வி.கார்மேகம், தேவகோட்டை

2015-ல் சென்னை வெள்ளத்தில் மிதக்க, செம்பரம்பாக்கம் ஏரி நிர்வகிப்பில் ஏற்பட்ட தோல்வியே காரணம் என்கிறதே மத்திய கணக்கு தணிக்கை அறிக்கை?

Advertisment

"இரும்பு'ப்பெண்மணி எனப்பட்டவரின் "துரு'ப்பிடித்த நிர்வாகத்தின் லட்சணம்தான், கொடூரமான உயிர்ப்பலிகளுக்கும் பெரும் சேதத்திற்குமான அந்த வெள்ளப் பெருக்கு என மக்கள் அறிந்த உண்மையை, அரசாங்கத்தின் கணக்கு தணிக்கை அறிக்கை 2 ஆண்டுகள் கழித்து அங்கீகரித்துள்ளது.

Advertisment

mavalianswers

நித்திலா, தேவதானப்பட்டி

தாய்லாந்து நாட்டில் குகையில் சிக்கிய 12 சிறுவர்கள் மீட்கப்பட்டது அதிசயமா, அறிவியலா?

அறிவியலும் மனிதத்தன்மையும் இணைந்து நிகழ்த்திய அதிசயம். கால்பந்து விளையாடும் சிறுவர்களை சாகசப்பயணமாக குகைக்கு அழைத்துச் சென்றார் அவர்களது பயிற்சியாளர். அப்போது பெய்த பெருமழையால், வெள்ளம் ஏற்பட்டு, குகைக்குள் தண்ணீர் புகுந்து சிறுவர்கள் வெளியேற முடியாதபடி செய்தது. சிறுவர்களுக்கு போதிய நீச்சல் பயிற்சி இல்லை. உள்ளே சிக்கிக் கொண்ட சிறுவர்களை நீச்சல் பயிற்சியுள்ளவர்கள் கண்டறிவதற்கே நாட்களாயின. ஆனாலும், சிறுவர்கள் தங்கள் கால்பந்து பயிற்சியாளருடன் தன்னம்பிக்கையுடன் இருப்பதை கண்டறிந்து, அவர்கள் சுவாசிக்கவும், சாப்பிடவும், பாதுகாப்பாக இருக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சேறு நிறைந்த தண்ணீரும், குகையில் ஆங்காங்கே மிகக் குறுகலாக இருந்த பாதையும் மீட்பு முயற்சியைத் தாமதப்படுத்தின. துணிந்து இறங்கிய முன்னாள் கடற்படை வீரர் சமன்குணனின் உயிர்த்தியாகமும் கூடுதல் அச்சத்தை உண்டாக்கிய நிலையில், தாய்லாந்து கடற்படையும், உலகளாவிய உதவியும், அத்தனை சிறுவர்களையும் அவர்களின் பயிற்சியாளர்களையும் பத்திரமாக மீட்டு கரை சேர்த்துள்ளது. சிறுவர்களுக்கு கடலடி நீச்சல் பயிற்சி தந்து, ஒரு சிறுவனுக்கு இரண்டு பேர் பாதுகாப்புடனும், சுவாசக் கருவிகள் போன்ற தொழில்நுட்பத்துடனும் தாய்லாந்து அரசு மீட்டதைக் கண்டு ஆனந்தக்கண்ணீர் வடித்தபோது, நம் தாய்நாட்டு அரசு, ஓகிப் புயலில் காணாமல் போன மீனவர்களைக் காப்பாற்றுவதில் காட்டிய அலட்சியம் வேதனைக் கண்ணீராக வெளிப்பட்டது.

Advertisment

எம்.முகம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

Go Back Modi என்பது மாறி, Back Modi என்ற நிலை வரும் என்கிறாரே தமிழிசை?

அமித்ஷா வருகைக்கு சமூகவலைத்தளங்கள் காட்டிய வேகத்தைப் பார்த்த பிறகும், தமிழிசை இதே மனநிலையில் இருக்கிறார் என்றால், அவரது தன்னம்பிக்கையை பாராட்டியே ஆகவேண்டும்.

ஆர்.கே.லிங்கேசன், மேலகிருஷ்ணன்புதூர்

எதை வரலாற்றுப் பிழை என்று கூறுவீர்கள்?

முடியாட்சியிலும் குடியாட்சியிலும் அரசாண்டவர்கள் செய்த வரலாற்றுப் பிழைகள் நிறையவே உள்ளன. அதே நேரத்தில், வரலாறு என்பதே ஆட்சியாளர்கள் தரப்பின் பார்வையாகப் பதிவு செய்யப்பட்டிருப்பதே பெரும் பிழைதான்.

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி

"தமிழும் சமஸ்கிருதமும் இந்தியாவின் இரு கண்கள்' என்கிறாரே கவிஞர் வைரமுத்து?

அதை மட்டுமா சொன்னார்? "சமஸ்கிருதத்தை வாழும்மொழி என்று சொல்ல முடியாது என்றாலும் வாசிக்கத்தக்க மொழி. வாழும் மொழியாகவும், வாசிக்கும் மொழியாகவும் உள்ளது தமிழ். தமிழைக் கழித்து விட்டால், இந்தியாவும் கழிந்து போகும் என்பதை மத்தியில் ஆள்வோர் உணர வேண்டும்' என கவிஞர் பேசியிருப்பது கவனத்திற்குரியது.

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

அரசியலில் கமல்ஹாசன் இன்னும் எல்.கே.ஜி. லெவலிலும், ரஜினிகாந்த் பேபி கிளாஸ் லெவலிலும் இருப்பதாக அன்புமணி சொல்கிறாரே?

நர்சரி ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ்களுக்குள் ஏதோ பிராப்ளம்.. "டீச்சரம்மா' இல்லாததால் ஆளாளுக்கு சண்டை போடுகிறார்கள்.

----------------------

ஆன்மிக அரசியல்

ஜெயலலிதா நடத்தியது ஆன்மிக அரசியலா? அடாவடி அரசியலா?

தனது தனிப்பட்ட வழிபாட்டு விருப்பத்தை, அண்ணாவையும் திராவிடத்தையும் பெயரில் கொண்ட கட்சியின் கொள்கையாக மாற்றியவர் ஜெயலலிதா. அவருக்கு முன் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆரும் மூகாம்பிகை கோவிலுக்குப் போனார். அவர் அதைத் தனிப்பட்ட பழக்கமாகவே கடைப்பிடித்தார். எம்.ஜி.ஆரும் அவரது அமைச்சர்களும் திராவிட அரசியல் இயக்கத்தின் வழக்கப்படி, பதவியேற்பின்போது உளமார (மனசாட்சிப்படி) உறுதி கூறி, பதவி ஏற்றனர். 1991-ல் முதல்முறை முதல்வரான ஜெயலலிதா, இதற்கு மாறாக கடவுளின் பெயரால் உறுதிமொழி ஏற்றதால், அவரது அமைச்சர்கள் (நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.கே போன்ற அண்ணா காலத்து அரசியல்வாதிகள் தவிர) அத்தனைபேரும் கடவுள் பெயரால் உறுதிமொழி ஏற்கவேண்டிய கட்டாயத்திற்குள்ளாயினர்.

ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு பால்குடம் எடுப்பது, மண்சோறு சாப்பிடுவது, வேப்பிலை ஆடை கட்டி ஆடுவது, வடமொழி மந்திரங்களுடன் யாகம் நடத்துவது இவை எல்லாம் செய்தால்தான் கட்சியில் பதவி பெற முடியும் என்ற நிலை உருவானது. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வில் தனிப்பட்ட முறையில்கூட யாரும் நாத்திகக் கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது என்கிற சர்வாதிகாரம் திணிக்கப்பட்டது. திராவிடர் கழக வழியில் வந்தவரான அமைச்சர் கே.சி.வீரமணிகூட ஜெயலலிதா உடல்நலன் பெறவேண்டி கோவிலை நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்குள்ளானார். அரசியலில் ஜெயலலிதா கடைப்பிடித்த ஆன்மிகம் என்பது, அடாவடியாக ஆரியத்தை திணித்த செயலாகும்.