கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
தி.மு.க..வின் "வெற்றி நடை போடும்' கிண்டல் விளம்பரத்தை. ரசித்தீர்களா?
அந்த விளம்பரங்களில் ஒரே ஒரு நபர் டைவ் அடித்து வந்ததை நீங்கள் ரசித்தீர்களா? அதுதான் தேர்தல் அரசியல்.
பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி மாவட்டம்
""காங்கிரசும் பா.ஜ.க.வும், ஒரே கொள்கையைக் கொண்டவர்கள்தான். மதவாத சக்திகளை எதிர்கொள்வதில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துவிட்டது'' என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியது சரியா?
கேரளாவுடன் சேர்ந்துதான் தமிழகத்திலும் தேர்தல் நடந்தது. பினராயி விஜயனின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டும் காங்கிரசும் இங்கே தி.மு.க. கூட்டணியில் இணைந்து பா.ஜ.க. கூட்டணியை எதிர்க்கின்றன. மேற்குவங்க மாநிலத்திலும் இதே காலகட்டத்தில்தான தேர்தல் நடக்கிறது. அங்கே பா.ஜ.க.வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரசும் கூட்டணி அமைத்துள்ளன. பினராயி விஜயன் சொல்வது சீதாராம் யெச்சூரிக்கு போலும்.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.
"அ.தி.மு.க.' என்ற பெயரை "அ.இ.அ.தி.மு.க.' என்று ஏன் மாற்றினார்கள்?
இந்திராகாந்தி ஆட்சியில் எமர்ஜென்சி கொண்டு வரப் பட்டபோது, மாநிலக் கட்சிகள் தடை செய்யப்படும் என்ற அச்சம் பரவியது. தி.மு.க.வின் பெயரை மாற்றி சமுதாய இயக்க மாக மாற்றலாம் என்றபோது அதை கலைஞர் ஏற்கவில்லை. அ.தி.மு.க. நிறுவனர் எம்.ஜி.ஆரோ, தனது கட்சி மாநிலக் கட்சி அல்ல என்பதைக் காட்டுவதற்காக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.இ.அ.தி.மு.க.) என மாற்றினார்.
வாசுதேவன், பெங்களூரு
இருக்கும்பொழுது உதாசீனப்படுத்திவிட்டு, மறைந்தவுடன் கொண்டாடுகிறார்களே?
நிழலின் அருமை வெயிலில் தெரியும்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
தேர்தலில் வாக்குப்பதிவு நாளை ஏன் தேர்தல் திருவிழா என்கிறார்கள்?
திருவிழாவின் முக்கிய நாளுக்கு முன்பாக கொடி ஏற்றுவார்கள். ஊர்வலம் நடக்கும். ஊர் மக்கள் யாரும் வெளியே போய்விடாதபடி பார்த்துக்கொள்வார்கள். இதன் பிறகுதான், மெயின் திருவிழா நடக்கும். தேர்தலும் அப்படியே இருப்பதால் திருவிழா என்கிறார்களோ!
ஆற்காடு விநாயகம், ராணிப்பேட்டை
முதலமைச்சர் போட்டியிட்ட தொகுதியில் வாக்குப்பதிவு அதிகமாக வும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் போட்டியிட்ட தொகுதியில் வாக்குப் பதிவு குறைவாகவும் இருக்கிறதே?
பொதுவாக, நகர்ப்புறங்களில் வாக்கு எண்ணிக்கை குறைவாக இருக்கும். சொந்த ஊருக்குச் செல்பவர்கள், வீடு மாறியவர் கள், இரண்டுக்கு மேற்பட்ட தொகுதிகளில் பெயர் கொடுத்தவர்கள் என நிறைய காரணங்கள் உண்டு. இதுதான் பொது வான காரணங்கள். அதைக் கடந்து ஒரு காரணம் உண்டு. முதலமைச்சர் தொகுதி யில் அவரது சாதிக்காரர்கள் இருக் கிறார்கள். எதிர்க்கட்சித் தலைவர் தொகுதியில் அது கிடையாது.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77.
சசிகலாவின்... ஆன் மீகப் பயணம் குறித்து?
சிவனேன்னு இருக்கிறேன் என்று காட்டுவதாக இருக்கலாம்.
_______________
தேர்தல் களம்
ம.தமிழ்மணி, வெள்ளக்கோவில் -திருப்பூர் மாவட்டம்
தேர்தல் காலங்களில் திருமங்கலம் பார்முலா என்று சொல்லக் காரணம் எப்படி வந்தது?
2006-2011 தி.மு.க. ஆட்சியில் மதுரை திருமங்கலத்தில் இடைத்தேர்தல் நடந்தது. அப்போது ஒவ்வொரு வாக்காளருக்கும் ரூ.500 என ஆளுங்கட்சியால் வழங்கப்பட்டது. குறிப்பாக, மதுரையில் தி.மு.க.வின் பவர் சென்டராக இருந்த மு.க. அழகிரியின் ஆட்கள் பக்காவாக பட்டுவாடா செய்தனர். அரசு நிர்வாகமும் காவல்துறையும் அதற்கு உதவியாக இருந்தன. விடியற்காலையில் பெண்கள் வாசல் தெளித்து கோலம் போடுவதற்காக வரும்போது, வீட்டு வாசலில் பணக்கவர் கிடக்கும். வீடு தேடி வந்த லட்சுமியை வேண்டாம் எனச் சொல்லக்கூடாது என அதை வீட்டுக்குள் எடுத்துச் செல்வார்கள். வீட்டில் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்களோ அத்தனை 500 ரூபாய் தாள்களும், உதயசூரியன் சின்னமும் பணக்கவருக்குள் இருக்கும். இந்த பக்காவான பட்டுவாடாதான் திருமங்கலம் ஃபார்முலா எனப் பெயர்பெற்றது. அதுவே, தேர்தல் நேர பணப்பட்டுவாடாவுக்கான நிரந்தரப் பெயராகவும் அமைந்துவிட்டது. ஆனாலும், தேர்தலுக்குப் பணம் கொடுப்பது என்பது திருமங்கலத்தில் தொடங்கியதில்லை. தேர்தல் என ஒன்று இந்தியாவில் தொடங்கியபோதே பணப்பட்டுவாடாவும் தொடங்கிவிட்டது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் பணக்காரர்கள்-பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கான வாக்குரிமையுடன் நடைபெற்ற தேர்தல்களிலேயே பணம் புழங்கியது. நகராட்சித் தலைவர்களைத் தேர்ந்தெடுக்க வாக்களிக்கும் கவுன்சிலர்களுக்கு பணம்+நகை பட்டுவாடா நடந்தது. சுதந்திர இந்தியாவில் முதல் பொதுத் தேர்தல் நடந்த 1952-ல் வேட்பாளர்களான ஜமீன்களும் பண்ணையார்களும் தங்கள் நிலத்தில் பணியாற்றுபவர்களுக்கு டிபன்-காபி பட்டுவாடா செய்து ஓட்டு வாங்கினார்கள். 1962ல் காஞ்சிபுரத்தில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அக்கட்சியின் நிறுவனர் அறிஞர் அண்ணாவைத் தோற்கடிப்பதற்காக 5 ரூபாய், 10 ரூபாய் பணம் கொடுத்து வெங்கடாசலபதி படத்தின் மீது சத்தியம் வாங்கியது காங்கிரஸ் கட்சி. எம்.ஜி.ஆர். ஆட்சியில் புடவை, வேட்டி கொடுத்து ஓட்டு வாங்கும் பழக்கம் ஒரு சில தொகுதிகளில் நடந்தது. ஜெயலலிதா ஆட்சியில் சாத்தான் குளம்-கும்மிடிபூண்டி-காஞ்சிபுரம் இடைத்தேர்தல்களில் ஒவ்வொரு வாக்காளருக்கும் பணப்பட்டுவாடா கச்சிதமாக நடத்தப்பட்டது. அதன்பிறகுதான், புகழ்பெற்ற திருமங்கலம் இடைத்தேர்தல் நடந்தது. அதன்பிறகு, இடைத்தேர்தல் -பொதுத்தேர்தல் எல்லாவற்றிலும் பணத்தை வைத்தால்தான் ஓட்டு என்கிற மனநிலை வேட்பாளர்களுக்கு மட்டுமல்ல, வாக்காளர்களுக்கும் வந்துவிட்டது.