சி. கார்த்திகேயன், சாத்தூர்
தமிழகத்தில் இம்முறை முதல்வர் இடஒதுக்கீடு பெண்களுக்கு என்று ஒரு ட்விஸ்ட் வந்தால்?
கோவில் கட்டிக் கொண்டாடிய குஷ்புவுக்கு கோட்டையில் முக்கியமான நாற்காலி கிடைக்குமா என்பதுதானே உங்கள் கேள்வியின் ட்விஸ்ட்?
பி.மணி, வெள்ளக்கோவில்
சிறு கட்சிகள் தேர்தலில் என்ன சாதிக்கப்போகிறது என்பதற்கு பீகார் தேர்தலில் பெரிய கட்சிகளுக்கு ஏற்பட்ட அனுபவம் உணர்த்தியது. அதை மனதில் வைத்து தமிழகத்தில் வரும் தேர்தலில் திராவிட கட்சிகள் சின்ன கட்சிகளுக்கு மதிப்பு அளிக்குமா?
சிறு துரும்பும் பல் குத்த உதவும். அதனால், கூட்டணி தர்மத்துடன் பெரிய கட்சிகள் நடந்து கொள்ளவேண்டும் என சிறு கட்சிகள் எதிர்பார்க்கின்றன. அதே நேரத்தில், பல்லுக்கு பதில் ஈறுகளைக் குத்திவிட்டால் ரத்தம் வரும். பல்வலி அதிகமாகிவிடும் என நினைக்கின்றன கூட்டணிக் குத் தலைமை தாங்கும் பெரிய கட்சிகள். மக்கள் நலன் சார்ந்த பொதுநல நோக்குடன், பலமான எதிரியை வெல்வதற்கான ஒத்துழைப்புடனான வியூகங்களை இரு தரப்பும் மேற்கொள்ளும்போது மட்டுமே வெற்றி இலக்கு சாத்தியமாகும்.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்
வரும் தேர்தலில் நரகாசூரர்களை அழிக்கும் இயக்கமாக அதிமுக இருக்கும் என்கிறாரே ஜெயக்குமார்?
பிரச்சார நேரத்தில் மெயின் ரோட்டுக்கு ஜெயக்குமார் உள்ளிட்ட அமைச்சர்கள் வரும் போது, நரகாசுரர்கள் யார் என்பது தெரியக்கூடும்.
பா.ஜெயப்பிரகாஷ் பொள்ளாச்சி
நெல்லை மணோன் மணியம் சுந்தரனார் பல்கலை பாடத் திட்டத்தில் இடம் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் நீக்கப்பட்டது சரியா?
அருந்ததி ராய் எழுதிய ரஹப்ந்ண்ய்ஞ் ரண்ற்ட் பட்ங் ஈர்ம்ழ்ஹக்ங்ள் புத்தகம், மாவோயிஸ்ட்டுகளுடனான பயணம் பற்றிய பதிவு. அதைப் படித்தால், மாணவர்கள் தேசவிரோத சிந்தனைகளுக்கு ஆளா வார்கள் என ஆர்.எஸ். எஸ்-பா.ஜ.க.வின் மாண வர் அமைப்பான ஏ.பி.வி.பி. அளித்த புகாரின் அடிப் படையில் மூன்றாண்டு களுக்கு மேலாகப் பாடத்திட்டத்தில் இருந்த புத்தகம் நீக்கப்பட்டுள் ளது. ஹிட்லர், முசோலினி, கோட்சே, சாவர்க்கர் பற்றிக்கூட வரலாற்றுப் பாடங்கள் உள்ளன. எதைப் பாடமாக வைப் பது, நீக்குவது என்பது பல்கலைக்கழக வரம்பிற் குட்பட்டது. அருந்ததி ராய் புத்தக விவகாரத்தில் அதை ஆர்.எஸ்.எஸ் தீர்மானித்துள்ளது.
வாசுதேவன் பெங்களூரு
"சிங்கம்', "சூரரை போற்று'- எந்த சூர்யா கலக்கல்?
சிங்கம்-கர்ஜனையின் சத்தம். சூரன்- அனுபவத்தின் அசத்தலான வெளிப்பாடு.
__________
தேர்தல் களம்!
பா.சங்கரசுப்பிரமணியன், பாளையங்கோட்டை, நெல்லை
தேர்தல் முடிவுகளை ஏற்க மாட்டேன் என சட்டப் போராட்டத்துக்கு மல்லுக்கட்டும் டிரம்ப் போல, இந்தியாவிலும் சட்டப் போராட்டம் நடத்தியிருக்கிறார்களா?
காங்கிரஸின் பழைமைத் தன்மையை மாற்றிவிட்டு, புதுமுகத்தைக் கொடுக்க வேண்டும் என நினைத்தார் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி. அதனால், தன்னைப் பிரதமர் பதவிக்கு கொண்டு வந்த பெருந்தலைவர் காமராஜர், தனக்குப் போட்டியாக பிரதமர் பதவியை எதிர்பார்த்த மொரார்ஜி தேசாய் என மூத்த தலைவர்கள் அனைவரையும் ஓரங்கட்டி, தனக்கான காங்கிரசை கட்டமைத்து ஆட்சி நடத்தினார். இந்திராவை எதிர்த்து ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப் போயிருந்த, ராஜ்நாராயண் சிங், அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தார். அந்த வழக்கில், 1975 ஜூன் 12 அன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜக்மோகன் லால் சின்கா, இந்திராவின் வெற்றியை செல்லாது என அறிவித்தார். அதன் காரணமாக, அவரது எம்.பி பதவி பறிபோவதுடன், 6 ஆண்டுகளுக்குத் தேர்தலில் நிற்க முடியாது என்கிற நிலை உருவானது. உச்சநீதிமன்றத்திற்கு சென்ற போதும், நாட்டை ஆளலாம்... நாடாளு மன்ற உறுப்பினராக முடியாது என உத்தர விடப்பட்டது. தனக்கு ஏற்பட்ட அரசியல் நெருக்கடியிலிருந்து தப் பிக்கவும், பிரதமர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளவும் 1975 ஜூன் 25 நள்ளிரவில் இந்தியா முழுவதும், எமர்ஜென்சி எனும் நெருக்கடி நிலையைக் கொண்டு வந்தார் இந்திரா அம்மையார். இரவோடு இரவாக குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமதுவின் ஒப்புதலும் பெறப்பட்டது.
பொழுது விடிவதற்குள் எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தொழிற்சங்கவாதிகள் சிறையில் தள்ளப்பட்டனர். போராடிய மாணவர்களையும் விட்டுவைக்கவில்லை. மிசா எனும் சட்டத்தின்கீழ் ஜாமீன் பெற முடியாத சிறைவாசத்தை அனுபவித்தனர். தமிழ்நாட்டில், இந்திராவின் எமர்ஜென்சியை எதிர்த்த கலைஞர் தலைமையிலான தி.மு.க. அரசு கலைக்கப்பட்டது. குஜராத் அரசும் கலைக்கப்பட்டது. ‘இந்திராவே இந்தியா- இந்தியாவே இந்திரா’ என அவருக்கு ஆதரவாக முழங்கிய அரசியல் சக்திகள் மட்டுமே நிம்மதியாக இருக்க முடிந்தது. பத்திரிகை செய்திகளுக்கு சென்சார் முறை கொண்டு வரப்பட்டு, அரசுக்கு ஆதரவான செய்திகளை மட்டுமே வெளியிடமுடியும் என்ற நிலை உருவானது. இந்திரா அம்மையார் அறிவித்த 20 அம்சத் திட்டம், அவரது இளைய மகன சஞ்சய் காந்தியின் ஆளுமை போன்றவையே முன்னிலைப்படுத்தப்பட்டன. ஒன்றரை ஆண்டுகாலத்திற்குப் பிறகு, நெருக்கடி நிலை திரும்பப்பெறப்பட்ட நிலையில், 1977ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இந்திராகாந்தியை அதே ரேபரேலி தொகுதியில் மக்களின் ஆதரவுடன் அதே ராஜ்நாராயண்சிங் வென்றார் என்பது இந்தியத் தேர்தல் வரலாறு.