வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டு காலம் சீரழிவு நடந்துள்ளது' என்கிறாரே கமல்?
அவர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். கமல் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி அரை நூற்றாண்டு காலம் கடந்திருக்கிறதல்லவா..
கற்குவேல், தேவகோட்டை
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் யார் சாம்பியன் என்பதை மாவலியால் கணிக்க முடியுமா?
ஆட்டக்களத்தின் கடைசி நேரத்தில்கூட முடிவுகள் மாறிய உலகக் கோப்பை ஆட்டங்கள் உண்டு. ஜாம்பவான்களான மெஸ்ஸி, ரொனால்டோ பங்கேற்ற அணிகளே இம்முறை தோல்வியுடன் வெளியேறிவிட்டன. மாவலி சோதிடம் பார்க்கும் பணிக்கர் அல்லர், கணிப்பதற்கு! 2010-ல் உலகக் கோப்பை போட்டியை பால் என்கிற ஆக்டோபஸ் கணித்து ஒவ்வொரு போட்டியின் முடிவையும் முன்கூட்டி தெரிவித்தது. 2014-ல் நெல்லி என்கிற யானை கணித்தது. தற்போது ஏச்சில்ஸ் என்கிற காது கேட்காத பூனை கணிக்கிறதாம். எனவே மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித விளையாட்டு அல்ல.. அதையும் தாண்டியதாக உள்ளது. கணிப்பைக் கடந்த விருப்பம் என்பது, தென்அமெரிக்க நாடுகளில் ஒன்று இம்முறை சாம்பியனாக வேண்டும்.
எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
"நடிகனாகி இருந்தால் ஜெயலலிதாவுடன் நடித்திருப்பேன்' என்கிறாரே துரைமுருகன்?
ஆகியிருந்தால் ஹீரோவாக நடித்திருக்கலாம். ஆகாத நிலையிலும் அரசியலில் அவருக்கு வில்லனாக நடித்து வெளுத்துக் கட்டியிருக்கிறாரே!
ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி
"தீர்ப்பு வழங்கிய பிறகு நீதிபதிகளால் பேச முடியாது; அவர்கள் வழங்கும் தீர்ப்புகள் பேசப்படவேண்டும்' என்று கூறியுள்ளாரே தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி?
விமர்சனங்களைத் தாங்கும் மனநிலை நீதிபதிகளுக்கு இருக்க வேண்டும் என்றும் அதே நீதிபதி சொல்லியிருப்பதையும் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியுள்ளார் வாசகர் வண்ணை கணேசன். நீதிபதிகள் அளித்துள்ள பல தீர்ப்புகள் வரலாற்றில் பேசப்பட்டுள்ளன. ஒரு சில தீர்ப்புகள் மீது விமர்சனம் இருந்தாலும், அதற்கு உள்நோக்கம் கற்பிப்பதன் மூலம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொள்ளவேண்டிய சட்ட நெருக்கடி ஏற்படும் என்பதால், ஊடகங்கள் உள்பட யாரும் பெரிதளவில் விமர்சிப்பதில்லை. ஆனால் சமூக வலைத்தளங்கள் பெருகிய பிறகு, இளங்கன்று பயமறியாது என்கிற வேகத்தில், நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்ட நொடியிலேயே விமர்சனக் கருத்துகள் வெடிக்கின்றன. கால மாற்றத்தால் வெளிப்படும் கருத்துகளை நீதிபதிகள் உணரவேண்டும் என்பதை தலைமை நீதிபதி தனக்கும் சேர்த்தே சொல்லியிருப்பார்.
பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை
சமீபத்தில் யாருடைய பேச்சு தங்களைக் கலங்கடித்தது?
27 ஆண்டுகளாக, தன் மகன் பேரறிவாளனை சிறையிலிருந்து விடுதலை செய்வதற்காக சளைக்காமல் நீதிப் போராட்டம் நடத்தியவர் தாயார் அற்புதம்மாள். விடுதலை கோரிக்கையை தவறான முன்னுதாரணம் என குடியரசுத் தலைவர் நிராகரித்த நிலையில், "என் மகனைக் கருணைக் கொலை செய்துவிடுங்கள்'‘என்று மனம்நொந்து சொன்ன வார்த்தைகளின் வலியும் வேதனையும் மனதை கலங்கடித்துவிட்டன.
ஆன்மிக அரசியல்
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
ஆன்மிக அரசியல் திராவிட இயக்கத்திற்கு எதிரியா? நண்பனா?
திராவிட இயக்கத்தை அப்புறம் பார்க்கலாம். ஆன்மிக அரசியல் பல நேரங்களில் ஆன்மிக வழியில் நடப்பவர்களுக்கே எதிரியாகியிருக்கிறது. ஆன்மிகவாதியான கபீர்தாசரின் 500-வது ஆண்டு நினைவுநாளில் கலந்து கொண்டு அரசியல் பேசினார் பிரதமர் நரேந்திர மோடி. அவர் பேசிய அரசியல், பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகளைக் கிளப்பியிருக்கிறது. இதையும் அப்புறம் பார்க்கலாம். காசிக்கு அருகே உள்ள ஓர் ஏரியில் கிடந்த குழந்தையான கபீரை, நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இஸ்லாமியர் எடுத்து வளர்த்துள்ளார். கபீருக்கு இந்துமத கருத்துகள் மீதும் ஈர்ப்பு இருந்தது. பக்தி மார்க்கத்தைச் சேர்ந்த ராமாநந்தரின் தாக்கம் கபீரிடம் அதிகம் காணப்பட்டது. அதே நேரத்தில், அன்புவழிக்கு எதிராகச் செல்லும் ஆன்மிகத்தை கபீர் விமர்சித்தார். வேதங்கள் பெயரிலான அர்த்தமற்ற சடங்குகளைக் கண்டித்தார். இதில் இந்து-முஸ்லிம் என்னும் பேதம் பார்க்காமல் இரு தரப்பின் மீதும் விமர்சனம் வைத்தார். அதனால் இரண்டு பக்க மதவாதிகளின் எதிர்ப்புக்குள்ளானார். அவர் இறந்தபோதுகூட, இந்து வழக்கப்படி எரிப்பதா-முஸ்லிம் வழக்கப்படி புதைப்பதா என சர்ச்சை எழுந்துள்ளது.
ஆன்மிக வழியில் மதநல்லிணக்க கருத்துகளை ஈரடிப் பாடல்களாக எழுதியவர் கபீர்.
இதயத்தில் தேடு, உள்ளே ஆழ்ந்து தேடின் அதுவே இறைவன் வாழும் இல்லம்
ஒரிஸாவில் தீர்த்த நீராடல் எதற்கு? மசூதியில் தலை வணங்குவதும் எதற்கு?
கபடம் மண்டிய மனதில், பிரார்த்தனையின் பயனும் என்ன? ஹஜ் பயணமும் எதற்கு? -இப்படியெல்லாம் கேட்ட ஆன்மிகவாதி கபீர்தாசரை ஆன்மிகத்தை வளர்ப்பதாகச் சொன்ன மத நிறுவனங்களே எதிரியாகத்தான் பார்த்தன.