பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118
கொரோனா ஊரடங்கினால் வேலையும் வருமானமும் இல்லாத நிலையில், நிறைய வீடுகளின் அடுப்படியில் பூனைகள் படுத்துக்கொள்ள இடம் கிடைத்து விட்டது அல்லவா?
வீடுகளில் பூனைகள் ராஜ்ஜியம். ஆட்சியாளர்கள் ராஜ்ஜியம் செய்யும் கோட்டையில், ஊழல் பெருச்சாளிகள்.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை 14
சாத்தான்குளம் காவல்நிலைய விவகாரத்தில் போலீசார் மீது உயர்நீதிமன்ற நீதிபதிகள் கடுமை காட்டுகின்றனர். ஆனால் தமிழக முதல்வர் தொடங்கி அமைச்சர்கள் வரை போலீசாருக்கு ஆதரவாகவே இருக்கிறார்களே?
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் கண்டனத்தால் ஒரு சாத்தான்குள அவலம் அம்பலமாகிவிட்டது.. முதல்வர் மற்றும் அமைச்சர்களின் ஆதரவால் மாநிலம் முழுவதும் பல காவல்நிலையங்களில் நடக்கும் சாத் தான்குளம் பாணியிலான கொடூ ரங்கள் மறைக்கப்படுகின்றனவே!
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
பல ஆண்டுகளாக கட்சியில் இருப்பவர்களுக்கு பதவி கிடைக்காத நிலையில், மாற்றுக் கட்சியினர் வந்தால் உடனே பதவி தருவது ஏன்?
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்றார் அண்ணா. ஆனால் தற்போது தி.மு.க போன்ற மாநிலக் கட்சிகள் தொடங்கி, பா.ஜ.க போன்ற தேசியக் கட்சிகள் வரை மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மட்டுமே மணம் உண்டு என்பது போல பதவிகள் தரப்படு கின்றன. அங்கிருந்து இங்கு தாவி வந்ததுபோல, இங்கிருந்து வேறு இடத்திற்கு தாவிவிடக்கூடாது என்கிற அரசியல் ராஜதந்திரமோ என்னவோ!
மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்
முதல்வர் எடப்பாடி எடுக்கும் முடிவுகளை முன்கூட்டியே தெரிந்து கொண்டு, ஆலோசனை என்ற பெயரில் அறிக்கை வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின் என்கிறாரே அமைச் சர் மாஃபா பாண்டியராஜன்?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யவேண்டும் என மு.க.ஸ்டா லினும் மற்ற கட்சித்தலைவர்களும் வலியுறுத்தியபோது, முதல்வர் எடப்பாடி யும் அவரது ஆட்சியும் எடுத்த முடிவு என்ன? உயர்நீதிமன்றம் "நங்' என்று குட்டு வைத்த பிறகு எடுத்த முடிவு என்ன? எதிர்க்கட்சிகள் கொடுக்கும் அழுத்தமும், நீதிமன்றங்கள் விதிக்கும் உத்தரவுகளும்தான் எடப்பாடி ஆட்சியை செயல்பட வைக்கின்றன. முடிவுகளை முன்கூட்டியே தெரிந்துகொண்டு, ஸ்டாலின் அறிக்கை விடுகிறார் என்று அமைச்சர் சொல்வது உண்மையென் றால், ஆளுங்கட்சிக்குள்ளேயே எதிர்க் கட்சிக்கு உளவு சொல்லும் அளவுக்கு ஆட்களும் அதிகாரிகளும் இருக்கிறார் கள் என்பதாகத்தான் அர்த்தம். இது ஆட்சியின் பலவீனத்தையே காட்டும்.
தூயா, நெய்வேலி
தள்ளாடும் காங்கிரஸ் கட்சிக்கு இப்போதைய தேவை என்ன?
நேரு காலத்தில் இருந்த பெருந் தலைவர் காமராஜர் போன்ற தலைவரும் அவரது ‘கே’ பிளான் போன்ற திட்டமும்.
_________
தமிழி
அயன்புரம், த.சத்தியநாராயணன், சென்னை-72
பண்டைத் தமிழர் வாழ்க்கையில் மிகவும் பிரதானமாக இருந்த உணவு தானியம் அரிசியா, கேழ்வரகா?
தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகின் பல பகுதிகளிலும் வாழும் தொல்குடிகளின் உணவுப் பழக்கம் என்பது அவர்களின் மண்ணின் தட்பவெப்பத்திற்கேற்ப இயல்பாகவும் செழிப்பாகவும் வளரும் தானியங்களேயாகும். அதனை அவர்கள் சாப்பிட்டு, தங்கள் உடலினை உறுதி செய்து, உண்ட உணவுக்கேற்ப உழைத்து, ஆரோக்கியமாக வாழ்ந்திருக்கிறார்கள். தட்பவெப்பம்- மண்ணின் தன்மை இவற்றிற்கேற்ப விளையும் தானியங்களை அங்கு வாழும் மனிதர்கள் சாப்பிடும்போது அதுவே அவர்களின் உணவுப்பழக்கமாகிறது. அந்தப் பழக்கம் ஒரு கட்டத்தில் பண்பாடாக மாறுகிறது. பழந்தமிழர்கள் வாழ்வில் அரிசி, சாமை, வரகு, கேழ்வரகு உள்ளிட்ட பல தானியங்களை சாப்பிட்டிருப்பது இலக்கியக் குறிப்புகள் வாயிலாகத் தெரியவருகிறது. தமிழர்கள் தங்கள் நிலத்தை ஐந்து வகையாகப் பகுத்திருந்தனர். இதில் குறிஞ்சி நிலத்தில் முதன்மையான தானியமாக தினை இருந்துள்ளது. நார்ச்சத்து நிறைந்த தினை உணவு என்பது எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. நரம்பு மண்டலத்தையும் வயிற்றுப்பகுதியில் உள்ள செரிமான உறுப்புகளையும் வலுப்படுத்தக்கூடியது. மலை சார்ந்த பகுதியே குறிஞ்சி நிலம் எனப்படுகிறது. பழனி மலையில் உள்ள முருகன் கோவிலில் இப்போதும் தினைமாவு என்பது பிரசாதமாக வழங்கப்படுவதைக் காணலாம்.
சாமை என்பது முல்லை நிலத்தில் வாழும் மக்களின் உணவாக இருந்துள்ளது. இதில் இரும்புச் சத்து அதிகம். நஞ்சை-புஞ்சை-மானாவாரி என எந்த நிலத்திலும் விளையக்கூடியதாக இருந்த வரகு என்பது சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தானியமாகும். புரதச் சத்து நிறைந்த வரகு உணவு போலவே, கேழ்வரகு உணவும் தமிழக மக்களின் முக்கிய உணவாக இருந்துள்ளது. வரகிலிருந்து சற்று மாறுபட்டு, கீழ்நோக்கி கதிர் விடும் தன்மை கொண்டது கேழ்வரகு. இது உடலின் எடையை சீராக வைத்திருக்க உதவும். மழை குறைவான இடங்களிலும்-பெரிய அளவில் பாசன வசதி இல்லாத பகுதிகளிலும் கம்பு என்பது சத்தான உணவாக இருந்துள்ளது. புரதமும், உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பும் இதில் உள்ளது என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த தானியங்களைப் போலவே அரிசி என்பதும் தொல்தமிழர்களின் பண்பாட்டு உணவாகும். மருத நிலத்தில் நன்கு விளையக்கூடிய அரிசி பற்றி தொல்காப்பியம்,, மணிமேகலை, மதுரைக்காஞ்சி, பெரும்பாணாற்றுப்படை போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பழனி, ஆதிச்சநல்லூர் பகுதிகளின் அகழாய்வுகளிலும் அரிசி கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.