தூயா, நெய்வேலி

ஊரடங்குத் தனிமையில் மனதுக்கான மருந்து எது?

புத்தகங்கள், திரைப்படங்கள், பழைய நினைவுகள் என எத்தனையோ உண்டு. அதில் ஒன்று இசை. அன்னக்கிளி படம் வெளி யாகி 44 ஆண்டுகள் ஆன நிலையிலும், வாழ்வின் துயரங்களை மறக்கடிக்கும் மருந்தாக தமிழர்கள் பலருக்கும் ஊரடங்கு நேரத்தில் சிகிச்சையளித்தது இளைய ராஜாவின் இசை.

இந்து குமரப்பன், விழுப்புரம்

Advertisment

ஜெயலலிதா இடத்தை எடப்பாடி பழனிச்சாமி நிரப்பிவிட்டாரா?

அரசியலில் யார் இடத்தையும் யாரும் நிரப்ப முடியாது. அவரவருக்கான இடத்தை அடைவதற்கான வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்வது மட்டுமே சாத்தியம். முதல்வர் பதவி என்பது ஜெயலலிதாவுக்கு முன்பும் இருந்தது. எதிர்காலத்திலும் இருக்கும். அந்த முதல்வர் பதவியை அடைவதற்கு முன்பே கட்சிக்காரர்களை காலில் விழச் செய்தவர் ஜெயலலிதா. காலில் விழுந்து தவழ்ந்த கட்சிக்காரராக இருந்ததால் முதல்வரான வர் எடப்பாடி. தன் சொந்த கோபதாபங் களுக்காக மத்திய அரசுடன் மல்லுக்கட்டி யவர் ஜெயலலிதா. மாநில நலன்களுக்குக் கூட அதிர்ந்து குரல் கொடுக்கத் தயங்குபவர் எடப்பாடி. வேண்டியவராக இருந்தாலும் சங்கராச்சாரியார் ஜெயேந்திரரையே பதம் பார்த்தவர் ஜெயலலிதா. சங்கர மடத்துக்கு வேண்டியவரான குருமூர்த்திக்கே பம்முகிறவர் எடப்பாடி. தியேட்டரில் ஓடும் சூப்பர் ஹிட் மசாலா படமும்- இடைவெளியில் கொறிக்கிற மசாலா பாப்கார்னும் ஒன்றல்ல.

சு.வெங்கடேஷ், கோட்டயம்

Advertisment

மீண்டும் தியேட்டரில் படம் பார்ப்பது என்பது கனவுதானா?

கனவுகள் அரங்கு ஏறும் காலம் வரும், சற்று தாமதமாக.

m

பி.மணி, வெள்ளக்கோவில்

கொரோனாவிடமிருந்து நாம் கற்றது- கற்க வேண்டியது என்ன?

மனித வாழ்வு என்பது எளிமை யானது- எதுவும் நிரந்தரமில்லாதது என்பதே கொரோனாவிடமிருந்து மக்கள் அனைவரும் கற்றதாகும். ஹீரோக்களாகப் போற்றப்பட்டவர்களும், கூலித்தொழிலாளர்களாக கருதப்பட்டவர்களும் வேலை யின்றி முடங்கிக் கிடக்க வேண்டியதாயிற்று. ஹீரோக்களால் அவர்களின் ரசிகர்களான தொழிலாளர்களின் பசியைத் தணிக்க முடியவில்லை. பேரிடர் நேரத்தில், உண்மை யான ஹீரோவாக செயல்படவேண்டிய அரசாங்கமோ முதலில், கொரோனா இங்கே வராது என்றது. அதன்பிறகு வந்தால் கட்டுப்படுத்துவோம் என்றது. கடைசியில், கொரோனாவோடு வாழப் பழகிக் கொள்ளுங்கள் என்று கைகழுவியது. அதனால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல் நடந்து சென்ற அவலமும், ரயில் தண்டவாளத்தில் படுத்து விபத்துக்குள்ளானதும், பட்டினிச் சாவை எதிர்கொண்ட கொடூரமும் நிகழ்ந்தது. இந்த ஊரடங்கு காலத்தில், மக்கள் கற்க வேண்டியதைக் கற்றார்கள். அரசுகள் கற்கவேண்டியது நிறைய உள்ளது.

கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

20 லட்சம் கோடி?

ஏட்டுச் சுரைக்காய் பெரிதாக காய்த்திருக்கிறது. கறிக்கு எந்தளவு உதவப் போகிறது என்பது ஊரடங்கு காலம் முடிந்தபிறகு தெரிந்துவிடும்.

____________________

தமிழி

சி.கார்த்திகேயன், சாத்தூர்

இப்போதுள்ள ஆதார் போல பழங்காலத் தமிழர்களிடம் அடையாள அட்டை உண்டா? வேறு ஆட்சிப் பகுதிக்கு செல்லும்போது அடையாளச் சின்னங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்களா?

நாடும் நிர்வாகமும் இன்று காணப்படுவதுபோல அப்போது இல்லை. திராவிட நாகரிகம் எனப்படும் தொல்தமிழர் நாகரிகமான சிந்துசமவெளி காலத்திலேயே தனி முத்திரைகள்- சின்னங்கள் இருந்ததை தொல்லியல் ஆய்வுகள் காட்டுகின்றன. தமிழகத்தைப் பொறுத்தவரை மூவேந்தர்களான சேர-சோழ-பாண்டியர்களும், களப்பிரர்களும் பல்லவர்களும் ஆட்சி செய்த காலங்களில் சிற்றரசர்கள்- வேளிர்கள் போன்ற குறுநிலப் பகுதியை ஆண்டவர்களும் உண்டு. பெருநிலத்தை ஆண்ட மன்னர்களின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த துறைமுகங்களில் அயல்நாடுகளைச் சேர்ந்த கப்பல்கள் வந்து நின்றன. கிரேக்கம், ரோமாபுரி உள்ளிட்ட நாட்டவர்கள் தங்கள் பொருட்களை இங்கே கொண்டு வந்து இறக்குமதி செய்துவிட்டு, தமிழ்நாட்டிலிருந்த பொருட்களை தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததை இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அதுபோலவே, தமிழக வணிகர்களும் திரைக்கடலோடியும் திரவியம் தேடு என்பதற்கேற்ப பல நாடுகளுக்கும் சென்று கடல்வழி வாணிபம் மேற்கொண்டுள்ள னர். இத்தகையப் பயணங்களின்போது, அரசு சார்ந்த முத்திரை கள் மட்டுமின்றி, வணிகர்களுக்கானத் தனி முத்திரைகளும் பயன்படுத்தப்பட்டன என்கின்றன வரலாற்றுக் குறிப்புகள். உண்மையான அயல்நாடுகளுடனான வாணிகத் தொடர்பு, அரசாங்க உறவு ஆகியவற்றுக்கான பயணங்களில் முத்திரை மோதிரங்கள், அரசு சின்னம் பொறித்த காசுகள் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேநேரத்தில், உள்நாட்டுக்குள்ளேயே பகை கொண்டு தனித்தனியாக ஆட்சி செய்த மன்னர்களால், தரைவழிப் பாதையிலும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அதில் காவல் வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர். எல்லை கடந்து செல்பவர்களிடம் சுங்கவரி வசூலிப்பது வழக்கமாக இருந்தது. உள்நாட்டு வணிகர்கள் ஓர் எல்லையிலிருந்து மறுஎல்லையைக் கடப்பதற்கு வரி வசூலிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எல்லை தாண்டிச் செல்வதற்கான வாய்ப்புகள் குறைவு. மன்னனைக் காணவும் திருத்தலங்களை தரிசிக்கவும் செல்லும் புலவர்கள், அடியார்கள் போன்றவர்களுக்கு சுங்கவரியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிகழ்வுகளும் உண்டு. எல்லை தாண்டி வரக்கூடியவர்கள் ஒற்றர்களா என கண்காணிப்பது சுங்கச்சாவடி காவலர்களின் முக்கிய பணியாக இருந்ததால், வரிவசூலிப்பதைவிடவும் காவல் காப்பதே முதன்மையாக இருந்துள்ளது. அத்தகைய சூழலில், முத்திரை மோதிரமும், அரசு இலச்சினையும் இன்றைய அடையாள அட்டைகளைப் போல பயன்பட்டுள்ளன.