நித்திலா, தேவதானப்பட்டி
தி.மு.க.வுட னும் கூட்டணி அமையலாம் என்கிறாரே பா.ஜ.க. முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்?
பதவி இல்லையென்றால் யார் கண்டுகொள்கிறார்கள்? ஏதாவது பத்த வச்சாதானே தலைப்புச் செய்தியாக்குகிறார்கள். அரசியலில் எதுவும் நடக்கும் என சராசரி நம்புகிறவரை, பொன்.ராதாக்கள் உயிர்த்திருப்பார்கள்.
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சை.613006.
முதல்வர் வேட்பாளராக வெறும் அறிவிப் பிற்கே அதிமுக.வில் இவ்வளவு ஆர்ப்பாட்டமா?
அ.தி.மு.க என்பது அதிர்ஷ்டசாலி கட்சி. அது தொடங்கப்பட்டபிறகு, மக்களுக்கான பெரிய போராட்டமோ- அதனால் சிறைவாசமோ காணவில்லை. மிசாவைக்கூட ஆதரிக்கத்தான் செய்தது. 5 ஆண்டுகளில் ஆட்சிக்கு வந்துவிட்டது. அதன்பிறகு, 13 ஆண்டுகள் தவிர மற்ற ஆண்டுகளில் ஆளுங்கட்சி யாகவே இருந்து வருகிறது. களத்தில் ஆர்ப்பாட்டம் இல்லாத நிலையில், கட்சியில் எந்த முடிவு எடுக்கப்பட்டாலும் அதனை ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடுவது அ.தி.மு.க.வின் இயல்பாகிவிட்டது.
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ விழுப்புரம்
பெரியார் சிலைக்கு மாலை அணிவித்த காவலர் மூன்று பேர்கள் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்களே?
நிர்வாகக் காரணம் என்று சொல்லி கடலூர் புதுநகர் காவல்நிலையக் காவலர்கள் மூவரையும் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு இடமாறுதல் செய்து உத்தரவிட்டார் காவல் கண்காணிப்பாளர். கடலூரில் கெடிலம் ஆறு-அண்ணா பாலம் அருகேயுள்ள அந்தப் பெரியார் சிலைக்கு ஒரு வரலாறு உண்டு. அந்த இடத்தில்தான் 29-7-1944 அன்று பெரியார் பேசும்போது அவர் மீது செருப்பு-பாம்பு ஆகியவற்றை வீசினார்கள். பெரியார் கலங்கவில்லை. அவர் தனது கருத்தை உறுதியாகப் பேசினார். அங்கு மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் தொடர்ந்து பேசினார். அவர் மீது மனித மலத்தை வீசியவர்களும் உண்டு. தன்னிடமிருந்த துண்டால் துடைத்துக்கொண்டு தொடர்ந்து பேசியவர் அவர். பெரியாரின் பரப்புரையும் போராட்டங்களும் தமிழகத்தின் அரசியல்-சமுதாய-பண்பாட்டுத் தளத்தில் மாற்றத்தை உருவாக்கியது. திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் அவை சட்டமாகின. கடலூரில் பெரியார் மீது செருப்பு வீசப்பட்ட அதே இடத்தில் 13-8-1972ல் அவர் முன்னிலையிலேயே அவரது சிலை யைத் திறந்து வைத்தார் அன்றைய முதல்வர் கலைஞர். பெரியாரின் பணி எத்தகைய மாற்றத்தை சமுதாயத் தில் ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கு அதுவே சாட்சியம். பெரியாரின் சமூக நீதிக் கொள்கையால் அரசுப் பணி-உயர்கல்வி பெற்றவர்கள் அவரது சிலைக்கு நன்றி செலுத்துவது வழக்கம். காவலர்களும் அதைத்தான் செய்திருக்கிறார்கள். அதற்காகத்தான் இடமாற்றம். ஒருவேளை, காக்கிச் சட்டையினருக்கு நன்றியுணர்வு இருக்கக்கூடாதோ என்னவோ!
கே.ஆர்.ஜி.ஸ்ரீராமன், பெங்களூர்77.
வேளாண் சட்டம்... விவசாயிகளுக்கு, வரமா? சாபமா?
பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. நடைமுறை ஆகியவற்றின்போது பிறந்த புதிய இந்தியா போலத்தான் வேளாண் சட்டமும்.
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
""அப்பனுக்கு பின் மகன், மகனுக்கு பின் பேரன், பேரனுக்கு பின் கொள்ளுப் பேரன்... என்ற வம்சாவளி அரசியல் அ.தி.மு.க.வில் இல்லை. "உழைப்பால் உயர முடியும் என்பதற்கு நானும் ஒரு சாட்சி' என்று எடப்பாடி பழனிசாமி கூறியது ஏற்புடையதா சார்?
கலைஞர்-மு.க.ஸ்டாலின்-உதயநிதி நேரடியான குடும்ப உறவுகள் பதவிக்கு வரும்போது வம்சாவளி அரசியல் என்பது அப்பட்டமாகத் தெரிந்துவிடும். அதுவே, எதிர்த்தரப்புக்கு சாதகமாகிவிடும் என்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வதேயில்லை. அதே நேரத்தில், முதல்வராக இருந்தவருக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் என்னை முதல்வராக்குங்கள் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிய துரோகச் செயல். முதல்வராக இருந்தவர் இறந்ததும் அரசியலுக்கே சம்பந்தமில்லாத அவரது மனைவியை முதல்வராக்கிய ஜனநாயக மரபு மீறல். மனைவியாக அவர் இருந்தா லும், மறைந்த முதல்வருக்கு நான்தான் உடன்கட்டை ஏறும் உரிமை கொண்டவர் என்று கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்றிய ஆச்சரியகரமான உறவு முறை. அத்தகைய உறவு கொண்டாடியவருடன் உடன்பிறவா சகோதரி எனும் இன்னொரு உறவு ஒட்டிக்கொண்டு, கட்சியையே தன் குடும்பத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஆதிக் கம். அப்படிப்பட்டவரின் காலை மேசைக்கு அடியில் தேடித் தடவி வணங்கி முதல்வர் பதவிக்கு வந்த அடிமைத்தனம் என அ.தி.மு.க வரலாற்றில் எத்தனையோ விதமான சாட்சி கள் இருப்பதை அநேகமாக ஓ.பி.எஸ்-ஜெயக் குமார் போன்றவர்களின் வம்சாவளியில் வந்தவர்கள் படித்துக் கொண்டிருக்கலாம்.
பி.மணி, குப்பம், ஆந்திரா
எம்.ஜி.ஆர்-சிவாஜிக்கு டி.எம்.எஸ் என்றும் கமல்-ரஜினிக்கு எஸ்.பி.பி. என்றும் தமிழ்த் திரையுலகில் எழுதப்படாத விதி ஏதாவது இருந்ததா?
ரசிகர்களின் மனதில் அழுந்தப் பதிந்த விதி அது என்றாலும், அதனை மீறிய வெற்றிகரமான விதிவிலக்குகளும் உண்டு. மலேசியா வாசுதேவன் குரல் சிவாஜிக்கு தந்த "முதல் மரியாதை' மறந்து போய்விடுமா? கே.ஜே.யேசு தாஸ் ரஜினிக்கு "ப்ரியா'மாக தந்த தேன் குரல்தான் தெவிட்டுமா? எம்.ஜி.ஆருக்கு ஏ.எம்.ராஜா குரல் தந்த "மயக்கும் மாலைப் பொழுதே' மனதிலிருந்து மாறுமா? கமலுக் காக கமலே பாடிய இஞ்சி இடுப்பழகி போன்ற பல பாடல்களில் மயங்காத இதயம் தான் உண்டா?