ம.தமிழரசிமணி வெள்ளக்கோவில்

அ.தி.மு.க.விற்கு ஆதரவாக இருக்கும் பா.ஜ.க மற்றும் அதனின் கைப்பாவையாக செயல்படும் ஆளுநர் என்று தெரிந்தும் தி.மு.க. எந்த நம்பிக்கையில் அ.தி.மு.க.வின் ஊழல் பட்டியலை ஆளுநரிடம் தருகிறார்கள்?

ஆளுநர் என்று அந்தப் பதவிக்குப் பெயர் இருந்தாலும், மாநிலத்தை நாளை ஆளுகின்ற வாய்ப்பைத் தரக்கூடியவர்கள் மக்கள்தான். “""நல்லா பார்த்துக்குங்க மக்களே... நாங்க இந்த ஆட்சி மேலே ஆதாரத்தோடு ஊழல் புகார் கொடுத் திருக்கிறோம்''’என்கிற பரப்புரைதான் ராஜ்பவனில் தி.மு.க. கொடுத்த இரண்டுகட்ட ஊழல் பட்டியல்.

வாசுதேவன், பெங்களூரு

Advertisment

""பத்து வருடங்களாக லாக்டவுனில் இருக்கிறேன்'' என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளாரே?

அரசியல் -சினிமா -தனிப்பட்ட சிக்கல்களால் அவர் லாக்டவுனில் இருக்கலாம். ஆனால், கொரோனா லாக்டவுன் உள்பட எல்லா நேரத்திலும் ஒவ்வொரு வீட்டிலும் அவர் தான் மனஅழுத்தம் போக்கும் நகைக்சுவை மருத்துவர்.

ஆற்காடு விநாயகம். ராணிப்பேட்டை.

Advertisment

""தான் மந்திரவாதி அல்ல செயல்வாதி'' என்றும் ""மக்கள் அழைத்தால் ஓடோடி வருவேன்'' என்றும் முதல்வர் கூறியுள்ளாரே?

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டின்போதும், கஜா புயல் பாதிப்புகள்போதும் மக்களின் கூக்குரலுக்கு எப்படி ஓடோடி வந்தார் என்பதை தமிழகம் பார்த்தது. அவர் செயல்வாதிதான். மத்தியில் இருக்கும் இரண்டு மந்திரவாதிகள் சொல்வதையெல் லாம் நிறைவேற்றும் செயல்வாதி.

சி. கார்த்திகேயன், சாத்தூர்.

எம்.கே.டி., ஜெமினிகணேசன், கமல்ஹாசன், கார்த்திக், விஜய்க்கு அடுத்து தமிழ் சினிமாவில் காதல் மன்னன் வரவில்லையே?

காதலுக்கு தோற்றப்பொலிவு முக்கியம் என்பதாக கதைகள் இருந்தபோதும், அதனையே ரசிகர்கள் விரும்பியபோதும் காதல் கதாநாயகர்கள் வந்தார்கள். பார்க்காமலே காதல், பேசாமலே காதல், ஆன்லைன் காதல் எனக் கதைக்களங்கள் மாறியதும், சிவப்புதான் அழகு என்ற பிரமை தகர்க்கப்பட்டு, கறுப்பும் ஈர்க்கும் என்பதை ரசிகர்கள் ஏற்றதும்கூட இன்றைய எல்லா ஹீரோக்களையும் காதல் மன்னர்களாக்கிவிட்டன.

bb

பா.ஜெயப்பிரகாஷ், தேனி

வள்ளுவருக்கு குடுமி வைத்துவிட்டார்களே?

காவி கட்டிவிட்டு, வாங்கிக் கட்டிக்கொண்டது பா.ஜ.க. நிர்வாகம். அதனால், பா.ஜ.க. ஆட்சியின் கீழ் உள்ள சி.பி.எஸ்.இ.யின் பாடப் புத்தகத்தில் வள்ளுவர்-வாசுகி கதை என்ற பெயரில் வள்ளுவருக்கு குடுமி வைத்து, தமிழ்ப் பண்பாட்டை இழிவுபடுத்தியிருக்கிறது. வள்ளுவர் எப்படி இருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால், மக்கள் மனதில் நிலைத்த வள்ளுவர், குமரி முனையில் உயர்ந்து நிற்கிறார்.

___________

தேர்தல் களம்!

மு.முஹம்மது ரபீக் ரஷாதீ எம்.ஏ விழுப்புரம்

நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் முன் பிரதமர் மோடி தனது கணிப்பை வெளியிடுகிறார் இது அவரது கணிப்பா? அல்லது தேர்தல் ஆணையத்திற்கு கட்டளையா?

தேர்தல் ஆணையம் தன்னாட்சி பெற்ற அமைப்பு என்றாலும், ஆட்சியாளர்கள் அதில் தங்கள் விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வது நெடுங்காலமாகத் தொடர்கிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் உள்ளிட்ட தேர்தல் அதிகாரிகள் நியமனத்திலும், அவர்களின் அதிகார வரம்பிலும் மத்திய ஆட்சியாளர்கள் தலையிடுவதை இந்தியா பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. முன்பெல்லாம் அது ரகசியமாக இருக்கும். பூடகமாக இருக்கும். அல்லது, குறைந்தபட்ச நியாயத் தோற்றமாவது வெளிப்படும் விதத்தில் இருக்கும். வேட்புமனு தாக்கல் செய்பவர், அதற்குரிய தேர்தல் அலுவலர் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும். அமெரிக்காவில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்றுவந்தபோது, 1984ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவிலிருந்து ஆண்டிப்பட்டி தொகுதியில் எம்.ஜி.ஆர். போட்டியிட்டார். அதற்கு முந்தைய தேர்தல் வரை வேட்புமனுவில் கையெழுத்திட்டிருந்த எம்.ஜி.ஆர்., அந்தத் தேர்தலுக்கான வேட்புமனுவில் கைரேகை பதித்திருந்தார். "உடல்நலிவுற்று- நினைவிழந்த நிலையில் அமெரிக்கா கொண்டு செல்லப்பட்ட எம்.ஜி.ஆர் எப்படி வேட்புமனு தாக்கல் செய்யமுடியும்' என அதற்கு எதிராக முறையிட்டார், தி.மு.க. கூட்டணி சார்பில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்ட ஃபார்வர்டு ப்ளாக் கட்சி வேட்பாளர் பி.என்.வல்லரசு. மாநிலத்தில் ஆட்சி செய்த அ.தி.மு.கவும், மத்தியில் ஆட்சி செய்த காங்கிரசும் ஒரே கூட்டணியில் இருந்ததால், பிரதமர் ராஜீவ்காந்தி சட்டரீதியான வழிமுறைகளைக் கையாண்டார். அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி முன்னிலையில், எம்.ஜி.ஆர். தன் ஒப்புதலைத் தெரிவித்து வேட்புமனுவில் கைரேகை வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது இருந்ததைவிட, எம்.ஜி.ஆரின் உடல்நலன் பெருமளவு முன்னேறியிருக்கிறது என்பதற்கு சான்றாக போட்டோக்கள், வீடியோக்களை மக்களிடம் வெளியிட்டது அ.தி.மு.க. இதே வாய்ப்பு மற்ற வேட்பாளர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் என்றாலும், எதிர்த்தரப்பின் முறையீட்டுக்கு பதில் சொல்லவாவது வேண்டுமே என ஆளுங்கட்சிகள் நினைத்த காலம் அது. இப்போதோ, பிரதமர் மோடி வெளிநாட்டில் இருந்தால், அவர் மாநிலமான குஜராத்தின் சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவிக்கத் தயங்கி, ஒத்திப்போடுகிறது தேர்தல் ஆணையம். அந்தத் தேர்தல் ஆணையம் அறிவிப்பதற்கு முன்பாகவே, மேற்குவங்க மாநிலப் பிரச்சாரத்திற்கிடையே தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என, தானே அறிவிக்கிறார் பிரதமர் மோடி.