மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் இருக்கும்போது மூன்றிலும் ஆதிக்கம் செலுத்த நினைத்த பா.ஜ.க.வுக்கு இடைஞ்சல் மட்டுமல்ல, மூக்குடைப்பும்தான்.

nkn120521
இதையும் படியுங்கள்
Subscribe