கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூரு 77.
சசிகலா குறித்து, உதயநிதி ஸ்டாலின் பேச்சு பற்றி? இதுகுறித்து முதலில் கண்டனம் தெரிவித்து உள்ளவர்கள் குஷ்பு, வானதி ஸ்ரீனிவாசன், காயத்திரி ரகுராம்! இது பற்றி?
கூட்டம் சேர்கிறது. கைத்தட்டுகிறார்கள் என்பதால் உணர்ச்சிவசப்படுவது அரசியலில் வளர்பவர்களுக்கு வழக்கமாகி விட்டது. உதயநிதி பேசியதும் அப்படித்தான். அதனை பா.ஜ.க.வை சேர்ந்த பெண்கள் விமர்சிப்பதில் எந்தத் தவறும் இல்லை. அதே சசிகலாவை, ஆடிட் டர் குருமூர்த்தி பேசியதற்கும் வாய் திறந்தால் அவர்களின் அரசியல் நேர்மை அறியப்படும்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
பெண்கள் பாலியல் பலாத்காரத்தை விட்டு தப்பிக்க மாலை 6 மணிக்கு மேல் வெளியே செல்லாமல் இருக்க வேண்டும் அல்லது வெளியே செல்லும் பொழுது கைக்குழந்தையை அழைத்துச் செல்ல வேண்டும் என ஆலோசனை தருகிறார் தேசிய மகளிர் ஆணைய தலைவி சந்திரமுகி?
ஒரு பெண் நள்ளிரவில் உடல் நிறைய நகைகள் அணிந்துகொண்டு தன்னந் தனியாக எவ்வித அச்சமும் ஆபத்தும் இன்றி பயணிப்பதே நான் விரும்பும் ராமராஜ்ஜியம் என்றார் தேசத்தந்தை காந்தி. ஆனால், ராமர் ராஜ்ஜியம் அமைக்கப்போகிறோம் என்ற பெயரில் மதவெறியைத் தூண்டி, மசூதிகளை இடித்து மத்தியில் ஆட்சிக்கு வந்தவர்களும், அவர்களால் நியமிக்கப் பட்டவர்களும் பெண்கள் பாதுகாப்பு குறித்த தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் விதத்திலேயே பேசுகிறார்கள். காஷ்மீர், உத்தரபிரதேசம் தொடங்கி தமிழ்நாட்டின் நாகை வரை சிறுமிகள் முதல் குடும்பப்பெண்கள் வரை அனைத்து வயதினரும் பாலியல் கொடுமைக்குள்ளாகும் கொடுமையான காலத்தில், அதிகாரத்தில் இருப்பவர்கள் முழுமையான சந்திரமுகியாகவே மாறிவிடுகிறார்கள்.
பி.ஜெயப்பிரகாஷ், அரண்மனைப்புதூர், தேனி
மத்திய பா.ஜ.க. அரசு, மேற்கு வங்க திரிணாமுல் காங்கிரஸை சிதைக்க முயல்வது போல் கேரளா அரசை ஏன் தொடமுடியவில்லை?
எதிரிக்கு எதிரி நண்பன் என்பார்கள். அதே அரசியலில் எதிரியேகூட பலமாக இருந்தால் பாதுகாப்பான நண்பனாக இருக்கலாம். மேற்குவங்கத்தில் ஒரு காலத்தில் இடதுசாரிகளான மார்க்சிஸ்ட் கூட்டணி ஆட்சியும் எதிர்க்கட்சியாக காங்கிரசும் இருந்தன. இடதுசாரி அரசை வீழ்த்தினார் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜி. கடந்த 10 ஆண்டுகளில் அங்கே மார்க் சிஸ்ட்டும் காங்கிரசும் தேய்ந்துவிட்டன. மம்தாவை எதிர்க்கும் கட்சியாக பா.ஜ.க. வளர்ந்துவிட்டது. தற்போது மாநிலத்தில் ஆட்சியை குறிவைக்கும் பா.ஜ.க., மத்தியில் உள்ள தன் அதிகார பலத்தால் திரிணாமூலை சிதைக் கிறது. கேரளத்திலோ, சபரிமலையை வைத்து பா.ஜ.க அரசியல் செய்தாலும் நாடாளுமன்றத் தேர்தலில் அதற்குரிய வாக்குகளை காங்கிரஸ்தான் அறுவடை செய்தது. கேரளாவில் இன்னமும் காங்கிரஸ் பலமாக இருப்பது ஒருவகையில் இடதுசாரிகளை பா.ஜ.க.விடமிருந்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. எதிரியும் நண்ப னாகும் அதிசயம் இது.
நித்திலா, தேவதானப்பட்டி
பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளதே?
அதனால் என்ன தமிழக அரசியல் தலைவர்கள்தான் மாட்டு வண்டியை தேர்ந்தெடுத்துவிட்டார்களே!
___________
தேர்தல் களம்
பி.மணி, குப்பம், ஆந்திரா மாநிலம்
மத்திய அரசின் மகுடிக்கு பாம்பாக ஆடுகிறதா தேர்தல் ஆணையம்?
பிரதமர் இந்திராகாந்தியின் தேர்தல் வெற்றி குறித்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் பாரபட்சமான அணுகுமுறைகள் நீதிமன்றத்தின் மூலமே அம்பலப்படுத்தப்பட்டு, இந்திராவின் வெற்றி செல்லாது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. ராஜீவ்காந்தி காலத்திலும் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் குரலுக்கு கட்டுப்பட்டே இருந்தது. அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.ஆரின் வேட்புமனுவை ஏற்பதில் தொடங்கி, அவர் முதல்வராக பதவிப்பிரமாணம் ஏற்பது வரை தேர்தல் ஆணையம்- கவர்னர் மாளிகை என எல்லா இடத்திலும் பிரதமர் அலுவலகத்தின் அதிகாரம் உள்நுழைந்தது. தலைமைத் தேர்தல் ஆணையராக டி.என்.சேஷன் பதவியேற்ற போதுதான், தேர்தல் ஆணையத்தின் தனித்துவ மும் அதன் தன்னிச்சையான அதிகார பலமும் வெளிப்படத் தொடங்கியது. அதிலும் சாதக- பாதகங்கள் இருந்தன. ஒற்றைத் தலைமையில் தேர்தல் ஆணையம் இயங்கக்கூடாது என கூடுதல் ஆணையர்களும் நியமிக்கப்பட்ட அரசியலும் தொடர்ந்தது. இன்றளவும் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் மகுடி நாதத்திலிருந்து விலக முடிய வில்லை. குஜராத் சட்டசபைத் தேர்தல் தேதியை நிர்ணயிப்பது முதல் பலவற்றிலும் பாரபட்சம் வெளிப்பட்டது. தற்போது தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அளித்த பேட்டியில், மத்திய அரசின் நெறிமுறைப்படி தமிழக சட்ட மன்றத் தேர்தலை நடத்துவோம் என்கிறார். அது மட்டுமல்ல, தேர்தல் செலவுக்காக மாநில அரசிடம் தோராயமாக 621 கோடி ரூபாய் கேட் டுள்ளோம் என்கிறார். தோராயம் என்பது 500, 600 என்று முழு தொகையாக இருக்கும். துல்லியம்தான் 621 என்ற எண்ணிக்கையாக இருக்க முடியும். ஜெயலலிதாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் ராசியான கூட்டுத்தொகையான 9 வர வேண்டும் என்பதுதான் இந்தத் தோராயத்தின் பின்னணி.