சி. கார்த்திகேயன், சாத்தூர்
தனக்கு கிடைத்த இந்த வாய்ப்புக்களை ஜெ. தீபா சரியாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புண்டா?
ஆரம்பத்திலிருந்தே தீபா கேட்டது அதிகாரத்தையல்ல, உரிமையை! அது சட்டரீதியாக கிடைத்துவிட்டது. அவரை சில செயல்களுக்குப் பயன்படுத்திக்கொள்ள நினைப்பவர்களை என்ன செய்யப்போகிறார் என்பதை இனிதான் பார்க்கவேண்டும்.
பி.மணி, வெள்ளக்கோவில்,திருப்பூர் மாவட்டம்
பாண்டிச்சேரியில் கொரோனாவினால் இறந்தவரை அடக்கம் செய்யப்பட்ட முறை சச்சரவை ஏற்படுத்தியுள்ளதே?
உயிரற்ற உடல் என்றாலும் அதனை மிகுந்த மரியாதையுடன் அடக்கம் செய்வது, எரியூட்டுவதுதான் வழக்கம். உடலைத் தூக்கி எறியும் காட்சிகள் கலங்கடித்து-கதறடித்தன. இனி இத்தகைய நிலை ஏற்படக்கூடாது என எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் தங்கள் சார்பில் இனி உடலடக்கப் பணிகளை மேற்கொள்ள அனுமதி கேட்க, புதுச்சேரி அரசும் அனுமதி வழங்கி யிருப்பது மனிதத்தன்மை உயிர்த்திருப்பதைக் காட்டுகிறது..
கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
பல பத்திரிகைகள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகளை நீதி மன்றம் சமீபத்தில் ஒட்டுமொத்தமாக ரத்து செய்த பிறகும் கூட, விமர்சனங்களை தாங்கிக்கொள்ள முடியாத அரசு, முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது பல்வேறு சட்டப் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறதே..?
வரதராஜன் செய்தி வாசிப்பாளர் மட்டுமல்ல, நாடக நடிகரும்கூட. அதனால், அவரது உச்சரிப்பில் தெளிவும் ஏற்றஇறக்கமும் இயல்பாக இருக்கும். அது மக்களின் மனதில் பதியும். கொரோனா காலத்தில் தன் உறவினர் ஒருவருக்கு மருத்துவ மனையில் இடம் கிடைக்கவில்லை என்பதை காணொலியாக அவர் வெளியிட, அதே அனுபவம் பலருக்கும் இருந்ததால் வைரலாகிவிட்டது. உண்மை பேசுவதை ஆள்வோர் விரும்புவதில்லை. அதனால், வரதராஜ னைக்கூட வழக்கு மூலம் மீண்டும் பரபரப்பாக்கிவிட்டது அரசாங்கம். ரிடையர்ட்மெண்ட் காலத்தின் அமைதியும் மனைவியை இறந்த சோகமும் சூழ்ந்த வாழ்க்கையைக் கழிக்கும் வரதராஜன், அரசைப் பாராட்டி மற்றொரு காணொலியும் வெளியிட்டார். ஆனாலும், வழக்கு அப்படியேதான் உள்ளது.
ஜெயசீலன், அயன்புரம், சென்னை
பி.டி.சரஸ்வதி, வண்ணை ஸ்டெல்லா போல அதிரடிப் பேச் சாளர்கள் இப்போதும் இருக்கிறார்களா?
இன்னமும் மேடைகளையே பார்த்துக் கொண்டிருந்தால் எப்படி? டி.வி. விவாதம் பக்கம் பார்வையைத் திருப்புங்க சார். சுந்தரமான வல்லிய பதில்கள் பளார் பளார்னு கிடைக்கும்.
வாசுதேவன் பெங்களூரு
கொரோனா இல்லாத நாடாக மாறிய நியூசிலாந்து போல தமிழகமும் மாறும் என்கிறாரே அமைச்சர்?
காலையில் டெஸ்ட் எடுப்பதை யும், மாலையில் அறிக்கை வெளி யிடுவதையும் நிறுத்தி, தமிழ்நாட் டையும் நியூசிலாந்தாக காட்டினாலும் காட்டுவார்கள்.
__________
தமிழி
ஆர் மாதவராமன், கிருஷ்ணகிரி-635001.
தமிழகத்தில் ஊர்ப்பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல் ஆங்கி லத்திலும் உச்சரிக்க அரசாணை வெளியிட் டுள்ளதே தமிழக அரசு?
முயற்சி திருவினையாக்கும். அதே நேரத்தில் அந்த முயற்சி சரியான இலக்கை நோக்கி அமைய வேண்டும். டேஞ்சூர் (Tanjore)) என எழுதவும் உச்சரிக்கவும்பட்ட நிலையை மாற்றி தஞ்சாவூர் (Thanjavur) என எழுதவும் பேசவும் வைக்க பல ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட முயற்சி பலனளித்தது. Trichnopoly(திருச்சினாபள்ளி) என்று எழுதப்பட்டதை ஆங்கிலத்திலும் திருச்சிராப்பள்ளி என எழுதச் செய்தனர். டின்னவேலி என்ற ஆங்கில உச்சரிப்பை மாற்றி, திருநெல்வேலி என்கிற அழகுத் தமிழே ஆங்கில உச்சரிப்பாகவும் மாறியது. Tuticorin என்பதை ஆங்கிலத்திலும் தூத்துக்குடி என உச்சரிக்க வைத்தனர். Tranquibar என்ற உச்சரிப்பு அகற்றப்பட்டு தரங்கம்பாடி என ஆங்கிலத்தில் உச்சரிக்க வைக்க காலம் கனிந்தது. இப்படி எத்தனையோ ஊர்களின் பெயர்கள் முறையான உச்சரிப்புக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போது, ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊர்களுக்கான ஆங்கில உச்சரிப்பு குறித்து அரசின் அறிவிக்கை வெளியாகியுள்ளது. Coimbatore என எழுதப்பட்டு வந்த கோயம்புத்துரை இனி Koyampuththur என எழுத வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. Vellore என எழுதப்பட்டு வந்த வேலூரை Veeloor என எழுத வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. முந்தைய உச்சரிப்பு வெல்லூர் என்றிருந்தால், தற்போதைய உச்சரிப்பு வீலூர் என்றாகிறது. ஒவ்வொரு மொழியிலும் அதனதன் தன்மைக்கேற்ற ஒலிப்பு முறைகள் உண்டு. தமிழில் உள்ள சிறப்பு "ழ' பெரும்பாலான மொழிகளில் கிடையாது. வடமொழியில் இருப்பது போன்ற நான்கு வகை "க' தமிழில் கிடையாது. எ, ஒ போன்ற குறில்கள் இந்தியில் கிடையாது. "ஓ' என்ற நெடிலை ஆங்கில உச்சரிப்பில் எழுதினால் "ஊ' என்றுதான் வரும். வங்காளத்தில் வ என்பது ப என்றே உச்சரிக்கப்படுகிறது. வங்காளதேசம் என்பதை பங்களாதேஷ் என்று சொல்கிறார்கள். எனவே, தமிழ் உச்சரிப்பை ஒட்டி ஆங்கில உச்சரிப்பிற்கேற்பவோ பிற மொழி உச்சரிப்பிற்கேவோ எழுதும்போது அந்த மொழிக்காரர்கள் அதே ஒலியுடன் உச்சரிக்க வேண்டும். இல்லையென்றால், இத்தகைய முயற்சிகள் முழுப் பலன் அளிக்காது. ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளின் உச்சரிப்பில் மொழிவல்லுநர்களின் ஆலோசனைகளைக் கேட்டு, புதிய ஒலிக்குறிகளை அங்கீகரித்து திருத்தங்கள் செய்வதே பொருத்தம்.