ப.பாலாசத்ரியன், பாகாநத்தம்
தமிழ்நாட்டில் மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவ-மாணவியர் நீட் என்னும் கொடிய நோயிலிருந்து விடுபட வழியுண்டா?
தடுப்பூசி போட வேண்டிய அதிகாரத்தில் இருப்பவர்கள் கல்லாப்பெட்டியை மட்டுமே கவனிப்பதால், "கருணை' மருந்துகூட கிடைக்காமல் தவிக்கிறார்கள் மாணவ-மாணவியர்.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
பிளாஸ்டிக் ஒழிப்பு முயற்சி வெற்றி பெறுமா?
அவசியமான ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளும்போது முதலில் குறைப்பு, பிறகு ஒழிப்பு என்கிற அணுகுமுறையைக் கையாளலாம். உலகம் முழுவதையும் அச்சுறுத்துகிறது பிளாஸ்டிக் பயன்பாடு. அதனைக் கட்டுப்படுத்த வேண்டுமென்றால், பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக வசதியாகவும், தண்ணீர் புகாதபடியுமான இயற்கையைப் பாதிக்காத பொருட்கள் அதிகம் பயன்பாட்டுக்கு வரவேண்டும். அதன் மூலம் மெல்ல பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து, ஒரு கட்டத்தில் ஒழியக்கூடும். இல்லையென்றால், டாஸ்மாக் கடைகளைக் குறைப்பதாகச் சொன்னதுபோல ஆகிவிடும்.
சி.கார்த்திகேயன், சாத்தூர்
"முட்டை கொள்முதலை தொடங்கியது தி.மு.க.தான்' என்கிறாரே முதல்வர் எடப்பாடி?
சத்துணவில் முட்டை வழங்கும் திட்டத்தைக் கொண்டு வந்தது தி.மு.க ஆட்சிதான் என்பதால், அவர்கள்தான் கொள்முதலைத் தொடங்கியிருப்பார்கள். அதனைத் தொடர்ந்து செயல்படுத்திய அ.தி.மு.க. அரசு, முட்டை கொள்முதல் மூலம் என்னென்ன "கொள்முதல்' செய்தது என்பதைத்தான் வருமானவரித்துறை தோண்டித் துருவுகிறது.
லீ.சீனிராஜ், தொம்பக்குளம்
முதல்வராக இருந்த ஜெயலலிதா, அப்போதைய மத்திய அமைச்சர் அருணாசலத்தை விமானத்திலிருந்து இறக்கிவிட்டதற்கும், தற்போதைய ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன், துணை முதல்வர் ஓ.பி.எஸ்.ஸை சந்திக்காமல் அனுப்பியதற்கும் ஒற்றுமை-வேற்றுமை என்ன?
இருவருமே அதிகாரத்தில் இருந்தபோதுதான், அதிகாரத்தில் உள்ள சக மனிதர்களை அவமானப்படுத்தினர். அவமானப்படுத்திய இருவருமே தங்களின் பூர்வீகம் ஸ்ரீரங்கம் என உரிமை கொண்டாடுவர். ராணுவத்தைப் போன்ற கெடுபிடியுடன் முதல்வராக இருந்தவர், தனது அதிகாரத் திமிரைக் காட்ட தாழ்த்தப்பட்ட சமுதாயத்து அமைச்சரை விமானத்திலிருந்து இறக்கிவிட்டார். முதல்வராக நினைக்கும் ராணுவ அமைச்சர், தன் அதிகாரத்திற்கு ஆபத்து வரக்கூடாது என்பதற்காக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்து அமைச்சரை சந்திக்காமல் திருப்பி அனுப்பினார்.
பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118
லோக் ஆயுக்தா சட்டம் வந்தால், வழக்கு தொடுப்பவர்களுக்கே ரொம்பவும் ஆபத்தாமே?
தாங்கள் வாங்கும் லஞ்சத்துக்கு எதிராக, தாங்களே ஒரு சட்டம் கொண்டு வரக்கூடிய நிலைக்கு ஆட்சியாளர்கள் தள்ளப்பட்டால், சட்டத்தைவிட அதன் சந்து பொந்துகளை வடிவமைப்பதில்தான் அதிக கவனம் செலுத்துவார்கள். அப்படிப்பட்ட லோக் ஆயுக்தா சட்டத்தில் உள்ள பெரிய பொந்துதான், புகார் தருபவர்கள் அதற்குரிய ஆதாரங்களை உரிய வகையில் நிரூபிக்காவிட்டால் அவர்களுக்கே தண்டனை என்கிற அச்சுறுத்தல்.
உமரி பொ.கணேசன், மும்பை-37
பா.ஜ.க. கூட்டணியில் பதவி சுகம் அடைந்துகொண்டே அதைத் திட்டுகிறதே சிவசேனா?
சிவசேனாவுக்கு இருக்கிற தெனாவெட்டில் 100-இல் ஒரு பங்குகூட நமக்கு இல்லையே எனக் கவலைப்பட வேண்டியவர்கள், பா.ஜ.க.வின் கூட்டணியில் இல்லாமலேயே அதற்கு துதிபாடி கவரி வீசும் அ.தி.மு.க.வினர்.
வி.கார்மேகம், தேவகோட்டை
"28% ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு 35 பொருட்களுக்கு மட்டுமே' என பா.ஜ.க. இறங்கி வர காரணம்?
தேர்தல் நெருங்கி வருவதுதான்.
----------------------------
ஆன்மிக அரசியல்
நித்திலா, தேவதானப்பட்டி
"ஒவ்வொரு கோவிலுக்கும் தனித்தனி சிறப்புகள் உண்டு. வழிபாட்டு முறைகள் உண்டு. சபரிமலை அய்யப்பன் கோவிலின் தன்மைக்கு மீறி அங்கே பெண்களை அனுமதிக்க வலியுறுத்துவது எப்படி சரி' என கேட்கிறார்களே ஆன்மிக அரசியல்வாதிகள்?
"நைஷ்டிக பிரம்மச்சாரி' எனப்படும் அய்யப்பன் கோவில் கொண்டிருப்பது, காடுகள் நிறைந்த சபரிமலையில்! ஒரு காலத்தில் ஆண்கள் அங்கு செல்வதே அரிதானதாகவும் கடினமானதாகவும் இருந்தது. காலப்போக்கில், பாதுகாப்பு வசதிகள் பலப்படுத்தப்பட்டுவிட்டன. அத்தகைய வசதிகள் இல்லாத காலத்தில், பெண்களை அழைத்துச் செல்வதும், அவர்களின் மாதவிடாய் நேர சிரமங்களைக் கருத்திற் கொண்டும் ஆன்மிகத்தின் பெயரால் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தன. தற்போதைய அறிவியல் முன்னேற்றம்-வாழ்க்கை முறை இவையெல்லாம் மாற்றங்களை உருவாக்கியுள்ளன. சபரிமலை மகர ஜோதியை தொலைக்காட்சி நேரலையில் பெண்களும்தான் தரிசிக்கின்றனர். அதை எவராலும் தடுக்க முடிவதில்லை. ஒவ்வொரு கோவிலின் நடைமுறையும் வழிபாட்டுத் தன்மையும் காலத்திற்கேற்ப மாற்றங்கள் பெற்றுள்ளன. தமிழ்க் கடவுளான அருள்மிகு வடபழனி முருகனுக்கு ஆங்கிலப் புத்தாண்டில் சிறப்பு பூஜை செய்யப்படுகிறது. பக்தர்கள் அதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அப்படித்தான், அய்யப்பன் கோவிலில் பெண்களும் தரிசிக்க அனுமதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையும்! இதை பழமைவாதப் பிடிப்புள்ளவர்கள் எதிர்க்கிறார்கள். மன்னார்குடி செண்டலங்கார ஜீயர், வேதமே இதற்கு தடை விதிக்கிறது என்றும், ஆண் எதைச் செய்யவேண்டும்-பெண் எதைச் செய்ய வேண்டும் எனவும் வேதம் வரையறுத்துள்ளது என்கிறார். ஜனநாயக நாட்டில் அரசமைப்புச் சட்டம்தான் வேதம். அதுவும்கூட 100 முறைக்கு மேல், காலத்திற்கேற்ற திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. பாலின வேற்றுமை எனும் பலவீனமான காரணத்தைக் களைந்து இருபாலரும் வழிபடுவதை "நைஷ்டிக பிரம்மச்சாரி'யான அய்யப்பன் உட்பட எந்தக் கடவுளும் மறுக்கமாட்டார்.