கே.முரளி, புதுப்பெருங்களத்தூர்
கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரின் அரசியல் அணுகுமுறைகளுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது?
கட்சி நடத்தும் கமல்ஹாசனுக்கு இப்போது சினிமா ஷூட்டிங் இல்லை. கட்சி ஆரம்பிக்க நேரம் பார்க்கும் ரஜினிக்கு புதுப்பட ஷூட்டிங் தொடர்கிறது.
நித்திலா, தேவதானப்பட்டி
சர்வதேச அளவிலான தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கம் வாங்கித் தந்துள்ள ஹிமாதாஸின் சாதனை?
பி.டி.உஷாவில் தொடங்கி ஓட்டம், தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் என சர்வதேச அளவில் இந்தியாவின் சார்பாக ஆண்களைவிட பெண்களே அதிகம் இடம்பெற்றுள்ளனர். நெருங்கி வந்த பதக்க வாய்ப்புகள் பலமுறை நழுவிப்போயுள்ள நிலையில்... அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது ஹிமாதாஸ், அண்மையில் பின்லாந்து நாட்டில் நடந்த உலக ஜூனியர் தடகள போட்டியின் 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 51.46 நொடிகளில் இலக்கை அடைந்து "இந்தியாவின் தடகள தங்க மங்கை' என்ற சிறப்பைப் பெற்றிருக்கிறார். எளிமையான விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஹிமாதாஸ் படித்தது தாய்மொழிக் கல்விதான். ஆங்கிலம் அதிகம் அறியாதவர். கால்பந்து, கபடி விளையாடுவதில் ஆர்வம் உடையவர். குடும்பத்திற்கு உதவியாக விவசாய நிலத்தில் டிராக்டர் ஓட்டிப் பழகுவார். அவரிடம் உள்ள திறமைகளைக் கண்ட பள்ளி ஆசிரியர்தான் தடகளப் போட்டி பக்கம் கவனத்தை திருப்பி, பயிற்சியளித்து முன்னேற்றியுள்ளார். அடுத்தடுத்து நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக் போட்டி ஆகியவற்றிலும் ஹிமாதாஸின் சாதனைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. விளையாட்டில் மட்டுமின்றி, தன்னைப் போன்ற மாணவர்கள் கல்வி கற்க உதவுவது, பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த உள்ளூர் சாராயக் கடையை அடித்து நொறுக்கியது என ஹிமாதாஸின் சமூக அக்கறையும் கவனிக்கத்தக்கது. ஆனால், அதையெல்லாம் கவனிப்பதைவிட ஹிமாதாஸ் என்ன சாதி என்பதே கூகுளில் அதிகம் தேடப்பட்டிருக்கிறது. இதுதான் இந்தியா!
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
தமிழக ஆட்சியாளர்கள் எப்போதும் மக்களை அச்சத்தில் வைத்திருப்பதையே விரும்புவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் கூறுகிறாரே?
இருட்டு நேரத்தில் தனியாக நடந்துசெல்பவருக்கு பயம் ஏற்படும்போது, சத்தமாக பாடி ஊரில் உள்ளவர்களையெல்லாம் பயமுறுத்துவது வழக்கம். ஆட்சியாளர்கள் அப்படித்தான் மக்களை எல்லா வகையிலும் பயமுறுத்துகிறார்கள்.
அயன்புரம் த. சத்தியநாராயணன், சென்னை-72
ரசாயனம் கலந்த மீன்கள் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே?
மீன் என்பது சத்தான உணவு. சுவையானது. எளிதில் கிடைக்கக்கூடியது. ஆனால் வியாபாரம் என்று வரும்போது, எல்லாமே கலப்படமாகி, பெருமுதலாளிகளுக்கு அதிக லாபம் தருகிறது. பழைய மீன்களைக்கூட புதுசு போல காட்டுவதற்கு ஃபார்மலின் என்ற ரசாயனம் பூசப்படுவதை ஆய்வின் மூலம் உறுதி செய்துள்ளனர். இதன் பின்னணியை முழுமையாகக் கண்டறிந்து களையப்படாவிட்டால் மீன் சாப்பிடுகிற பொதுமக்களும், கூடைகளில் மீன் விற்கும் சிறு வணிகர்களும்தான் பாதிக்கப்படுவார்கள்.
ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை
தமிழகத்தில் எந்த ஆட்சியிலாவது வளர்ச்சித் திட்டங்களுக்காக எடுக்கப்பட்ட நிலத்திற்கான இழப்பீடும் வேலை வாய்ப்பும் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதா?
காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கப்பட்ட நெய்வேலி பழுப்பு நிலக்கரி திட்டத்திலிருந்து, பா.ஜ.க. தயவில் எடப்பாடி செயல்படுத்தும் எட்டுவழிச் சாலைவரை எல்லாமே ஏமாற்று வாக்குறுதிகள்தான்.
________________
ஆன்மிக அரசியல்
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
"இந்து பாகிஸ்தான்' உருவாகும் என்கிறாரே காங்கிரஸ் கட்சியின் சசிதரூர்? மதம் அடிப்படையிலான நாடு அமைவதுதான் ஆன்மிக அரசியலா?
நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தற்போது மதச்சார்பற்ற நாடாக விளங்கும் இந்தியாவின் நிலை மாறிவிடும் என்பதுதான் சசிதரூரின் விமர்சனம். பாகிஸ்தான் எப்படி முஸ்லிம் நாடாக இருக்கிறதோ, அதுபோல இந்தியா, இந்துக்களுக்கான பாகிஸ்தானாக மாறிவிடும் என அவர் எச்சரித்திருக்கிறார். அதற்கு பா.ஜ.க. தரப்பிலிருந்து கடும் விமர்சனங்கள் வருவதுடன், காங்கிரஸ் மேலிடமும் சசிதரூர் போன்றவர்களை அடக்கி வாசிக்கச் சொல்கிறது. மதவெறியைத் தூண்டி கலவரத்தை விளைவிக்க காங்கிரஸ் முயற்சிப்பதாக பா.ஜ.க. குற்றம்சாட்டுகிறது. பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் மூலம் முஸ்லிம்களுக்கு எதிராகவும், இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டபோது சீக்கியர்களுக்கு எதிராகவும் பா.ஜ.கவும் காங்கிரசும் நடத்திய வன்முறைகள் இந்திய வரலாற்றின் பக்கங்களில் கறை படிந்தவையாக இருக்கின்றன.
பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில் ஒரு தேசம் -ஒரு மொழி -ஒரு மதம் -ஒற்றைக் கலாச்சாரம் என்ற கோட்பாட்டுடன் செயல்படுவது, அமைதிக்கும் ஒற்றுமைக்கும் வேட்டு வைப்பதாகவே அமையும். ஆனால், பா.ஜ.க. தரரப்பினர், இந்து தாலிபனாக செயல்ப்டுவதாக சசிதருரே விமர்சிக்கிறார். இந்தியாவிலுள்ள முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குப் போக வேண்டும் என்றும், இந்தியாவில் இருப்பவர்கள் இந்து என்ற மனநிலையுடன்தான் வாழ வேண்டும் என்றும் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள் அடிக்கடி குரல் கொடுப்பதும், அதை மேலிடம் அதட்டி அடக்குவதுபோல பாவ்லா காட்டுவதும் கண்ணாமூச்சி ஆட்டமாகும். மூவர்ணக் கொடியை உடைய இந்தியாவுக்கு மொத்தமாக காவி நிறம் பூச நினைப்பது ஆன்மிகமாகாது, அபாயகரமானது.