இந்து குமரப்பன், விழுப்புரம்.
குடும்பத்தோடு யோகா செய்ய பொது மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளாரே?
அந்த அழைப்பை அவர், தன்னிலிருந்தே தொடங்கலாமே!
மு.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
மோடி தனது வார்த்தைகளையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் கவனித்து பயன்படுத்த வேண்டும் என்கிறாரே மன்மோகன் சிங்?
இந்திய நிலத்தில் சீனா ஊடுருவவில்லை என மோடி சொன்னதை சீன ஊடகங்கள் பாராட்டுகின்றன. சீனாவுக்கு அளித்த நற்சான்றிதழாகிவிட்டது இன்றைய பிரதமரின் வார்த்தைகள். இதை முன்னாள் பிரதமர் சுட்டிக்காட்டினால் அவரை தேசத்துரோகியாக சித்திரிக்கப் பார்க்கிறது பா.ஜ.க.
அ. யாழினி பர்வதம், சென்னை 78.
ராணுவ வீரர்களோ, அரசியல் தலைவர்களோ மறைந்தால் 21 குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்படுகிறது. 21 குண்டுகள் என்பது என்ன கணக்கு...!
14-16ஆம் நூற்றாண்டுகளில் வெளிநாட்டு படைக்கப்பல்கள் ஒரு நாட்டின் கரை அருகே வந்தால், தாங்கள் போர் செய்ய வரவில்லை எனக் காட்டும் வகையில் வானத்தை நோக்கி சுடுவார்கள். கப்பலில் 7 துப்பாக்கிகள் இருக்கும். அவற்றிலிருந்து ஒரு குண்டு சுடப்பட்டால், கரையில் உள்ள கோட்டையில் இருப்பவர்கள் 3 குண்டுகளை சுடுவார்கள். (கப்பலில் துப்பாக்கி மருந்து குறைவாகவும்-கரையில் அதிகளவிலும் வைத்துக்கொள்ள முடியும் என்பதால் இந்த விகிதாச்சாரம்) கப்பலின் 7 துப்பாக்கிகளுக்கு கோட்டையிலிருந்து 21 குண்டுகள் முழங்கும். அதுவே, பின்னர் அரச மரியாதையாக மாற்றப்பட்டது என்கிறது போர் நடைமுறை. ஜனநாயக ஆட்சியிலும் அது பின்பற்றப்படுகிறது.
கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன், பெங்களூர்-77.
பா.ஜ.க. கடந்த தேர்தலில்... "ராமர் கோயில்' விவகாரத்தை முன் எடுத்தது. அடுத்த தேர்தலுக்கு சீனா வசம் உள்ள "திபெத்' பகுதியில் உள்ள "கைலாயம்' பற்றிய விஷயத்தை கையில் எடுக்கும் என்பது சரியா?
இங்கேயே மதுரா, ஆக்ரா என தேர்தல் அரசியலுக்கான எளிமையான வில்லங்கங்களை உருவாக்கிக் கொண்டிருக்கும் போது, சீனா வரைக்கும் போகச் சொல்கிறீர்களே, நியாயமா?
____________
தமிழி
கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்
கொரோனா காலத்தில், சென்னையிலிருந்து தங்களின் சொந்த மாவட்டங்களுக்கு செல்வதற்கு தமிழர்கள் ஆர்வம் காட்டுகிறார்களே, சென்னை என்பது தமிழ்நிலம் இல்லையா?
தமிழ் இலக்கியம் சுட்டிக்காட்டும் நெய்தல் நிலம்தான் சென்னை. அது, கடற்கரை கிராமம். இன்றைய திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெரும்புதூரில் நடந்த அகழாய்வில் கிடைத்துள்ள பானை அடுக்குகள், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கடல்வாணிபத்திற்காக பொருட்களை சேகரித்து பாதுகாப்பாக வைக்கும் கலன் என ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது. அந்த இடத்திலிருந்து அருகிலுள்ள துறைமுகம் என்றால் அது சென்னைதான். மீன் பிடிப்பதைத் தொழிலாகக் கொண் டோரும் கடல் வாணிபம் செய்தோரும் வாழ்ந்த தொல்தமிழர் நிலம். அந்த நெய்தல் நிலத்தை ஒட்டி ஏரிப்பாசனத்தைக் கொண்ட வயல்கள் நிறைந்த மருத நிலங்கள் இருந்தன. அதுபோலவே, அடையாறு பகுதியை ஒட்டிய காடுகளுடன் கூடிய முல்லை நிலமும் இருந்தது. பல்லாவரம்-பரங்கி மலை-திரிசூலம் என மலை சூழ்ந்த குறிஞ்சி நிலமும் உண்டு.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என தமிழர்கள் பகுத்த நிலங்களைக் கொண்ட சென்னை, வெள்ளைக்காரர்கள் வருகைக்குப்பின் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியானது. கோட்டை, கொத்தளத்துடன் நகரத்திற்குரிய கட்டமைப்புகள் பெருகின. மாநகராட்சியாக உயர்ந்தது. தென்னிந்தியாவின் மிகப் பெரிய தலைநகரானது. அதன் வளர்ச்சியின் காரணமாக பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் அங்கே வரத் தொடங்கினர். வேலைவாய்ப்புகள் பெருகியதாலும், ரயில், பேருந்து, கார், மெட்ரோ ரயில் என காலத்திற்கேற்ப போக்குவரத்து மேம்பட்டதாலும், வணிகத் தலங்கள், தகவல்தொழில்நுட்ப பூங்காக்கள் உருவானதாலும் தமிழ்நாட்டின் பிற மாவட்ட மக்கள் சென்னைக்கு வந்து குடியேறினர். வந்தவர்களை சாதி பார்க்காமல், மதம் பார்க்காமல், ஏழை-பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காமல் தன் மடியில் தாங்கிக் கொண்ட அன்னைதான், சென்னை. அவள் மடியில் வளர்ந்தவர்கள் அவரவர் வசதிக்கேற்ப இடங்களை வாங்கி வீடுகள் கட்டினார்கள். அரசும் அதற்கேற்ப கட்டமைப்பை உருவாக்கியது. ஏரிகள், வயல்கள், காடு, மலையோரம் அனைத் தும் கான்க்ரீட் கட்டடங்களாயின. மக்கள் தொகை பெருக்கமும், மக்கள் நெருக்கமும் இன்று நோய்த்தொற்றுக்கு வசதியாகிவிட, அதனால் சென்னை மீது பழிபோட்டு சொந்த ஊர் திரும்புகிறார்கள். எம்டன் குண்டு, புயல், வெள் ளம், சுனாமி வரை பல பேரிடர்களை எதிர்கொண்ட சென்னை, இதிலிருந்தும் மீளும். சென்றவர்கள் திரும்பி வந்தால் தாயன்புடன் வாரி அணைக்கும்.