எஸ்.மோகன், கோவில்பட்டி

தேர்தல் பரப்புரை யில் தலைவர்கள் இப்போது குட்டிக்கதைகள் சொல்வதில்லையே?

பரப்புரை கால அளவே மிகவும் குட்டியாக உள்ளது. அத்துடன் வாக்குறுதிகள் சாதனைகள் போன்ற கதைகளை அளந்துவிடுவதால், தனியாக குட்டிக் கதைகளை சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படாமல் போய்விட்டது.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

Advertisment

பலமான கட்சிகளோடு மோதும் சுயேட்சை வேட்பாளர்களால் வெற்றி பெற முடியுமா?

பலமான கட்சியில் வளமான செல்வாக்கு கொண்டவராக இருந்தவருக்கு சீட் கொடுக்காமல் ஒதுக்கும்போது, அவர் தனது செல்வாக்கை நிலைநாட்டுவதற்காக, சொந்தக் கட்சி வேட்பாளரை எதிர்த்து நின்று களம் காண்பது உண்டு. கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளரைவிட, போட்டி வேட்பாளர் மீது வாக்காளர்கள் நம்பிக்கை வைத்தால் அவர் வெற்றிபெறும் வாய்ப்பு உண்டு. தமிழ்நாட்டைப் பொறுத்த வரை அரிதாகவே இத்தகைய நிகழ்வு கள் ஏற்படும். 1991, 1996 ஆகிய இரண்டு தேர்தல்களில் எம்.ஜி.ஆர். காலத்து அ.தி.மு.க அரசியல்வாதி யான தாமரைக்கனி, திருவில்லி புத்தூர் தொகுதியில் சுயேட்சை யாக களம் கண்டு வெற்றி பெற்றிருக்கிறார். 1989 தேர்தலில் தி.மு.கவில் சீட் கிடைக்காத வாலாஜா அசேன் சுயேட்சையாக வெற்றி பெற்றார். தமிழ்நாட்டைவிட புதுச்சேரியில் இதுபோன்ற போட்டி வேட்பாளர்கள் களம்காண்பதும் வெற்றி பெறுவதும் அதிகம். அப்படி வெற்றி பெறுபவர்களை, சீட் தர மறுத்த கட்சி சமாதானப்படுத்தி, மீண்டும் கட்சியில் சேர்த்து, ஆட்சி அமைத்த வரலாறுகளும் உண்டு.

mavalianswers

Advertisment

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

இன்றைய தேர்தலில் கலகலத்துப் போனவர், கல கலப்பாக இருப்பவர், கலாய்த்துக் கொண்டிருப்பவர் யார்- யார்?

முந்தைய தேர்தல்களில் இருந்த கம்பீரத்தை உடல்நிலை யாலும் கட்சியின் பின்னடை வாலும் இழந்து கலகலத்துப் போனவர், விஜயகாந்த். இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக புதிய அரசியல் என மக்களிடம் கலகலப்பாக பேசுபவர், சீமான். அ.தி.மு.க-பா.ஜ.க. கட்டிய எய்ம்ஸ் மருத்துவமனையை கையோடு எடுத்துட்டு வந்துட் டேன் என்றபடி செங்கல்லை தூக்கிக் காட்டி கலாய்ப்பவர், உதயநிதி.

த.சிவாஜிமூக்கையா, தர்காஸ்

இந்துக்கள் ஓட்டு மட்டும் அதிகம் சிதறுவது ஏன்?

மற்ற மதங்களைவிட இந்து மதத்தில்தான் அதிகள விலான சாதிகளால் மக்கள் சிதறிக் கிடக்கிறார்கள். தேர்தல் ஓட்டுக்காக அதனை ஒட்டுப் போட நினைப்பது பலன் தர மறுக்கிறது.

________

தேர்தல்களம்

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72

தேர்தல்களில் கட்சிகள் தங்கள் பூத் ஏஜெண்ட்டுகளை நியமிக்கின்றனவே, அவர்களின் வேலை என்ன?

ஒரு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் எப்படி வாக்குப்பதிவு நடக்கிறது என்பதைப் பார்வையிடுவதற்கு சுயேட்சை வேட்பாளர் உள்பட அனைத்து வேட்பாளர்களுக்கும் அனுமதி உண்டு. ஆனாலும், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் காலை முதல் மாலை வரை எத்தனை வாக்குகள் பதிவாகின்றன, யார் யார் வாக்களிக்கிறார்கள் என்பதை வேட்பாளரால் கவனிக்க முடியாது. அதற்காக நியமிக்கப்படுபவர்கள்தான் பூத் ஏஜெண்ட்டுகள். இவர்களை நேரடியாக வேட்பாளரே நியமிக்கலாம். அல்லது வேட்பாளரின் அதிகாரப்பூர்வ தலைமை ஏஜெண்ட் நியமிக்கலாம். ஒரு பூத்துக்கு மூன்று பேரை ஏஜெண்ட்டாக ஒவ்வொரு வேட்பாளரும் நியமிக்க முடியும். மூவரில் ஒருவர் மட்டுமே வாக்குச்சாவடிக்குள் இருக்க முடியும். மற்றவர்கள் மாற்று ஏஜெண்ட்டுகளாக இருப்பார்கள். உள்ளே இருப்பவர் சாப்பிடுவதற்காக-அவசரத் தேவைக்காக வெளியே வரும் போது மற்ற இருவரில் ஒருவர் வாக்குச்சாவடிக்குள் அனுமதிக்கப்படுவார். ஒற்றை ஆளாக இருந்து வாக்குப்பதிவு முழுவதையும் கவனித்துக்கொள்ளும் பூத் ஏஜெண்ட்டுகளும் இருக்கிறார்கள். பூத் ஏஜெண்ட்டுகள் வாக்குப்பதிவுக்கு முன்னதாக நடைபெறும் மாதிரி வாக்குப்பதிவு நிகழ்வில் கலந்துகொண்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக இயங்குகின்றனவா, குறிப்பிட்ட சின்னத்திற்கான வாக்குகள் சரியாகப் பதிவாகின்றனவா என்பதை கவனித்து உறுதிப்படுத்த வேண்டும். மாதிரி வாக்குப்பதிவுடன், வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும். அந்த எண்ணிக்கையும் சரியாக இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும். வாக்குப்பதிவுக்கு முன்பாக, மின்னணு வாக்கு இயந்திரத்தில் எந்தவொரு கட்சிக்கும் சுயேட்சை வேட்பாளருக்கும் வாக்குகள் பதிவாகாமல் காலியாக இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். வாக்குகள் கோளாறு இல்லாமல் பதிவாகிறதா, வாக்காளர்கள் உரிய அடையாள அட்டைகளின் அடிப்படையில் அனுமதிக்கப்படுகிறார்களா, வாக்கு இயந்திரத்துடன் இணைக்கப்படும் விவிபேட் கருவி, சரியான சின்னத்தைக் காட்டுகிறதா -அது பற்றி புகார் வருகிறதா என்பதையும் பூத் ஏஜெண்ட்டுகள் கவனிக்க வேண்டும். வாக்குப்பதிவு நேரம் முடிந்ததும், வாக்குச் சாவடியில் எத்தனை வாக்குகள் பதிவாகியுள்ளன, மின்னணு இயந்திரம் சரியாக சீல் வைக்கப்பட்டுள்ளதா, அது பற்றிய விவரங்கள் அனைத்தையும் பதிவு செய்துகொள்ள வேண்டியதும் பூத் ஏஜெண்ட்டுகளின் முக்கியமான பணி. இந்த விவரங்களை தனது வேட்பாளரின் வாக்கு எண்ணிக்கை முகவரிடம் அவர் ஒப்படைத்துவிடுவார். வாக்கு எண்ணும்போது, இந்த விவரங்களை சரி பார்த்தே மின்னணு இயந்திரத்தில் உள்ள வாக்குகள் எண்ணப்படும். அதுவே வெற்றி-தோல்வியை முடிவு செய்யும்.