அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

காங்கிரசில் சசி தரூர், பா.ஜ.க.வில் சுப்பிரமணியசாமி -உள்ளடி வேலையில் கில்லாடி யார்?

Advertisment

ஆளுந்தரப்பில் உள்ளடிகளை அதிகாரத்தின் துணைகொண்டு சமாளித்துவிட முடியும். எதிர்த் தரப்பில் ஓட்டை விழுந்தால், ஆங்காங்கே பொத்துக்கொள்ளும். அதபோல, பா.ஜ.க.வுக்கு ஒரு சுப்பிரமணியசாமி. காங்கிரசில் பல சசி தரூர்கள்.

mm

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)

அரசியலில் ஜெ-ரோஜா ஒப்பிடுக.

ரோஜா தன் சினிமா செல்வாக்கின் மூலம் தெலுங்கு தேசக் கட்சியில் இடம்பிடித்து, தேர்தல் களத்தையும் கண்டு, பிறகு ஆந்திராவின் அரசியல் போக்கை அறிந்து ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு மாறி, இன்றைக்கு ஆளுங்கட்சியின் முக்கியமான எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். ஜெயலலிதா சினிமாவில் வாய்ப்புகள் குறைந்து, நடிப்பையும் ஒதுக்கிவிட்டு தனக்கான வாழ்க்கை நோக்கி சென்ற நிலையில் அவரை அ.தி.மு.க.வுக்குள் கொண்டு வந்து சேர்த்தவர் எம்.ஜி.ஆர். கட்சியின் சீனியர்களைக் கடந்து ஜெ.வுக்கு பதவிகள் கொடுத்தார். கட்சி எதிர்ப்பையும் குடும்ப எதிர்ப்பையும் மீறி ஜெயலலிதாவுக்கு எம்.ஜி.ஆர். அளித்த முக்கியத்துவம் ஒரு கட்டத்தில் அவருக்கே எதிராகத் திரும்பியது. எம்.ஜி.ஆரின் உடல்நிலையைக் காரணம் காட்டி, அவருக்குப் பதில் தன்னை முதல்வராக்கும்படி பிரதமர் ராஜீவ்காந்திக்கு கடிதம் எழுதியவர் ஜெ. ரோஜாவும் ஜெ.வும் சினிமா நட்சத்திரங்கள் என்றாலும் ரோஜாவின் அரசியலில் சந்தர்ப்பவாதம் இருக்கலாம். ஜெ.வின் அரசியலில் துரோகம் முளைத்திருந்தது.

மேட்டுப்பாளையம் மனோகரன், கோவை 14

Advertisment

கல்விக்கூடங்களில் இரு மொழிக் கொள்கை- மும்மொழிக் கொள்கை -இரண்டில் மாவலியின் ஆதரவு எந்தப்பக்கம்?

தாய்மொழிக் கல்விக்கே முதன்மை இடம் கொடுத்து, அதன் தொடர்ச்சியாக இணைப்பு மொழி ஒன்றை பயிற்றுவிப்பதே சரியான மொழிக் கொள்கை. அதன்பின் அவரவர் விருப்பத்திற்கும் தேவைக்கும் ஏற்ப தனிப்பட்ட முறையில் எத்தனை மொழிகளை வேண்டுமானாலும் படிக்கலாம். ஆனால், பெரும்பான்மையோர் பல மாநிலங்களில் பேசும் மொழி என்ற பெயரில் ஆதிக்கம் செலுத்தும் மொழியைத் திணிக்கும் மொழிக்கொள்கை என்பது பன்முகத்தன்மை கொண்ட நாட்டுக்கு ஆபத்து. அந்த வகையில் அண்ணா வழியிலான இருமொழிக் கொள்கையே எந்நாளும் சிறந்த வழி.

s

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

அரசியல்-சினிமா எதில் கடைசி வரை புகழ் நிலைத்து நிற்கும்?

Advertisment

ஈராயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் நிலைத்து நிற்கும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் அரசியல்வாதியா? சினிமா நடிகரா?

பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி

ஒரு மனிதன் எதை மறக்க வேண்டும், எதை மறைக்க வேண்டும், எதை மறுக்க வேண்டும்?

மறக்க வேண்டியது, இழப்புகளை. மறைக்க வேண்டியது கசப்புகளை. மறுக்க வேண்டியது திணிப்புகளை.

_____________

தமிழி

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

பழந்தமிழர் காலத்தில் நீதி மன்றங்கள் இருந்தனவா? நீதி பரிபாலனங்கள் எவ்வாறு இருந்தன?

அறம் என்பது தமிழர் வாழ்வின் உயர்பண்புகளில் ஒன்று. நீதி, தர்மம் போன்றவை வடமொழிச் சொற்களிலிருந்து வந்தவை. அறமன்றம் என்பதே தமிழ்ச் சொல். அறம் கூறும் அவையம், அறம் வழங்கும் மன்றம் எனப் பல பெயர்களில் அவை வழங்கப்பட்டுள்ளன. மன்னராட்சிக் காலத்தில் அறத்தினை நிலைநாட்டவேண்டிய முதன்மைப் பொறுப்பு அரசருக்கே உரியது. எனினும், ஆராய்ந்து தீர்ப்புரைக்க அறச்சான்றோர்களைத் தன் அவையில் நியமித்து, அவர்களில் தலைமை அறச்சான்றோரையும் நியமித்திருந்ததை பழந்தமிழர் வரலாற்றில் காண முடிகிறது. நீதிபதிகளான அறச்சான் றோர்கள் நன்னெறி தவறாதவர்களாக இருக்கவேண்டும் என்பது முதன்மையான தகுதி. செங்கோண்மை என்ற அதிகாரத்தில், அரசு என்பது குற்றங்களை ஆராய்ந்து- யாரிடமும் விருப்பு- வெறுப்பு காட்டாமல் குற்றத்துக்கு ஏற்ற தண்டனையை வழங்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். வழக்கை விசாரிக்க கட்டணம் கிடையாது. அவரவர் தன் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லவும் வாய்ப்பு உண்டு. எனினும், அரசவையின் தீர்ப்பு இறுதியானதாக இருக்கும். தண்டனைகள் கடுமையானதாக இருக்கும். இளவரசன் ஓட்டிய தேரின் சக்கரத்தில் சிக்கி கன்று இறந்ததால், நீதி கேட்டு தாய்ப் பசு ஆராய்ச்சிமணியை அடித்ததால், மன்னன் தன் மகன் மீது தேர்ச்சக்கரத்தை ஏற்றிக் கொன்றான் என்பது மனுநீதிச் சோழன் கதை. வேடனிடமிருந்த தப்பி வந்த புறாவின் உயிரைக் காப்பாற்றிய சிபிச் சக்கரவர்த்தி அதற்கு ஈடாக தனது தொடையிலிருந்து சதையை அறுத்துக் கொடுத்தான் என்பது நெடுங்காலக் கதை. நீதி பரிபாலனம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான காப்பியம்தான் சிலப்பதிகாரம். நீதி தவறினால் அரசனும் அவன் நாடும் என்னவாகும் என்பதை சிலம்பு எடுத்துரைக்கிறது. பாண்டிய மன்னர் ஒருவர் இரவு நேர நகர்வலத்தின் போது, தங்கள் வீட்டுக் கதவுகளைத் தட்டியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டிய நிலையில், மன்னன் தன் கைகளைத் தானே வெட்டிக்கொண்டு, அதற்குப் பதிலாக தங்கத்தால் ஆன கையைப் பொருத்திக் கொண்டதால் பொற்கைப் பாண்டியன் எனப் பெயர் பெற்றதாக இலக்கியம் காட்டுகிறது. மிக இளம் வயதில் பதவியேற்ற சோழமன்னன் கரிகாலன், தனது தீர்ப்பை பெரியவர்கள் ஏற்பார்களா என்ற சந்தேகத்தினால், யாருக்கும் அடையாளம் தெரியாத வகையில் வயதான தோற்றத்தில் அவைக்கு வந்து தீர்ப்பு உரைத்ததாகவும் நீதிக்கதைகள் எடுத்துரைக்கின்றன.