கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்

தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 47 திருக் கோயில்களிலிருந்து ரூ 10 கோடியை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்ப அறநிலையத் துறை உத்தரவிட்டிருப்பது குறித்து?

கொரோனா காலத் தில் கோவில்கள் மூடப்பட்டுள்ளன. வழக்கமான அர்ச்சனைகள் நடந்தாலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. அன்னதானமும் நிறுத்தப் பட்டுள்ளது. மதுரை சித்திரைத் திருவிழா, திருவாரூர் தேர்த்திருவிழா போன்றவையும் இல்லாததால் அதற்கான செலவும் மிச்சம். அதனை பேரிடர் காலத்து நிவாரணமாக பயன்படுத்துவதால், பாதிப்படைந்தோர் முகத்தில் பகவானைக் காணலாம் என அரசு நினைத்திருக்கலாம்.

mm

Advertisment

சி. கார்த்திகேயன், சாத்தூர் - 626203

பிற உணவகங்களுக்கு இல்லாத சலுகைகள் அம்மா உணவகத்திற்கு மட்டும் ஏன்?

Advertisment

தி.மு.க. ஆட்சியில் பெரிய ஹோட்டல் களிலும் 20 ரூபாய்க்கு சாப்பாடு எனத் தொடங்கப்பட்ட திட்டம், சரியாக செயல் படுத்தப்பட்டிருந்தால், அப்போதே அடுத்த கட்ட நடவடிக்கையாக இதுபோன்ற அரசு உணவகம் அமைந் திருக்கும். ஆனால், சொந்தக் கட்சி மந்திரிகளும் அவர் களது உறவினர்களும் சுயலாபம் கருதி செயல்பட்ட காரணத்தால், மலிவு விலை சாப்பாடு முடக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் கொண்டுவரப்பட்ட உருப்படியான திட்டம், அம்மா உணவகம். பட்டினிச் சாவு இல்லாத தமிழகத்தை அதே நிலையில் தொடர்ந்து கொண்டு செல்ல, அம்மா உணவகங்கள் உதவி செய்தன. அரசுக்கு நட்டம் ஏற்பட்டாலும் ஏழை மக்கள் பசியாறினர். தற்போது ஊரடங்கு நேரத்தில், இலவசமாகவே உணவு வழங்கப்படுகிறது. பாராட்டப்பட வேண்டிய செயலை, ஆளுங்கட்சி தனது அப்பட்டமான அரசியலை வெளிப்படுத்தி, குமட்ட வைக்கிறது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

ஊரடங்கில் தொழில் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் தர கட்டாயப்படுத்த முடியாது என்று நாடாளுமன்ற குழு அறிக்கை?

ரிசர்வ் வங்கி அறிவிப்புகள், வங்கிகளைக் கட்டுப்படுத்தாது. நிதியமைச்சரின் அறிவிப்பு மாநிலங் களுக்கு பயன்தராது. பிரதமரின் வேண்டுகோளை நாடாளுமன்றக் குழு ஏற்றுக் கொள்ளாது.

மதிராஜா திலகர், சின்னபுங்கனேரி, கடலூர்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மற்றும் கல்லூரி தேர்வுகள் நடத்தப்படுமா?

கொரோனா வைத்துள்ள தேர்வில் உலகம் பாஸ் ஆனபிறகு!

பி.மணி, குப்பம்,ஆந்திரா மாநிலம்

கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் உலக தலைவர்களின் பட்டியலில் முதலிடம் பிரதமர் மோடி என்று சர்வதேச ஆய்வு நிறுவனமான மார்னிங் கன்சல்ட் அறிவித் திருக்கிறதே?

அமெரிக்க அதிபர் மிரட்டினார், வளைகுடா நாடுகள் எச்சரித்தன. அந்தர் பல்டி அடித்தது மோடி அரசு. அதையெல்லாம் ஈடுகட்ட வேண்டாமா? அப்புறம், ஆய்வு செய்த நிறுவனத்தின் பின்புலத்தில் இருப்பவர்களையும் ஆய்வு செய்ய வேண்டும்.

கே.ஆர்.ஜி. ஸ்ரீராமன்,பெங்களூர்-77.

என்னதான் அரசியலாக இருந்தாலும் தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறன் பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்கும் பிரதமர்-முதல்வர் என்று பேசலாமா?

அரசியலே ஓட்டுப் பிச்சைதான். அப்புறம் இதில் பிரதமர், முதல்வர், எம்.பி., எம்.எல்.ஏ. என்ற பேதம் ஏன்?

__________

தமிழி

பா. ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி.

ஊரடங்கு சமயத்தில் சுவையான அசைவ உணவு கிடைக்காததால் ராஜநாகத்தை வெட்டி கொன்று சமைத்து சாப்பிட்ட அருணாசலபிரதேசத்தினர்போல தமிழர்களும் சாப்பிடுவார்களா?

உணவுப் பழக்கம் என்பது அவரவர் பகுதிக்கேற்ற விளைச்சல், தட்பவெப்பம், பழக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் அமைவது. பழந்தமிழர்களின் அசைவ உணவாக ஆடு, கோழி, மாடு, பன்றி, மான், மீன், பறவைகள் இருந்ததை இலக்கியத்தில் காண முடிகிறது. அசைவ வகைகளுடன் தயாரிக்கப்படும் சோறு, ஊன் சோறு என அழைக்கப்பட்டிருக்கிறது. புறநானூற்றுப்பாடல் 395ல் வாளைமீனுடன் உவியல் எனும் கறி செய்து சோற்றுடன் சாப்பிட்டதைக் குறிப்பிடுகிறது. அரசனின் படையிலிருந்த போர்வீரர்கள் தங்கள் உடல்திறனுக்காகத் தொடர்ச்சியாக இறைச்சி சாப்பிட்டிருக்கிறார்கள். இறைச்சியைக் காய வைத்து பதப்படுத்தும் உப்புக்கண்டம் முறை பற்றியும் இலக்கியத்தில் சுட்டிக்கட்டப்பட்டுள்ளது. எண்ணெய்யில் இறைச்சியைப் பொரிக்கும்போது, குளத்தில் விழும் நீர்த்துளி போல ஓசை கேட்பதாக அழகுற மொழிகிறது தமிழ் இலக்கியம். நீண்ட குச்சியில் அல்லது இரும்புக் கம்பியில் இறைச்சியை மாட்டி, சுட்டுத் தின்ற ‘பார்பிக்யூ’ ஸ்டைல் பற்றியும் குறிப்புகள் உள்ளன. பசு, கன்று, மான், மீன், பறவைகளின் இறைச்சித் தன்மை குறித்தும் அவற்றை சமைக்கும் வகைகள் குறித்தும் பெருமையான பல பாடல்கள் உள்ளன.

பாம்புக் கறி சாப்பிடுவது குறித்து தமிழ் இலக்கியங்களில் சிலாகித்து எழுதப்படவில்லை. நடைமுறையில் வயல் எலி, தவளை, நத்தை போன்றவற்றை கிராமப்புற மக்கள் சாப்பிடுவார்கள். வெப்பத்தால் ஏற்படும் உடல் உபாதைகளுக்கு நத்தைக் கறி நல்ல மருந்து. விவசாயிகளுக்கு பாம்பு, தோழன். எலி, எதிரி. பயிர்களை அழிக்கும் எலிகளைப் பிடித்து தின்னக்கூடியவை பாம்புகள். அவற்றிடமிருந்து தப்பிய எலிகளை, அதன் வளைகளில் பொறி வைத்து பிடித்து, சமைத்து சாப்பிடுவார்கள் கிராமத்தினர். இவையெல்லாம் தமிழ்நாட்டு வழக்கம். அருணாசலப்பிரதேசம் என்பது சீனாவை ஒட்டியுள்ள இந்தியப் பகுதி. சீன பாணி உணவுகள் அவர்களின் அன்றாட சமையலில் இடம்பெறக்கூடும்.