மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

10 லட்சத்திற்கு மேல் சம்பளம் பெறும் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்கிறாரே இயக்குநர் பாரதிராஜா?

Advertisment

கல்லுக்குள் ஈரம் இருக்கும் என நினைக்கிறார் அதே பெயரில் படம் எடுத்து, அதில் கதாநாயகனாகவும் நடித்த இயக்குநர் பாரதிராஜா. திரை நாயகர்களோ, நாயகன் பட வசனம் போல, "அவரை முதலில் குறைக்கச் சொல்.. நான் குறைக்கிறேன்' என்ற நிலையில் உள்ளனர். கொரோனா கால அனுபவங்களுக்குப் பிறகாவது மனம் இரங்குகிறார்களா எனப் பார்க்கலாம்.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

"அறிவியல் அளவிற்கு தமிழ் வளரவில்லை'’என்று அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி கூறுகிறாரே?

துணைவேந்தராக இருந்த அவர் ஏன் கவர்னர் பன்வாரிலால் புரோகித்போல வேந்தராக வளரவில்லை என்று கேட்பது சரியாக இருக்குமா? அதுபோலத்தான் அவர் சொல்வதும். தமிழில் மட்டுமல்ல, இந்தியாவில் எந்த மொழி பேசும் மக்களிடமும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள் மேலைநாடுகள் அளவிற்கு இல்லை. அதே நேரத்தில், அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்ப தமிழ் தன்னை தகவமைத்து மேம்பட்ட காரணத் தால்தான் இன்றைய கணினி யுகத்திலும் உலகின் எந்த மூலையில் வாழும் தமிழர்களும் தமிழ் வழியாகவே தங்கள் உறவுகளையும் நட்புகளையும் தொடர்புகொள்கிறார்கள் என்பதை அறியாத அளவுக்கு அவர் "பால"குருசாமியாக இருக்க மாட்டார் என நம்புவோம்.

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

மனுநீதி நூலுக்கு தடை விதிக்கப்படுமா?

Advertisment

மதத்தின் கொள்கைகளை -கோட்பாடுகளை முன்வைக்கும் எந்தப் புத்தகமாக இருந் தாலும் அது இன்றைய காலத்திற்கும் சமுதாயச் சூழலுக்கும் பொருந்தாத பல கருத்துகளைக் கொண்டதாகவே இருக்கும். பாடநூல்கள் என்றால் அவற்றை எளிதாகப் புறந்தள்ளி, புதிதாக உருவாக்கிவிட முடியும். புனித நூல்கள் என்று பெயர் எடுத்துவிட்ட புத்தகங் களுக்குத் தடை விதிக்க அரசுகள் தயங்கும். அதுவும் இந்தியாவில் பெரும்பாலான நேரங்களில், நீதி என்பதே மனு நீதியாகத்தான் இருக்கிறது.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

ஊழல் செய்யும் அதிகாரிகளை தேச விரோதிகளாக அறிவிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு ஏன் தூக்கு தண்டனை கொடுக்கக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் கோபம் காட்டியுள்ளதே?

அதிகாரிகள் -அரசியல்வாதிகள் என யாராக இருந்தாலும் ஊழல் செய்வோரையும் லஞ்சம் வாங்குவோரையும் தற்போதுள்ள சட்டவிதிகளின் படியே கடுமையாகத் தண்டிக்க முடியும். மரண தண்டனை எதற்கு? பெங்களூரு சிறப்பு நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா வழங்கிய தீர்ப்பு போல சட்டரீதியான உறுதிமிக்கத் தீர்ப்பை வழங்கினால் அசைக்க முடியாதவர்களாக ஆட்சியாளர்களாகக் கருதப்பட்டவர்களும் அவர்களை வைத்துக் கொள்ளையடித்தோரும் சிறைவாசத்திலிருந்தும் காலத்திடமிருந்தும் தப்ப முடியாது என்பதை காலம் நமக்கு காட்டுகிறது.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

Advertisment

இந்தியாவில் பெரும்பாலான கவர்னர்கள் பா.ஜக.வின் சேவர்களாகவே இருக்கிறார்கள் என்றும் இவர்களிடமிருந்து நீதியை எதிர்பார்க்க முடியாது என்றும் சொல்கிறாரே காங்கிரசின் தினேஷ் குண்டுராவ்?

காங்கிரஸ் கட்சி இந்தியாவை ஆட்சி செய்த காலத்திலும் இதே பாணியைத்தான் கவர்னர்கள் நியமனத்தில் கடைப்பிடித்தார்கள். தங்களுக்குப் பிடிக்காத மாநில அரசுகளை 356வது பிரிவின் கீழ் கலைப்பதற்கான ஆயுதமாக நியமிக்கப்பட்டவர்கள்தான் காங்கிரஸ் ஆட்சிக்கால ஆளுநர்கள்.

mavalianswers

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72

தமிழ் நட்சத்திரங்கள் பலபேரை வளைத்துப் போட பா.ஜ.க. திட்டமிட்டிருப்பது உண்மையா?

ஒரு காலத்தில் தமிழ்த் திரையுலகில் போட்டி ஹீரோயின்களாக இருந்த குஷ்புவையும் கவுதமியை யும் பா.ஜ.க. தன் பக்கம் கொண்டு வந்திருக்கிறது. நமீதா, காயத்ரி ரகுராம் போன்றவர்களையும் கட்சியில் சேர்த்து பொறுப்பு கொடுத்திருக்கிறது. தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இஷா கோபிகர் ஏற்கனவே பா.ஜ.க.வில் சேர்ந்தார். இந்தியில் பிரபலமாக இருந்த ஹேமமாலினி, ராமாயணம் டி.வி. தொடரில் சீதையாக நடித்த தீபிகா உள்ளிட்டோருக்கும் பா.ஜ.க. அரசியல் முலாம் பூசிவிட்டது. சமாஜ்வாடி கட்சியில் இருந்த ஜெயப்ரதாவும் பா.ஜ.க. பக்கம் வந்தார். அண்மையில் கர்நாடகத்தில் பழைய நடிகை சுமலதாவை தனக்கு ஆதரவாளராக்கியது. கங்கனா ரணவத் பா.ஜ.கவின் அரசியல் எதிரிகளுடன் நேரடியாக மோதுவதால் ஒய் பிரிவு பாதுகாப்பு வசதியைப் பெற்றிருக்கிறார். சீரியல் நடிகையாக இருந்தவர்தான் தற்போதைய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி. அதனால் சரோஜாதேவி முதல் சமந்தா வரை யாரை வேண்டுமானாலும் பா.ஜ.க. வளைத்துப் போடலாம்.

அ.குணசேகரன், புவனகிரி

குடும்ப அரசியல்தானே ஊழலுக்கு வழிவகுக்கிறது?

மனைவி-பிள்ளைகள் எனக் குடும்பம் இருந்தும் ஒற்றைப் பைசா ஊழலுக்கு கூட இடம்தராமல் பிரதமர் பொறுப்பில் இருந்தவர்கள் லால்பகதூர் சாஸ்திரி-மொராஜி தேசாய் போன்றவர்கள். "எனக்கு குடும்பம் இல்லை... மக்களுக்காக நான்' என்ற முதல்வர் என்ன செய்தார் என்பது தமிழ்நாட்டுக்கே தெரியும்.