மல்லிகா அன்பழகன், சென்னை-78
எல்லா தமிழனும் பொருளாதாரத்திலும் கல்வியறிவிலும் உயர்ந்து விட்டால் சாதியம் ஒழிந்துவிடுமா?
சாதியத்தால் ஒடுக்கப்பட்ட- பிற்படுத்தப் பட்டவர்கள் பொருளாதாரத்தில் உயர்ந்திட கல்வி-வேலை வாய்ப்புகள் அவசியம். ஆனால், கல்வியும் வேலைவாய்ப்பும் மட்டுமே சாதியத்தை ஒழித்துவிடாது. ஏனென்றால், அது பிறப்பு முதல் இறப்பு வரை அடையாளமாக இருக்கிறது. குடும்ப உறவுகளால் இறுகியிருக்கிறது. ரத்தத்துடன் கலந்திருக்கிறது.
த.சிவாஜிமூக்கையா, தர்காஸ்
2011, 2016 தேர்தல்களில் ஒரு சுயேட்சை வேட்பாளர் கூட வெற்றி பெறவில்லையா?
தமிழகத்தைப் பொறுத்தவரை சுயேட்சையாக வெற்றிபெறும் வாய்ப்பு அமைபவர்களும்கூட, பெரிய கட்சிகளில் சீட் கிடைக்காமல் அதிருப்தி வேட்பாளர்களாகப் போட்டியிட்டவர்கள்தான். அண்மைக்காலமாக இரண்டு பெரிய கட்சிகளும் சகல விதத்திலும் பலம் காட்டுவதால், சுயேட்சைகள் மட்டுமல்ல, இந்த இரண்டு கட்சிகளுடன் கூட்டணியில் இல்லாத உதிரிக் கட்சிகளும்கூட ஒரு சீட் ஜெயிப்பதற்கே பெரும்பாடுபட வேண்டியுள்ளது.
அயன்புரம். த.சத்தியநாராயணன், சென்னை 72
வங்க தேசத்தின் சுதந்திரத்திற்காக சிறை சென்றேன் என்று மோடி கூறுகிறாரே?
இந்தியாவின் கிழக்குப் பகுதியில் வங்காளம் இருக்கிறது. மேற்கு பகுதியில் மோடியின் குஜராத் இருக்கிறது. எப்போது அவர் மேற்கிலிருந்து கிழக்கிற்கு சென்றார்? எந்த ஊரில் போராட்டத்தில் கலந்துகொண்டார்? எத்தனை நாட்கள் சிறையில் இருந்தார்? அவருடன் போராடியவர்கள் யார்-யார்? இவற்றில் எதற்கேனும் ஆதாரத்தை அளிப்பார், பொறுப்பு வாய்ந்த பிரதமர் பதவியில் இருக்கும் மோடி என நம்புவோம். உண்மையில், வங்காளத்தில் நடந்த சுதந்திரப் போராட்டத்திற்கு இந்தியர்கள் போராட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இந்திய ராணுவத்தை அனுப்பி விடுதலை கிடைக்கச் செய்தவர் அன்றைய பிரதமர் இந்திராகாந்தி.
வ.நடராஜன், கூடுவாஞ்சேரி
தேர்தல் களத்தில் வேட்பாளர்கள் டீ போடுவது, தோசை சுடுவது, நடனமாடுவது, துணி துவைப்பது இதையெல்லாம் பார்த்தால் ஒவ்வொருவரும் உலக மகா நடிகர்களாகத் தெரிகிறார்களே?
உலகம் ஒரு நாடக மேடை. இதில் நாம் எல்லாரும் நடிகர்கள். அவரவருக் கான வாய்ப்பு வரும் போது அது வெளிப் படுகிறது. காட்சி ஊட கங்களுக்கு செய்திப்பசி கடுமையாக இருக் கின்ற காலத்தில் வேட் பாளர்கள் இத்தகைய வேடங்களைப் போட்டு மகிழ்விக்க வேண்டியிருக்கிறது.
எஸ்.மோகன், கோவில்பட்டி
2000 நோட்டுகள் இனி புழக்கத்தில் இருக்காதாமே?
அதனால்தான் ஓட்டுக்கு ரூ.3000, ரூ.5000 என எதிர்பார்க்கப்பட்ட ஆளுந்தரப்பில்கூட 500 ரூபாய் நோட்டுடன் பல தொகுதிகளில் பணப்பட்டுவாடாவை நிறுத்திக்கொண் டார்களோ!
_____________
தேர்தல் களம்
சு.வெங்கடேஷ், கோட்டயம்
இந்த தேர்தலில் நட்சத்திரப் பேச்சாளர்கள் பலர் இருந்தனர். தேர்தலில் பிரச்சாரம் செய்த நட்சத்திரங்களில் யார் டாப் ஸ்டார்?
அரசியலுக்கு வருவார் என எல்லாராலும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் ஸ்டார் ரஜினி, அரசியல் என்ட்ரிக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில், தேர்தல் களம் மற்ற ஸ்டார்களை ஜொலிக்க வைத்தது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கமல், கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கி, ‘துக்கடா’ அரசியல்வாதிகளைக் கலங்கடித்தார். 2011-ல் தி.மு.க, 2016-ல் காங்கிரஸ், 2021-ல் பா.ஜ.க. என கொள்கை உறுதிகொண்ட குஷ்பு, ஆயிரம் விளக்கு தொகுதியில் ஆயிரத்து ஒன்றாவது விளக்காக ஒளிர வேண்டியிருந்ததால் வேறெங்கும் செல்ல முடியவில்லை. நமீதா, விந்தியா போன்றவர்கள் வழக்கம்போல சினிமா கவர்ச்சியால் பிரச்சார மேடைகளில் கலகலப்பூட்டினர். நடிகர் ராதாரவி வழக்கம்போலவே எதிராளிகளைப் புரட்டி எடுக்கும் பேச்சால் சர்ச்சைகளை உருவாக்கினார். அ.ம.மு.க.வுக்காக பரப்புரை செய்த நடிகர் ரஞ்சித், கமல் கட்சியின் வேட்பாளராக மயிலாப்பூரில் களமிறங்கிய நடிகை ஸ்ரீப்ரியா, சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்ட நகைச்சுவை நடிகர் மயில்சாமி என இந்தத் தேர்தல் களத்தில் பல நட்சத்திரங்கள் ஜொலித்தன. இவர்களில் பலரும் தங்களின் வெற்றிக்காகவும், தாங்கள் சார்ந்துள்ள கட்சிக்கேற்பவும் பேசி வாக்குச் சேகரிக்க வேண்டியவர்களாக இருந்தனர். ஒற்றைச் செங்கல்லுடன் தமிழ்நாட்டை சுற்றிய நடிகர் உதயநிதியும் தன் சொந்த தொகுதியான சேப்பாக்கத்தை கவனிக்க வேண்டியிருந்தது. இந்த நட்சத்திரங்களுக்கு நடுவே வித்தியாசமாக ஒளிர்ந்தவர், நடிகை ரோகிணி. இடதுசாரி ஆதரவாளரான அவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பல தொகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து பரப்புரை செய்தார். குறிப்பாக, கம்யூனிஸ்ட்டுகள் போட்டியிடும் தொகுதிகளுக்குச் சென்று, மக்களுடன் உரையாடும் பாணியில் ரோகிணி பேசியது பலரையும் கவர்ந்தது என்பதைவிட பலரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. முற்போக்கு கொள்கைகள், சமூகநீதிக் கோட்பாடுகளை முன்வைத்து, மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை பேசி, மதவாத சக்திகளுக்கு எதிராகப் பரப்புரை செய்தார். பல நட்சத்திரங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஜொலிக்காத நிலையில், தனது மாறுபட்ட பரப்புரையால் அமைதியாக ஒளிர்ந்தவர் ரோகிணி.