பா.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர்
ஆர்.எம்.வீரப்பன் அவர்களின் "எம்.ஜி.ஆர். கழகம்' இன்றும் செயல்படுவது ஆச்சர்யமாக இருக்கே?
ஆர்.எம்.வீ. கட்சி செயல் படுகிறது. டாக்டர் சேதுராமன் கட்சி, முருகவேல்ராஜன் கட்சி ஆகியவை களத்தில் போட்டி யிடுகின்றன. ஆர்.எம்.வீ.க்கு உடல்நிலை ஒத்துழைத்திருந்தால் எம்.ஜி.ஆர். கழகமும் போட்டியிட்டிருக்கும். அரசியலும் அதிகாரமும் அப்படிப் பட்டவை.
கே.ஆர்.உபேந்திரன், பிலோமினா நகர் முதல் தெரு. தஞ்சாவூர்
"அடுத்த மக்களவைத் தேர்தலில் வீட்டிலிருந்தே வாக்களிக்கலாம்' என்று தலைமைத் தேர்தல் கூறுவது சாத்தியமா?
ஆன்லைன் வசதிகள் பெருகும் நிலையில், எதுவும் சாத்தியம். ஆனால், அதன் வெளிப்படைத்தன்மை என்பது முக்கியமானது. இல்லையென் றால் மோசடிகளே மிஞ்சும்.
மு. முஹம்மது ரபீக் ரஷாதீ எம்.ஏ., விழுப்புரம்
பத்து வருடமாக ஆட்சியில் இல்லாததால் தி.மு.க.வினர் கோரப்பசியில் உள்ளனர் என்கிறாரே எடப்பாடி?
அப்படியென்றால் அ.தி.மு.க.வுக்கு பத்துவருடமாக செமவேட்டை -செமத்தி யான விருந்து என்று ஒப்புக்கொள்கிறாரா முதல்வர்?
செந்தில்குமார்.எம், சென்னை-78
"முதல்வர் ஆவதற்கும் ஒரு ராசி வேண்டும்' என ஸ்டாலினை கலாய்க் கிறாரே எடப்பாடி?
ஆமாம்... ஒரு முதல்வரின் மரணமும், கட்சி எம்.எல்.ஏ.க்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரின் சிறைவாசமும், கூவத்தூர் கூத்துகளுமாக சேர்ந்து முதல்வராவதற்கு நிச்சயமாக ஒரு ராசி வேண்டும்தான்.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
தேர்தல் பிரச்சாரம் வரும் அரசியல் தலைவர்களை தங்களின் குழந்தைகளுக்கு பெயர் சூட்டச் சொல்லும் பழக்கம் எப்போது தோன்றியது?
பெயர் சூட்டுவதை ஒரு செயல் பாடாக முன்னெடுத்தவை திராவிட இயக் கங்கள். அதிலும் தமிழ்ப் பெயர்கள், தலை வர்களின் பெயர்கள் ஆகியவற்றை சூட்டு வது வழக்கம். அது, தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செல்லும்போதும் தொடர்கிறது. மற்ற கட்சிகளிலும் பரவுகிறது.
வாசுதேவன், பெங்களூரு
வியாபாரத்தில் இலவசங்கள், தேர்தல் இலவசங்கள் -ஒப்பிடுக..!
இரண்டிலும் மக்களுக்கு பலன் உண்டு. அதை வழங்குபவர்களுக்கு லாபம் உண்டு.
பி.மணி, குப்பம் ஆந்திரா
ஏப்ரல் 6, மே 2 இவற்றில் எந்தநாள் சிறந்த நாளாகும்?
6 ஏப்ரலில் முட்டாளாகாமல் விழிப்புடன் இருந்தால், 2 சிறப்பாகு"மே'!
____________
தேர்தல் களம்
நித்திலா, தேவதானப்பட்டி
நாம் தமிழர் கட்சியின் செயல் திட்டங்களை முன்வைத்துப் பேசும் சீமான், "நோட்டாவுக்கு வாக்களிக்காதீர்கள்' என வலியுறுத்துகிறாரே?
வாக்காளர்கள் அனைவரும் அவரவருக்குரிய வாக்குச்சாவடிக்கு சென்று முழுமையாக வாக்களிக்க வேண்டும். 100% வாக்குப்பதிவு அவசியம் எனத் தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொண்டு வருகிறது. பள்ளி மாணவர்கள் முதல் பல தொண்டு நிறுவனத் தினரும் இந்த விழிப்புணர்வு பரப்புரையில் ஈடுபடுகின்றனர். ஹோட்டல்கள், மார்க்கெட்டுகள் இங்கெல்லாம்கூட 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இப்படிப் பதிவாகும் வாக்குகளில் எந்தக் கட்சிக்கு -வேட்பாளருக்கு அதிக வாக்குகள் கிடைக்கிறதோ அவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். வாக்குச்சீட்டு முறை இருந்த வரையில், செல்லாத ஓட்டுகள் அதிகமாக இருந்தன. சரியாக முத்திரை வைக்காத சீட்டுகள், இரண்டு சின்னங்களில் முத்திரை பதிந்த சீட்டுகள் ஆகியவை செல்லாத வாக்குகள் எனத் தள்ளுபடி செய்யப்படும். மின்னணு இயந்திரம் வந்த பிறகு செல்லாத வாக்குகளுக்கு இடமின்றிப் போய்விட்டது. அதே நேரத்தில், வாக்காளர்கள் தங்கள் தொகுதியில் போட்டியிடும் எந்த வேட்பாளரையும் விரும்பவில்லை என்றால், யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைப் பதிவு செய்யவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத் தப்பட்டு வந்தது. அதற்கான பொத்தானும் இயந்திரத்தில் வைக்கப்பட வேண்டும் என்பதை பொது நல அமைப்பினர் பலரும் வலியுறுத்தினர். யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைப் பதிவு செய்வதற்கு 1961-ஆம் ஆண்டு சட்டவிதிகளின்படி "49 ஓ' பிரிவின்படி, தனிப்படிவம் பெற்று, வாக்காளர் பட்டியலில் உள்ள தங்கள் வரிசை எண்ணைப் பதிவு செய்து, வாக்குச்சாவடி அதிகாரியிடம் அளிக்கும் வாய்ப்பு இருந்தது. இதனை மின்னணு இயந்திரத்தில்NOTA (None Of The Above).அதாவது, மேலே உள்ள எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை என்பதற்கான கடைசிப் பொத்தானாக அமைக்கப்பட்டது. நோட்டாவுக்கு வாக்களிக்க வலியுறுத்தி பரப்புரை செய்வோரும் உண்டு. தமிழ்நாட்டில் சில கட்சிகள் நோட்டாவுக்கு கீழேயும் வாக்குகள் பெற்றது உண்டு. ஒரு தொகுதியில் வேட்பாளர்களைவிட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால், யாருக்கு வெற்றி என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும் என வழக்குக்கூட தொடுக்கப்பட்டது. அத்தகைய சிக்கல்கள் ஏற்படாத வகையில், "கொள்கையைப் பார்த்து -உணர்வுப்பூர்வமாக வாக்களியுங்கள்' என்கிறார் சீமான்.