Skip to main content

மாவலி பதில்கள்

ப.பாலா(எ) பாலசுப்பிரமணி-பாகாநத்தம்

திண்டுக்கல் சீனிவாசனை உங்களுக்குப் பிடிக்குமா?

"திண்டுக்கல்' பூட்டு போட்டு மறைத்து வைத்திருந்த பல உண்மைகளை, "சீனி' (சர்க்கரை) போல சுவையாக வெளிப்படுத்திய அவருடைய "வாசனை'யான வார்த்தைகளை யாருக்குத்தான் பிடிக்காது.


டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்

மதுரை-தஞ்சை இடையே விரைவில் 8 வழிச்சாலை என்கிறாரே அமைச்சர் உதயகுமார்?

""இருக்கிற ரோட்டை குண்டும் குழியுமில்லாமல் சரி பண்ணுங்க.. அரசுப் பேருந்தில் போறதுக்குள்ள உசுரே போயிடுது'' என்கிறார்கள் மதுரை-தஞ்சை சாலை வழியே உள்ள திருமயம் பகுதிவாசிகள்.


திராதி, துடியலூர்

"ஜெ. என்ன நோய்க்கு சிகிச்சையளிக்கப்பட்டார்' எனத் தெரியாது என நர்ஸ் பிரேமா ஆண்டனி வாக்குமூலம் அளித்திருக்கிறாரே?

சிகிச்சை அளிக்க வேண்டியவர்கள் டாக்டர்கள். அந்த டாக்டர்களுக்குத் தலைமை வகித்தவர் அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகி பிரதாப் ரெட்டி. அவரே, ஜெ., தன் டிஸ்சார்ஜ் தேதியை தானே தீர்மானித்துக்கொள்வார் என்கிற அளவிற்கு நோயாளி பற்றி சொன்னபோது, அவரது மருத்துவமனை நர்ஸ் கொடுத்திருக்கும் வாக்குமூலம் வேறு எப்படி இருக்கும்?

mavalianswers


ஆதவன், பெரும்பண்ணையூர்

கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாள் என ஆயுதத்துடன் அலைகிறார்களே, இதுதான் சமூகநீதி அடிப்படையிலான கல்வியின் விளைவா?

75 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் கல்லூரிகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிட முடியும். அப்போது முக்கியமான கல்விநிலையமாக இருந்தது கும்பகோணம் அரசுக் கல்லூரி. அங்கே உயர்சாதி மாணவர்களுக்கு தனியாக தண்ணீர் பானையும் மற்ற சாதி மாணவர்களுக்கு வேறொரு தண்ணீர் பானையும் வைக்கப்பட்டிருந்தது. இந்த சமூக அநீதியை எதிர்த்து, சுயமரியாதை உணர்வுமிக்க மாணவர்கள் ஒன்று திரண்டனர். அதன் விளைவாக 1943-ல் உருவானதுதான், திராவிட மாணவர் கழகம். திராவிடர் கழகம் உருவாவதற்கு ஓராண்டுக்கு முன் உருவான மாணவர் கழகத்தை தொடங்கி வைத்து உரையாற்றியவர் அறிஞர் அண்ணா. திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் 1944-ல் நடந்த கூட்டத்தில் மாணவர்கள் திரளாகப் பங்கேற்கவேண்டும் என "குடி அரசு' இதழில் பெரியார் எழுதினார். "கோழைகளையும் தந்நல வீரர்களையும் நல்லுருவாக்குங்கள். பெண் மக்களை ஆண்மையுள்ளவர்களாக ஆக்குங்கள். கீழ்மக்களை-தீண்டப்படாதவர்கள் என்பவர்களை மேன்மக்களாக ஆக்குங்கள். இவை உங்களால் முடியும். கண்டிப்பாக முடியும். அதுவும் இப்போதே முடியும். இப்போதுதான் முடியும்' என பெரியார் சொன்ன வார்த்தைகள், திராவிடர் மாணவர் கழகத்தின் பவளவிழா ஜூலை 8-ல் கொண்டாடப்படுகிற சூழலில், தமிழக கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் கச்சிதமாகப் பொருந்தும்.


உமரி பொ.கணேசன், மும்பை-37

தமிழக அரசை எதிர்த்து போராடுபவர்கள் மீது தீவிரவாதி முத்திரை குத்தப்படுகிறதே?

மக்கள் நலனுக்காகப் போராடுபவர்களை தீவிரவாதியாக சித்தரிப்பதே அரச பயங்கரவாதத்தின் வழக்கம், வெள்ளையர் ஆட்சியிலிருந்து கொள்ளையர் ஆட்சி வரை.


அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

மோடி ஆட்சியில் அறிவிக்கப்பட்ட 13 எய்ம்ஸ் மருத்துவமனைகளில் ஒன்றுகூட செயல்பாட்டுக்கு வரவில்லையாமே?

பொருளாதார பலவீனம், மதவாதப் புற்றுநோய், மாநில நலன் பாதிப்பு, சமூக நீதிக்கு மாரடைப்பு என நாட்டையே நோயாளியாக்கிய ஆட்சியிடம் ஆரோக்கிய சிகிச்சையை எதிர்பார்க்க முடியுமா?

_________
ஆன்மிக அரசியல்

பி.மணி, சித்தூர், ஆந்திரா

ஆன்மிகம் என்ற போர்வையில் மறைந்துள்ள போலி சாமியார்களிடமிருந்து மக்கள் தங்களைக் காத்துக் கொள்வார்களா?

டெல்லி வடக்குப் பகுதியில் உள்ள சாந்த் நகர் புராரியில் ஒரு வீட்டில் 11 பேர் தற்கொலை செய்து கொண்டு ஆன்ம விடுதலை அடைந்திருக்கும் பரிதாப நிகழ்வு, ஆன்மிகம் பற்றிய பல கேள்விகளை எழுப்புகிறது. பல ஆண்டுகளுக்கு முன் மரணமடைந்த தன் தந்தையை பிரார்த்தனை செய்ததால், தனக்கு பேசும் சக்தி கிடைத்ததாகவும், மரணத்தின் மூலம் கடவுளையும் தந்தையையும் நேரில் காணலாம் என்றும் லலித் பாட்டியா என்பவரின் டைரிக் குறிப்பு கூறுகிறது. லலித் பாட்டியா குடும்பத்தினரும் அவரது சகோதரர் பவனேஷ் குடும்பத்தினருமாக 11 பேர் (7 பெண்கள், 4 ஆண்கள்) கண்களையும் வாயையும் கட்டிக்கொண்டு தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டு, அந்த மரணத்தின் மூலம் கடவுளை அடைய முயற்சித்திருக்கிறார்கள். இதில் லலித் பாட்டியாவின் தாய் மட்டும் தூக்குக் கயிறால் இறக்காமல் கழுத்து நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார். பல நாட்களாக பூஜை, யாகம் ஆகியவற்றை நடத்தி, வெளி ஆட்களுடன் தொடர்புகளை துண்டித்துக்கொண்டு ஆன்ம விடுதலைக்காக மரணத்தை அடைந்த இந்த குடும்பத்தினர், தங்களின் ஆன்மா உடனே கடவுளிடம் செல்வதற்காக வீட்டுச் சுவரில் 11 பிவிசி குழாய்களைப் பதித்திருப்பதும் அதிர வைத்துள்ளது. தன் மனதையே கோவிலாக்கி, அதில் இறைவனுக்கே முழுமையான இடம் தந்து, கடவுள் பற்றிய நினைப்பையே மந்திரமாக்கி வழிபடும் மரபை தமிழகத்து ஆன்மிகவாதிகள் பல நூறாண்டுகளுக்கு முன் கற்றுத் தந்துள்ளனர். இன்றைக்கு ஆன்மிகம் என்பது அரசியலாகவும் வியாபாரமாகவும் ஆன நிலையில், லலித் பாட்டியாவை இப்படிப்பட்ட கொடூர வழிக்குத் திருப்பிய புண்ணியவான் "காடா பாபா' யார், இதன் பின்னணியில் புதைந்துள்ளது ஆன்மிகமா -வேறு விவகாரமா? என போலீஸ் துருவுகிறது.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்