செந்தில்குமார். எம் சென்னை - 78
டிடிவி தினகரனை நம்பினால் சசிகலாவிற்கு அழிவு நிச்சயம் என நாஞ்சில் சம்பத் எதை வைத்து சொல்கிறார்?
அரசியலில் சொந்த அனுபவங்கள் பல நேரங்களில் பொது இலக்கணமாக மாறுவது உண்டு.
ம.ரம்யா மணி வெள்ளக்கோவில்
முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது?
பட்ஜெட்டுகள் கணினிமயமாகி பல ஆண்டுகள் ஆகிவிட்டதை சுட்டிக்காட்டும் பொருளியல் ஆய்வாளர் நரேன் ராஜகோபாலன், டிஜிட்டல் முறையில்தான் பல துறைகளின் விவரங் களும் தொகுக்கப்பட்டு, அந்தந்த துறைக்கான தேவைகள், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் உள்ளிட்ட அனைத்தும் கணினி வழியாகத்தான் பல ஆண்டுகளாக வடிமைக்கப் படுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார். நிதி அமைச்சர்கள்தான் அதனை காகிதத்தில் பிரிண்ட் எடுத்து படித்து வந்தார்கள். தற்போது பள்ளிக்கூட மாண வர்களுக்கே லேப்டாப் வழங்கப்படும் யுகத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காகிதமில்லா பட்ஜெட் என்கிறார். அதுவும் பிரேக்கிங் நியூஸ் ஆகிறது. பட்ஜெட் என்பது எளிய மக்களுக்கு எந்த வகையில் உதவியாக இருக்கிறது என்பதால் எடைபோடப்பட வேண் டும். காகித பட்ஜெட்டா, காகிதமில்லா பட்ஜெட்டா என்று எடை போடக் கூடாது.
சி. கார்த்திகேயன், சாத்தூர்
சச்சின் டெண்டுல்கரும் பொதுப் பிரச்சனை,பற்றி பேசுகிறாரே?
மோடி அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக வெளிநாட்டுப் பிரபலங்களின் குரல்கள் ஒலித்து வருகின்றன. நாம் ஏன் இதுபற்றி பேசாமல் இருக்கிறோம் என உலகத்தை நோக்கி ட்வீட் செய்தார் மேற்கத்திய பாடகி ரிஹானா. அதுபோலவே மனித உரிமை செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பர்க்கும் விவசாயி களுக்கு ஆதரவு தெரிவித்து ட்வீட்டினார். கமலாஹாரிஸின் உறவினர் மீனா ஹாரிசும் கருத்து தெரிவித்தார். இந்தியாவின் பிரச்சினைக்கு வெளிநாட்டவர் எப்படி கருத்து சொல்லலாம் என்பதுதான் சச்சின் டென்டுல்கரின் கோபக் கேள்வி. அதற்கு முன், சொந்த நாட்டு விவசாயிகள் பிரச்சினையில் சச்சின் கொடுத்த குரல் என்ன என்பதும் மக்களின் கேள்வியாக உள்ளது.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77
ரஜினியின் முடிவு!! மு.க. அழகிரியின் அமைதி!!?
ரஜினிக்கு ரசிகர்கள் என்ற மக்கள்தான் சொத்து. தேர்தல் அரசியலுக்காக அவர் அதை இழக்க விரும்பவில்லை என்பதையே அவரது முடிவு காட்டுகிறது. மு.க.அழகிரிக்கு தி.மு.க எனும் கட்சிதான் சொத்து. உடன்பிறப் பாயிற்றே! தனக்கான பங்கு பற்றிய கணக்குகளுடன் அமைதியாக யோசிக்கிறார் போலும்.
_______________
தேர்தல் களம்
வாசுதேவன், பெங்களூரு.
அந்த காலத்தில் பல வண்ண காகிதங்களில் தேர்தல் வாக்குறுதிகள் வலம் வந்தனவே நினைவில் வருகின்றதா?
வாக்குறுதிகள் எப்போதுமே வண்ணமயமாகத்தான் இருக்கும். ஆட்சியாளர்கள் அதனை எப்படி நிறைவேற்றுகிறார்கள் என்பது பெரும்பாலும் கறுப்பாகவும், எதுவுமே எழுதப்படாத தாள் போல வெள்ளையாகவும் ஆகிவிடுகிறது. அதனால்தான் கறுப்பு எழுத்துகளால் ஆன புள்ளிவிவரங்களுடன் கூடிய வெள்ளை அறிக்கையைக் கொடுங்கள் என எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கேட்க வேண்டிய காலம் உருவாகிறது. ‘கூலி உயர்வு கேட்டான்- அத்தான், குண்டடிபட்டு செத்தான்’ என்று காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக தி.மு.க முன்வைத்த தேர்தல் பரப்புரை வாசகம். அப்போது, அறிஞர் அண்ணாவே பல வாசகங்களை தன் கையால் எழுதி அச்சுக்கு அனுப்பிய காலம். 1967 தேர்தலில் ‘மூன்று படி அரிசி லட்சியம். ஒரு படி அரிசி நிச்சயம்’ என்ற வாக்குறுதியை அண்ணா வழங்கினார். ஆனால், அதனை முழுமையாக நிறைவேற்ற பல காலம் ஆனது. 2007ல் 2ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டம் கலைஞர் ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, பின்னர் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ என்றானது. ஏழைப் பெண்களின் தாலிக்குத் தங்கம் என 1980 பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. அதனை நிறைவேற்ற தாமதமானதால், தாலிக் கயிறு இங்கே? தங்கம் எங்கே?’ என்று பிரச்சாரக் களம் சூடு பிடித்தது.
“கொடுத்து சிவந்த கரம் கும்பிட்டுக் கேட்கிறது ஆதரிப்பீர் இரட்டை இலையை’ என எம்.ஜி.ஆர். படத்துடன் அ.தி.மு.க. செய்த விளம்பரமும், ‘சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம்’ என கலைஞர் படத்துடன் தி.மு.க செய்த விளம்பரமும் இடம்பெற்ற தேர்தல் களங்களை மறக்க முடியாது. ‘உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்’ என்ற தி.மு.க.வின் வாக்குறுதி, டெல்லி வரையிலான அதன் செல்வாக்கிற்கு வழி வகுத்தது. அவரவர் தொகுதிகளிலும் என்னென்ன நிறைவேற்றப்படும் என்பதை வாக்குறுதிகளாக அளித்த கட்சி வேட்பாளர்களும் சுயேட்சை வேட்பாளர்களும் இப்போதும் இருக்கிறார்கள். ஊடக வளர்ச்சியின் காரணமாகத் தனித்தனி வாக்குறுதிகளைவிட, தேர்தல் அறிக்கை என்கிற ஒட்டுமொத்த வாக்குறுதிகள் மக்களின் கவனத்தை அதிக அளவில் ஈர்க்கின்றன. 2006 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை ‘கதாநாயகன்’ எனப் போற்றப்பட்டது. 2016 சட்டமன்றத் தேர்தலில் பெண்களுக்கான ஸ்கூட்டி திட்டத்துடனான அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை கடைசி நேரத்தில் கச்சிதமாக வேலை செய்தது. ஏமாற்றம் அளித்த வாக்குறுதிகளும் ஏராளம் உண்டு.