லட்சுமிதாரா(வேலூர்), நாமக்கல்

பா.ஜ.க. அரசு எந்த சட்டம் கொண்டு வந்தாலும் ஒரு நொண்டிச் சாக்கு சொல்லி அதனை அ.தி.மு.க ஆதரிக்கிறதே?

மிச்சமிருக்கும் மாதங்களில் நொண்டாமல் ஆட்சி செய்வதற் காகத்தான்.

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

Advertisment

மகாத்மா காந்தி மறைவைத் தொடர்ந்து இந்தியாவுக்கு ‘காந்திஸ்தான்’ என்று பெயர் வைக்க வேண்டுமென பெரியார் கூறினாராமே உண்மைதானா?

எந்த வருணாசிரமத்தைக் காப்பதற்கு காந்தி பாடுபட்டாரோ, அந்த வருணாசிரம வெறிக்காரர் களே காந்தியை சுட்டுக் கொன்ற போது, இந்த நாட்டுக்கு காந்தி தேசம்- காந்திஸ்தான் எனப் பெயர் வைக்க வேண்டும் என்றார் பெரியார். அதுமட்டுமல்ல, ‘இருந்த காந்தி அவர்களது காந்தி. இறந்த காந்தி நம்முடைய காந்தி’ என்றும் பெரியார் சொன்னது வரலாற்று உண்மையின் வெளிப்பாடு.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை 72

திரையரங்கில் படம் பார்க்கிற காலம் வருமா? வராதா?

ஒரு சீட்டுக்கு ஒரு சீட் இடைவெளி விட்டு 50% அளவில் ரசிகர்களை அனுமதிக்கலாம் என இப்போதுதான் மத்திய அரசு அறிவித்துள்ளது. மாநில அரசு அனுமதிக்க வேண்டும். அதுசரி... இப்படி இடைவெளிவிட்டு ஜோடிகளை உட்கார வைப்பதற்கு திரையரங்கில் படம் ஓடினால் என்ன, ஓடாவிட்டால் என்ன என்று கேட்கிறார்கள் படத்துடன் பலவற்றையும் ரசிக்கும் இளசுகள்.

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

Advertisment

இந்திய பிரதமர் மோடியும் இலங்கை பிரதமர் ராஜபக்சேவும் சமீபத்தில் நடத்திய ஆலோசனையால் என்ன பலன்?

ஹிட்லர்-முசோலினி இவர்களின் ஆலோ சனையால் விளைந்த பயன்தான்.

__________

தமிழி

மல்லிகா அன்பழகன், சென்னை 78

தமிழகத்தின் தொன்மையை, வரலாற்றை எந்த அருங்காட்சியகத்தில் முழுமை யாகத் தெரிந்து கொள்ளலாம்?

m

Advertisment

வரலாறுகள் அருங்காட்சியகத்தில் முடங்கியிருப்ப தில்லை. முழுமையான வரலாறும், அதன் தொன்மையும் தேடல்களிலும் ஆய்வுகளிலும்தான் வெளிப்படுகின்றன. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை சென்னை எழும்பூர் அருங்காட்சியகம், மதுரை அருங்காட்சியகம், தரங்கம்பாடி அருங்காட்சியகம், தஞ்சை அரண்மனை உள்ளிட்ட பல இடங்களில் அவரவர் தேவைக்கான வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. எனினும், முழுமையான தரவுகள் தேவையெனில் தொடர்ச்சியான அகழாய்வு களும் அவற்றில் கிடைப்பவற்றை முறையாகத் தொகுத்து, அருங்காட்சி யகத்தில் காட்சிப்படுத்துதலுமே சாத்தியப்படுத்தும். சங்ககாலத் தமிழர் நாகரிகத்தின் தொன்மையைக் காட்டும் கீழடி அகழாய்வுகள் இதுவரை 6 கட்டங்களாக நடைபெற்றுள்ளன. இந்த வைகை ஆற்றங்கரை நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது என ஆய்வாளர்களால் கணிக்கப்பட்டு, அங்கு கிடைத்த பொருட்கள் அருங்காட்சியகமாக்கப்படுகின்றன. எலும்புக்கூடுகள், முதுமக்கள் தாழி, உறைகிணறு, சுடுமண் பானைகள், சுட்ட மண்ணால் ஆன குழாய்கள், செங்கல்லால் ஆன கட்டுமானங்கள், தொழிலகங்கள் செயல்பட்டதற்கான தடயங்கள் உள்ளிட்டவை கீழடியின் சிறப்பாகும். அதுமட்டுமின்றி, தற்போதுள்ள தொழில்நுட்பத்தின் காரணமாக, கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கான வீடியோ பதிவுகளும் உள்ளன. எந்தெந்த இடங்கள் தோண்டப்பட்டன என்பதை பருந்துப் பார்வையுடன் காட்டுகின்ற ஹெலிகேம் ஷாட்டுகளும் இருக்கின்றன. கீழடியைத் தொடர்ந்து கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் வைகை ஆற்று நாக ரிகம் தொடர்பான ஆய்வுகள் மேற்கொள் ளப்பட்டன. அகரம் அகழாய்வில் 24 அடுக்குகளைக் கொண்ட மிகப் பெரிய உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. மணலூரில் சுடுமண்ணால் ஆன உலை ஒன்று கிடைத்துள்ளது. கொந்தகையில் நடந்த ஆய்வுகளில் கண்டறியப் பட்ட தொழிற்சாலைகள் மற்றும் முதுமக்கள் தாழிகள் தமிழர்களின் தொன்மைக்கான சான்றுகள். முதுமக்கள் தாழிகளில் இருந்த ஆண்-பெண் எலும்புகள் டி.என்.ஏ. ஆய்வுக்கு உட்படுத்தப்படும்போது மூத்த குடி எனப்படும் தமிழ்ச் சமுதாயத்தின் காலத்தைக் கணக்கிடவும் உதவும். கீழடியிலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கிடைத்த அகழாய்வுப் பொருட் கள் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரின் பீட்டா அனாலிடிக் நிறு வனத்தில் ஆய்வு செய் யப்படுகின்றன. தொல் தமிழர் நாகரிகத்தின் காலம் என்ன என்பதை கண்டறிவதற்கு அமெரிக்க நிறுவனத்தின் ஆய்வு உதவியாக இருக்கும். வைகை ஆற்று நாகரிகத்தைப் போலவே, தாமிரபரணி எனும் பொருநை ஆற்று நாகரிகத்தை எடுத்துக்காட்டும் ஆதிச்சநல்லூர் அகழாய்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது மட்டுமல்ல, மற்ற அகழாய்வுகளுக்கு மூத்தது. அதுகுறித்த தரவுகள் இன்னும் முழுமையாக வெளியிடப்படாமல் தடுத்து வைப்பதில் மேலோர்களும் நூலோர்களும் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். ஆதிச்சநல்லூர் உண்மைகள் வெளிப்படும்போது மேலும் பல வியப்பூட்டும் செய்திகள் கிடைக்கும். திருவள்ளூர் மாவட்டம் பட்டரைபெரும்புதூர், புதுக்கோட்டை- பேராவூரணி பகுதிகளில் நடக்கும் ஆய்வுகள், ஈரோடு மாவட்டம் கொடுமணல் ஆய்வுகள் எனத் தமிழர் தம் வரலாற்றை முழுமையாக அறிய பல கட்டங்களைக் கடக்க வேண்டும். கடலுக்குள் மூழ்கிய பூம்புகார், இலக்கியம் சுட்டிக்காட்டும் பஃறுளி ஆறு ஓடிய குமரிக்கண்டம் பற்றிய உண்மைகள் எல்லாமும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டால்தான் தமிழர்களின் தொன்மையை யும் முழுமையான வரலாற்றையும் தெரிந்துகொள்ள முடியும். அதற்கான இடைவிடாத முயற்சிகளும், சளைக்காத போராட்டங்களும் தேவைப்படும். வரலாற்றைத் திரிக்கும் ஆட்சியாளர்கள் கையில் நாடு சிக்கியிருக்கும் நிலையில், தொல்தமிழர்களின் முழுமையான வரலாற்றை வெளிக்கொண்டு வருவதில் ஒவ்வொரு தமிழருக்கும் பங்களிப்பு இருக்க வேண்டும்.

(தமிழி பகுதி நிறைவடைகிறது)