Skip to main content

மாவலி பதில்கள்

லட்சுமிதாரா, வேலூர் (நாமக்கல்)

"சிங்கம்-புலியையே பார்த்தவன் நண்டுக்கா பயப்படப் போகிறேன்' என்கிறாரே அமைச்சர் ஜெயக்குமார்?

ஜெயலலிதா-சசிகலாவுக்கே டேக்கா கொடுத்த எனக்கு, மீனவப் பெண்ணின் எதிர்ப்பு எம்மாத்திரம் என்ற இறுமாப்பு.அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

பிக் பாஸ் நிகழ்ச்சி கமலுக்கு பெருமை சேர்க்கிறதா?

பிக் பாஸ் கமலுக்கு துட்டு சேர்க்கும். அதேநேரத்தில், பிக்பாஸிலும் ட்விட்டரிலும் அவர் வைக்கும் குட்டுகள் அதிர வைக்கின்றன. "நான் தவிர்த்த நூல் ஒன்று இருக்கிறது, அது என்னை மிகவும் பாதித்த நூல், “பூணூல் “ அதனாலேயே அதை தவிர்த்தேன்' என ட்விட்டரில் கமல் சொன்ன கருத்துகள், ஆயிரமாயிரம் ஆண்டுகாலமாக போலி கௌரவம் கொண்டிருந்த சுயசாதி மீதான சம்மட்டி அடி.

mavalianswers

 

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் திருநங்கை வழக்கறிஞராகியிருக்கும் சத்தியஸ்ரீசர்மிளா பற்றி?

"ஆண்-பெண் இருவருக்கும் இளைப்பில்லை காண் என திருநங்கைகள் ஒவ்வொரு துறையிலும் முத்திரை பதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். சத்தியஸ்ரீசர்மிளா, நீண்டகாலமாக இருண்டு இருந்த திருநங்கை சமுதாயத்தின் மீது சட்டத்தின் வெளிச்சத்தைப் பாய்ச்சியிருக்கிறார்.எஸ்.பூவேந்தஅரசு, பொன்நகர், சின்ன தாராபுரம்

நாட்டில் நடக்கும் அரசியல்-சமுதாய சீர்கேடுகளையும் அக்கிரமங்களையும் பார்க்கும்போது தெய்வம் என்ற ஒன்று இருக்கின்றதா என நினைக்கத் தோன்றுகிறதே?

தெய்வத்தை பகவான் என்றும் சொல்வார்கள். அரசியல்வாதிகள் முதல் சாராய வியாபாரிகள் வரை பலவகை மொள்ளமாரிகளையும் முடிச்சவிழ்க்கிகளையும் கல்வி வள்ளலாக மாற்றிவிட்ட இன்றைய கல்வி வியாபாரத்துக்கு நடுவே, தன்னுடைய கடமையை சரியாகச் செய்து, ஆசிரியர் பணி மூலம் கல்வித்துறையின் மாண்பை உயர்த்தியிருக்கிறார் பகவான். அவரை அரசாங்கம் இடம் மாற்றம் செய்துவிட்டது என்பதை அறிந்து துடிதுடித்து, கண்ணீர் விட்டு, அவரைச் சூழ்ந்து நின்ற திருவள்ளூர் மாவட்டம் வெளியகரம்அரசுப் பள்ளி மாணவர்களின் பேரன்பில் தெரிந்தது பகவானின் மகிமை. பெரிய மனிதர்களால் கண்டறியப்பட முடியாத பகவான், குழந்தைகளின் கண்களுக்குத் தெரிந்திருக்கிறார். தமிழ்நாட்டில் ஆங்காங்கே இது போன்ற பகவான்கள் பல குழந்தைகளுக்கு அருள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது ஆறுதலும் நம்பிக்கையும் தருகிறது.நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்

கோபாலபுரம், ராமாவரம், போயஸ் கார்டன்.. இன்று?

உற்சவம் போக முடியவில்லை என்றாலும் கோபாலபுரத்தில் மூலவர் இருக்கிறார். அதனால் பிரதமர் தொடங்கி கடைமட்டத் தொண்டன்வரை பலருக்கும் அவ்வப்போது தரிசனம் கிடைக்கிறது. ராமாவரம் என்பது பாழடைந்த கோவில். போயஸ்கார்டன் என்பது பளபளப்பான கோவில். சிலை எப்படி காணாமல் போனது என்ற மர்மம்தான் அதன் பக்தர்களுக்கே இன்றுவரை புரியவில்லை.மு.ரா.பாலாஜி, கோலார் தங்கவயல்

இ.பி.எஸ்-ஓ.பி.எஸ். ஆட்சி எம்.ஜி.ஆர். வழியிலா, ஜெயலலிதா வழியிலா, எந்த வழியில் பயணிக்கிறது?

மோடி கைகாட்டும் வழியில் பொதுமக்களின் தலை மீது ஏறி பயணிக்கிறது.

ஆன்மிக அரசியல்

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

திராவிட இயக்கத் தலைவர்கள் -குறிப்பாக தி.மு.க. தலைவர்கள் இந்து மதத்தின் மீது காட்டும் கசப்பையும் வெறுப்பையும் கிறிஸ்தவம்-இஸ்லாம் மதங்களின் மீது காட்டுவதில்லையே?

பகுத்தறிவு என்பது அனைத்து மதங்களிலும் உள்ள மூடநம்பிக்கைகளையும், அடிமைத்தனத்தையும் எதிர்ப்பதுதான். இதில் ஒரு மதத்தின் மீது வெறுப்புகாட்டி, இன்னொரு மதத்தை கண்டுகொள்ளாமல் விடுவது வாக்கு அரசியலுக்கான சாதுர்யமாகத்தான் பார்க்கப்படுமே தவிர, பகுத்தறிவின் வளர்ச்சியாகாது. அதே நேரத்தில், இந்து என்னும் மதமும் இந்தியா என்ற நாடும் வெள்ளைக்காரர்கள் ஆட்சியில்தான் கட்டமைக்கப்பட்டன. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பார்சிகளைத் தவிர மற்றவர்கள் இந்துக்களாக கணக்கிடப்பட்டனர். உண்மையில், இந்த மண்ணில் ஆசீவகம், பவுத்தம், சமணம், வைணவம், சைவம், சிறுதெய்வ வழிபாடு, குலசாமி கும்பிடுதல், ஒளி வணக்கம் உள்ளிட்ட பலவித சமயநெறிகள் உண்டு. இவையனைத்தும் இந்து என்ற அடையாளத்தின்கீழ் ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்டன. அதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்பே, விந்திய மலைக்கு தெற்கே இருந்த திராவிட நிலத்தின் பண்பாட்டு விழுமியங்கள் ஆரியத்தின் ஆளுகைக்குள்ளாகி, அதுவே இந்து மதமாக நிறுவப்பட்டுவிட்டது என்பது திராவிட இயக்கத்தின் வரலாற்றுப் பார்வை.

பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் இந்து மதத்தின் வருணாசிரமக் கொள்கையிலிருந்து சமூக நீதி வழியாக பண்பாட்டு விடுதலை பெறுவதே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையாக இருப்பதால் அதன் விமர்சனங்கள் இந்து மதத்தை நோக்கியே உள்ளன. இங்குள்ள கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் ஜெருசலத்திலிருந்தோ அரேபியாவிலிருந்தோ வந்தவர்களல்லர். இந்து மதத்தின் வருணாசிரமத்தை ஏற்க முடியாமல் மதம் மாறியவர்களும் அவர்களின் வாரிசுகளும்தான். எனவே, மதம் மாறி தன்னை விடுவித்துக்கொண்டவர்களும், மதக் கட்டுக்குள்ளேயே தனது பண்பாட்டு விடுதலையைக் கோருகிறவர்களும் இணக்கமாக இருப்பது இயல்புதானே!
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்