கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூர்-77

சாத்தான்குளம் விவகாரத்தில் "லாக் அப்' மரணம் நடக்கவில்லை, சிறை மரணம்தான் நடந்துள்ளது என்பது பற்றி?

மரணம் அடைந்தது சிறைக்கைதியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதாக இருக்கலாம். மரணத்திற்கு காரணம், லாக்கப்பில் நடந்த கொடூர சித்ரவதைகள்தான். இந்த உண்மை மக்களுக்கே தெரியும். தெரியாமல் மறைக்க இது ஒன்றும் ஜெயலலிதா மரணமல்ல என்பதை ஆட்சியாளர்கள் உணரவேண்டும்.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

Advertisment

mm"ஊழல் செய்து சிறைக்கு சென்ற ப.சிதம்பரத்திற்கு, பிரதமரை குறைகூற தகுதி இல்லை' என்று பா.ஜ. தேசிய செயலாளர் முரளிதரராவ் கூறியுள்ளாரே?

மாற்றுக் கட்சியினரை ஊழல் புகாரின் பேரில் கைது செய்வது புதிதல்ல. கர்நாடகாவில் இன்றைய பா.ஜ.க. முதல்வர் எடியூரப்பா வரை இதில் விதிவிலக்கும் அல்ல. குற்றம் நிரூபிக்கப்படு கிறதா என்பதுதான் முக்கியமானது. அப்படியே ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது என்பதற்காகவே, ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டை மக்களிடம் அம்பலப்படுத்தக்கூடாதா என்ன? ஊரடங்கு பாதிப்புகள் முதல் சீனாவின் ஆக்கிர மிப்பு வரை ப.சிதம்பரம் முன்வைத்த யோசனைகளும் கேள்விகளும் வலுவானவை. அவற்றுக்குப் பதில் சொல்லவோ, செயல்படுத்தவோ தங்களுக்கு தகுதி இல்லை என்பதைத்தான் பா.ஜ.க.வினர் நிரூபித்து வருகிறார்கள்.

மு. முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

Advertisment

எனது அரசை கவிழ்க்க இந்தியாவில் சதி செய்யப்படுகிறது. அதற்கான மீட்டிங் டெல்லியில் போடப்படுகிறது என்று கூறுகிறாரே நேபாள பிரதமர்?

நேபாள நாட்டின் திருத்தம் செய்யப்பட்ட வரைபடத்தில் இந்திய-நேபாளம் எல்லையில் உள்ள லிம்பியதுரா, காலபாணி, லிபு-லேக் உள்ளிட்ட பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனை இந்தியா எதிர்க்கிறது. ஆனால், நேபாள நாடாளுமன்றம் ஒருமனதாக ஏற்றுக் கொண்டிருக்கிறது. அந்நாட்டின் குடியரசுத் தலைவர் பித்தியாதேவி பண்டாரியும் ஒப்புதல் அளித்திருக்கிறார். உலகின் ஒரே இந்து நாடு என நேபாளம் பெயர் பெற்றிருந்த மன்னராட்சிக் காலம்வரை இந்தியாவும் குறிப்பாக பா.ஜ.க.வும் அதனைக் கொண்டாடின. இப்போது இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சி செய்யும் காலத்தில், நேபாளம் தனது மதஅடையாளங்களைக் கடந்து மனித உரிமைகள், நாட்டுப் பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத் தும் ஜனநாயக பாணிக்கு மாறியிருக்கிறது. எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவும் செய்கிறது. சுண்டைக்காய் சைஸ் நாடான நேபாளத்தின் இந்தப் போக்கு இந்தியாவை யோசிக்க வைத்துள்ள நிலையில்தான், நேபாள பிரதமர் ஒளி, தன்னைப் பதவி நீக்கம் செய்ய டெல்லியில் சதி ஆலோசனை நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அண்டை நாட்டு சதி என்பது எல்லா நாட்டு ஆட்சியாளர்களும் சொல்லக்கூடியதுதான். நடக்கப்போவது என்ன என்பதைப் பொறுத்து டெல்லியில் என்ன நடந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

அ. யாழினி பர்வதம், சென்னை 78

சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமது படேல் பெயரில் அகமது என்று முஸ்லிம் பெயரும், படேல் என்று இந்து பெயரும் இருக்கிறதே அது எப்படி?

இந்தியப் பெயராக இருக்கிறது என்பதுதான் பொருத்தம். படேல் என்பது ஊர்த்தலைவர் என்பதற்கான சொல். அதனை குடும்பப் பெயராக-சாதிப் பெயராக பயன் படுத்துவோரும் உண்டு.

பி.மணி,வெள்ளக்கோவில்

மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை இதைத்தவிர மனிதனுக்கு ஏதாவது ஆசை இருக்கிறதா?

புகழ் மீதான ஆசை. புகழைத்தவிர வேறு எதுவும் நிலைத்து நிற்கும் செல்வமில்லை என்கிறார் வள்ளுவர். ஆனால், அதனை வற்புறுத்தி அடைய முடியாது. அதுவாக வரும். ‘"புகழே நீ ஒரு நிழல். உன்னைப் பற்றிக் கவலைப்படாதவர்களைத் தொடர்ந்து கொண்டி ருப்பாய்' என்கிறார் கலைஞர்.

ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி 635001.

நீச்சல் தெரியாமல் கடலில் குதித்தவர்களை மீட்பது போன்றது கொரோனா தடுப்பு பணி என்கிறாரே அமைச்சர் உதயக்குமார்?

கடலில் குதித்தவர்கள் மட்டும் நீச்சல் தெரியாதவர்களல்ல, அவர்களைக் காப்பாற்றுவதாக குதித்திருப்பவர்களும் நீச்சல் தெரியாதவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை தமிழகத்தின் கடந்த சில நாட்களிலான கொரோனா பரவல் வெளிப்படுத்துகிறது.

_____________

தமிழி

சு.வெங்கடேஷ், கோட்டயம்

கீழடி அகழாய்வில் நடராஜர் சிலை கிடைத்திருப்பதைக் காட்டும் வீடியோ பார்த்தீர்களா?

ஆதிச்சநல்லூர், கொடு மணல், கீழடி என தொல் தமிழர்களின் நாகரிக காலத்தின் தொன்மையை வெளிப்படுத்தும் அகழாய்வுகளில் கிடைப்பவை யெல்லாம் தமிழர்களின் பயன்பாட்டுக் கருவிகள், முதுமக்கள் தாழிகள், நேர்த்தியான கட்டடங்கள்- கட்டமைப்புகள் உள்ளிட்டவை தான். வழிபாடுகள் சார்ந்து கிடைப்பவை பலவும் சங்க இலக்கியம் காட்டும் அடையாளங்களாகவே இருக்கின்றன. தமிழர்களிடம் தொன்மைக் காலத்திலிருந்தே பக்தி இருந்தது. அதனடிப் படையிலான அப்போதைய வழிபாட்டு முறைகளுக்கும் தற்காலத்திய வழிபாடுகளுக்கும் வேறுபாடு உண்டு. கோவில்களில் அபிஷேகம்- ஆராதனை- உற்சவம் என தற்போது கொண்டாடப்படும் சிலைகளின் தோற்றம் கி.பி. 6ஆம் நூற்றாண்டுக்கு பிறகே தொடங்குகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். குறிப்பாக, பல்லவர் காலத்தில் தொடங்கி பிற்காலச் சோழர்கள், பாண் டியர்கள் அதன்பின் வந்த ஆட்சியாளர்கள் காலத்தில் இவை வளர்ச்சியும் சிறப்பும் பெற்றுள்ளன. கீழடியில் நடராஜர் சிலை கிடைத்தது என்கிற வீடியோ உண்மையல்ல, அப்படி எதையும் நம்ப வேண்டாம் என்கிறார் தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவானந்தம்.