பி.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர் -தேனி
கர்மவீரர் "காமராஜர்' -"அக்னிச்சிறகுகள் அப்துல்கலாம்' -ஒப்பிடுங்களேன்.
அரசியலில் இருந்தும் பிரதமர் பதவியை வேண்டாம் எனத் துறந்தவர் காமராஜர். அரசிய லுக்கு வராமலேயே ஜனாதிபதி பதவியை அடைந்தவர் அப்துல்கலாம். ஏற்ற பொறுப்புகளில் மக்களுக்கான திட்டங்களை வகுத்தவர் காமராஜர். கிடைத்த பதவியில் மக்களின் நம்பிக்கையைப் பெற்றவர் கலாம்.
தா.விநாயகம், ராணிப்பேட்டை.
"அ.தி.மு.க.வை மீட்பதே எங்கள் தாரக மந்திரமாக இருக்கும்' என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளரே?
அ.தி.மு.க.வை சசிகலாவிட மிருந்து மீட்பதற்காக "தர்மயுத்தம்' நடத்தினார் ஓ.பி.எஸ். இப்போது "அ.தி.மு.க.வை இ.பி.எஸ்.ஸிடமிருந்து மீட்பதாக' டி.டி.வி.தினகரன் சொல்கிறார். "அ.தி.மு.க.விட மிருந்து தமிழகத்தை மீட்போம்' என்கிறார் ஸ்டாலின். யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது விரைவில் தெரியும்.
செந்தில்குமார். எம் சென்னை - 78
கட்சித் தலைவர்களுக்கு சிலை வைப்பது, கோயில் கட்டுவது, அப்புறம் என்ன?
தலைவர்களுக்கு செய்யும் மரியாதை என்பதைத்தாண்டி, தேர்தல் நேரத்தில் வாக்குகளைக் கவரும் உத்தியாகவும் இது கையாளப்படுகிறது. ஆனால், மறைந்த தலைவர்களை முன்னிறுத்தி ஓட்டுக் கேட்டு யாரும் பெரிய வெற்றியைப் பெற்றதில்லை. அதே நேரத்தில், மறைந்த தலைவர்களை அரசியலுக்கு அப்பாற்பட்டு, அவர்களின் செயல்பாடு களுக்காகப் பொதுமக்கள் மதிக்கிறார்கள். கலைஞர் எதிர்ப்பு என்ற ஒற்றை நோக்கத்தில் உருவாக்கப்பட்டது அ.தி.மு.க. எனும் கட்சி. "தீயசக்தி' என்று வார்த்தைக்கு வார்த்தை சொன்னவர் ஜெயலலிதா. அந்த ஜெயலலிதாவின் நினைவிடத் திறப்பு விழாவுக்கு ஜெ படம் போட்ட பனியன், இ.பி.எஸ். படம் போட்ட பனியனுடன் பல ஊர்களிலிருந்தும் அழைத்து வரப்பட்ட அ.தி.மு.க தொண்டர்கள் தங்கள் கட்சிக் கொடியுடனும் கட்சிக்கரை வேட்டி- துண்டுடனும் கலைஞரின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியதும், கலைஞரின் செயல்பாடுகளைப் பாராட்டி மீடியாக்களில் பேசியதும், மறைந்த தலைவர்களை தமிழகம் எப்படி மதிக்கிறது என்பதற்கும் -திராவிட அரசியல் எந்தளவு தாக்கத்துடன் இருக்கிறது என்பதற்குமான அடையாளம்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்
"நான் கூறினால் நாளைக்கே ஒரு லட்சம் பேர் சசிகலா ஒழிக என்று போஸ்டர் ஒட்டுவார்கள்' என்கிறாரே சி.வி சண்முகம்?
எந்த சி.வி. சண்முகம்? ஓர் இரவு நேரத்தில் போயஸ் கார்டன் வாசலில் ரொம்ப ஸ்டெடியாக நின்றபடி ‘"எங்கம்மாடா... சின்னம்மாடா'’என்று பலகோடி பேர் பார்க்கும் மீடியாவில் லைவ்வாகப் பேசினாரே அவரா? அப்ப சரி... அப்ப சரி.
வாசுதேவன், பெங்களூரு
பத்திரிகைகளுக்கு கதை எழுதுவது, சினிமாவிற்கு கதை எழுதுவது என்ன வித்தியாசம்?
நூறு மீட்டர் ஓட்டத்தில் ஓடுவதுபோல இருக்கும் பத்திரிகைகளுக்கான கதை. சினிமாவிற்கான கதையிலோ ஆயிரத்து ஐநூறு மீட்டர் ஓட்டத்தில் கடைசிவரை நூறு மீட்டர் ஓட்டத்திற்கான வேகம் இருக்க வேண்டும்.
மீ.யூசுப் ஜாகிர், வந்தவாசி.
தேர்தலுக்கு தேவையானவை எல்லாம் தயாராகிவிட்டதா?
ஆளுந்தரப்பில் ஏற்கனவே கண்டெய்னர் கண்டெய்னராகத் தயாராகிவிட்டது. எதிர்த் தரப்பில் தயாராகிக் கொண்டிருக்கிறது.
____________
தேர்தல் களம்!
ம.ராகவ்மணி குப்பம் ஆந்திரா
காலையில் ஒரு கட்சியில் இருப்பவர் மாலையில் மற்றொரு கட்சிக்கு சென்றுவிடுகிறார். இந்தியாவில் உள்ள அனைத்து கட்சியிலும் இது நடக்கிறது. இதனை கட்சியோ அல்லது தேர்தல் ஆணையமோ கட்டுப்படுத்த முடியாதா?
ஒரே கட்சியில்தான் இருந்தாக வேண்டும் என்றிருந்தால் தமிழ்நாட்டில் பகுத்தறிவு இயக்கத்தைத் தொடங்கி இந்தியா முழுவதும் போற்றும்படியான ஒரு பெரியார் கிடைத்திருக்க மாட்டார். எம்.ஜி.ஆர். தொடர்ச்சியாக மூன்று முறை முதல்வராகியிருக்க மாட்டார். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என நான்கு முதலமைச்சர்களின் அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் நாவலர் நெடுஞ்செழியன் இருந்திருக்க மாட்டார். இந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான மண்டல் கமிஷனின் 27% இடஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதிக் காவலர் எனப் பெயர் பெற்ற வி.பி.சிங் பிரதமராகியிருக்க மாட்டார். ஒரே கட்சியில் ஒருவர் காலம் எல்லாம் இருக்க வேண்டும் என்பதில்லை. கொள்கைகளும் வழிமுறைகளும் செயல்படுத்தும் நடைமுறைகளும் பிடித்திருந்தால் நீடிக்கலாம். இல்லையென்றால், தனக்கானக் கொள்கையுடன் தனிக்கட்சி தொடங்கி, அதற்கு மக்களிடம் அங்கீகாரம் பெற்று தேர்தல் களம் காணலாம். அடிமைக்கூட்டமாக இருப்பதைவிட சுயமரியாதையாக இருப்பது சிறந்தது. சுயநலத்திற்காக கட்சி மாறுவதும், தன்னைத்தானே விற்றுக்கொண்டு லாபம் தேடுவதும்தான் சமூகக் கேடு. ஒரு கட்சி சார்பில் எம்.பி.யாகவோ, எம்.எல்.ஏ.வாகவோ மக்களின் பெருவாரியான ஆதரவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன்பின் இன்னொரு கட்சிக்குத் தாவிய இன்றைய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் முதல் அன்றைய எம்.எல்.ஏ மன்னார்குடி அம்பிகாபதி வரை தமிழக அரசியல் வரலாற்றில் பலர் உண்டு. இவர்களைப் போன்றவர்கள்தான் தங்களுக்கு சீட் கொடுத்த கட்சிக்கும் வாக்களித்த மக்களுக்கும் துரோகம் செய்தவர்கள். ஒரு கட்சியில் எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.வாகி இன்னொரு கட்சிக்குத் தாவுவதைத் தடுப்பதற்காக ராஜீவ்காந்தி ஆட்சியில் கட்சித்தாவல் தடுப்புச் சட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு இன்றளவும் உள்ளது. ஆனால், அதன் மீது முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகர் கையில் இருப்பதால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கு பதவிப் பறிப்பும், ஓ.பி.எஸ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களுக்கு பதவி தொடர்வதுமாக ஜனநாயக வினோதங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.