வாசுதேவன், பெங்களூரு

மேடை நாடகத்திற்கு ஒத்திகை, கிரிக்கெட் மாட்சிற்கு நெட் பிராக்டீஸ் .ஒப்பிடுக!

தனது குழுவினரின் ஒத்துழைப்பை நம்பி அரங்கேற்றத்திற்கு தயாராவது நாடக ஒத்திகை. அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சைப் போல! எதிரணியின் வியூகம் எப்படி இருக்கும் என்ற வியூகத்தை உணர்ந்து அதற்கேற்ப பயிற்சி பெறுவது கிரிக்கெட் நெட் பிராக்டீஸ். அரசியல் கட்சிகள் எதிர்கொள்ளும் தேர்தல் களம்போல!

பி.மணி, குப்பம், ஆந்திரா

Advertisment

கடவுள் மறுப்பு கொள்கைகளில் சித்தாந்தம்கொண்ட திராவிடக் கட்சிகள் ஓட்டுக்காக அதன் கொள்கைகளிலிருந்து நழுவுகிறதே?

எந்தவொரு அரசியல் கட்சியின் கொள்கையிலும் கடவுள் மறுப்பு என்பது கிடையாது. ஓட்டு அரசியலை திராவிடக் கட்சிகள் சரியாகவே புரிந்து வைத்திருக்கின்றன. அதனை வெறுப்பவர்கள், அதனிடம் ஜெயிக்க முடியாதவர்கள், திராவிட சித்தாந்தத்தை வீழ்த்த முடியாதவர்களின் புலம்பல் இது.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்.

Advertisment

"தியாகத் தலைவி' ஒதுங்கியிருக்கிறார்களா, அல்லது பதுங்கியிருக்கிறார்களா?

மிரண்டிருக்கிறார்கள்.

பா.ஜெயப்பிரகாஷ் , வசந்த நகர், அரண்மனைப்புதூர், தேனி மாவட்டம்

""குழந்தைகளை நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்கள். பின்னர் அரசாங்கத்தை ஏன் கல்விக் கட்டணம் செலுத்தச் சொல்கிறீர்கள் என்று உத்தரபிரதேச பா.ஜ.க. எம்.எல்.ஏ. ரமேஷ் திவார் கூறியுள்ளது குறித்து?

கட்சியை நீங்கள் ஆரம்பித்துக்கொள்கிறீர்கள். அப்புறம் என்ன கூந்தலுக்கு எங்களிடம் ஓட்டுக் கேட்டு வருகிறீர்கள் என்று உத்தரபிரதேச வாக்காளர்களில் ஒருவர் திருப்பிக் கேட்டால்?

சி. கார்த்திகேயன், சாத்தூர்

ராஜீவ் காந்தியின் அதிக எண்ணிக்கையிலான 1984 தேர்தல், ராகுல் காந்தியின் குறைவான எண்ணிக்கையிலான 2014 தேர்தல் காங்கிரசிற்கு உணர்த்துவது என்ன?

இரண்டுக்கும் காரணம் காங்கிரசின் சீனியர்கள்தான். இந்திராகாந்தி மரணத்தையடுத்து, ஓராண்டுக்கு முன்பாகவே தேர்தலை நடத்தினார் பிரதமர் ராஜீவ்காந்தி. கட்சியில் தன்னைவிட சீனியர்களைக் கையாள அவர் மேற்கொண்ட உத்தி வெற்றிகரமாக பலன் தந்தது. ராகுல் தலைமையிலான காங்கிரஸ் காலத்தில் பிரதமர் பதவியை அடைந்துவிட்டார் பா.ஜ.க.வின் நரேந்திர மோடி. காங்கிரசின் சீனியர்களை ராகுலுக்கு எதிராகவும், பா.ஜ.கவுக்கு ஆதரவாகவும் திருப்புவதிலும், காங்கிரஸ் ஆட்சி செய்த மாநிலங்களில் ஆட்சிக்கவிழ்ப்பு வேலைகளை மேற்கொள்வதிலும் மோடி-அமித்ஷா கூட்டணி வெற்றிகரமாக செயல்பட, 2014ல் அமேதியில் குறைந்த வாக்குகளில் வெற்றியும், 2019ல் தோல்வியுமாக ராகுல் தடுமாற வேண்டியதாயிற்று. கட்சியைக் காப்பாற்றுவதற்கு தண்டால் எடுக்கிறார் ராகுல்.

__________

தேர்தல் களம்

ம.ரம்யா ராகவ், வெள்ளக்கோவில் திருப்பூர் மாவட்டம்

இனி கோடம்பாக் கத்தில் இருந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போக வழி இருக்கிறதா?

கோடம்பாக்கம், மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் என எங்கிருந்து வேண்டுமானாலும் கோட்டைக்குப் போகலாம். அதற்கு மக்களின் க்ரீன் சிக்னல் வேண்டும். சினிமாவில் க்ளைமாக்ஸ் சீனில் வில்லனைத் துரத்தும் ஹீரோவின் சாகசம் போல ஒன்வேயில் புகுந்து சீக்கிரமாகப் போய்விடலாம் எனக் கணக்குப் போடக்கூடாது. காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் திரையுலகப் பிரபலங்கள் பலர் செல்வாக்காக இருந்திருக்கிறார்கள். கட்சிக்காகப் பரப்புரையும் செய்திருக்கிறார்கள். எனினும், தி.மு.க. மேடைகளும் மாநாடுகளும்தான் திரைக் கலைஞர்களுக்கு நேரடி அரசியல் வாய்ப்பை வழங்கியது. கே.ஆர்.ராமசாமி, டி.வி.நாராயணசாமி, காகா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உறுப்பினர்களாக இருந்து கட்சி வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்தனர். அதுபோலவே எஸ்.எஸ்.ராஜேந்திரன் கட்சி வளர்ச்சிக்காக நிறைய பொருட்செலவு செய்தவர். கட்சி வளர்ச்சிக்காக நாடகங்களில் நடித்தவர். கட்சிக் கொள்கைக்கு விரோதமான சினிமா கதாபாத்திரங்களில் நடிக்க மறுத்தவர். அறிஞர் அண்ணாவின் அன்பிற்குரியவர். அவர் 1962 சட்டமன்றத் தேர்தலில் தேனி தொகுதியிலிருந்து தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றார். இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு நடிகர் பெற்ற முதல் வெற்றி என்பது இதுதான். பின்னர், தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் ஆனார். கட்சி வளர்ச்சிக்காகவே தன்னை அர்ப்பணித்த எஸ்.எஸ்.ஆர். பிற்காலத்தில் உள்கட்சி அரசியலால் பாதிப்புக்குள்ளாகி தி.மு.க.விலிருந்து அ.தி.மு.க. அதன்பின் சொந்தக் கட்சியான எம்.ஜி.ஆர்.-எஸ்.எஸ்.ஆர் கழகம் எனப் பயணித்தார். வெற்றி அமையவில்லை. 1967 தேர்தலில் பரங்கிமலை (இன்றைய ஆலந்தூர்) தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர்., தேர்தல் நெருக்கத்தில் எம்.ஆர்.ராதாவால் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையிலும் மகத்தான வெற்றி பெற்றார். 1971 தேர்தலிலும் தி.மு.க. வேட்பாளராக வெற்றி பெற்றார். பின்னர் அ.தி.மு.க. என்ற தனிக்கட்சி கண்டு மும்முறை முதலமைச்சர் ஆனார். அரசியலுக்கு ஆசைப்படும் சினிமா நடிகர்கள் எல்லாரும் எம்.ஜி.ஆராக நினைத்துக்கொள்கிறார்கள். ஆனால், அவர்களில் பலர் எஸ்.எஸ்.ஆர். நிலையில்தான் இருக்கிறார்கள். இரண்டு சொந்தக் கட்சிகளை ஆரம்பித்த டி.ராஜேந்தர், ஒருமுறை கூட தேர்தலை சந்திக்காமல் கட்சி நடத்திய கே.பாக்யராஜ், ஒரே தேர்தலில் அரசியலைப் புரிந்துகொண்ட நடிகர் திலகம் சிவாஜிகணேசன், பெரிய கட்சிகளின் துணையால் -கூட்டணியால் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளை அனுபவித்த சரத்குமார், நெப்போலியன், வைஜெயந்திமாலா, ராமராஜன் என நட்சத்திரப் பட்டியல் நீளும். எல்லாரும் எம்.ஜி.ஆர். போல ஆகவேண்டும் என நினைத்தவர்கள்தான். எஸ்.எஸ்.ஆரின் அனுபவம்தான் கிடைத்தது.