கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
சசிகலாவின் நெருங்கிய உறவினர், டி.என்.பி.எஸ்.ஸி.யின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது குறித்து?
சசிகலாவுக்கு ஒருகாலத்தில் விசுவாசியாக இருந்தவரின் ஆட்சிதானே நியமித்திருக்கிறது. விட்டகுறை-தொட்டகுறை என்பது நெடுங்கால வழக்கம். அரசியலில் அது லாபகரமான நோக்கம்.
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
அமெரிக்காவில் ஜனநாயகம் இல்லாவிட்டால், "கொரோனா" சம்மந்தமாக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பற்றி பொய் செய்தி வெளியிட்டுவரும் ஊடகங்களை ஒழித்துக்கட்டியிருப்பேன்... என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கொந்தளித்துள்ளாரே?
டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் மோடி. ஜனநாயகத்தன்மைகளை சிதைத்து, சர்வாதிகாரத்தன்மையை நிலைநாட்ட நினைப்பவர். ஆனால், அமெரிக்காவின் ஜனநயாக அமைப்பு கூட்டாட்சித் தத்துவத்தை அடிப் படையாகக் கொண்டது. கொரோனாவால் அதிகளவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் மாநிலம் தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் விதித்த நிபந்தனைகளை, மக்கள் நலன் கருதி நியூயார்க் கவர்னர் ஆண்ட்ரு க்யோமோ மறுத்துவிட்டார். (அமெரிக்காவில் ஜனாதிபதியும் கவர்னரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்) ஜனாதிபதி ஒன்றும் மன்னரல்ல என்றும், கூட்டாட்சி தத்துவத்தை மீறி அவர் செயல்பட்டால் நீதி மன்றத்தில் சட்டரீதியானப் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார் நியூயார்க் கவர்னர். அமெரிக்காவின் பல மாநில ஆளுநர்களும் நமது நாட்டின் மம்தா பானர்ஜி, பினரயி விஜயன் போலத்தான் இருக் கிறார்கள். டிரம்ப் தன் இமேஜை மட்டுமே பார்க்கிறார். மோடி அரசு எப்படி எல்லாவற்றுக் கும் நேரு மீது பழி போட்டுத் தப்பிக்க நினைக்கிறதோ அதுபோல, டிரம்ப் அங்கே கொரோனாவுக்கு காரணம் ஒபாமா என்று பழிசுமத்தியிருப்பது உச்சகட்டம்.
அருச்சுனன், செங்கல்பட்டு
இந்தியாவில் இதற்கு முன் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா?
இந்தியா முழுமையும் ஊரடங்கை நடைமுறைப்படுத்தியிருப்பது கொரோனா அச்சம்ததான். இதற்கு முன், வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றில் ஊரடங்கு வாரக்கணக்கில்- மாதக் கணக்கில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் கடைசியாக கடந்த ஆகஸ்ட்டில் ஊரடங்கு விதிக்கப்பட்டு, இணையதள சேவைகள்கூட முடக்கப்பட்டன. இவையெல்லாமே அரசுக்கும் அதனை எதிர்ப்போருக்குமான மோதலின் காரணமாக விதிக்கப் பட்ட ஊரடங்குகள். ஆனால், ஒரு வைரஸினால் ஏற்படும் நோய்த் தொற்றுக்காக ஊரடங்கால் மக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகின் பல நாடுகளுக்கும் இதுவே முதல் முறை.
நித்திலா, தேவதானப்பட்டி
கொரோனா நேரத்தில் அரசியல் செய்யாமல் அக்கறையுடன் கருத்துகளைத் தெரிவிக்கும் அரசியல் தலைவர் யார்?
ராகுல்காந்தி.
_____________
தமிழி
கே.பி.கே.பாஸ்கர்காந்தி, சிங்கப்பூர்
தமிழ்நாட்டு அரசர்கள் வடமாநில ஆட்சியாளர்களுக்கு அடிமைகளாக இருந்திருக்கிறார்களா?
வடஇந்திய அரசர்களில் மகத்தான ஆட்சியாளர்களாக இருந்தவர்கள் சந்திரகுப்த மவுரியரும் அசோகரும் ஆவர். அவர்கள் காலத்தில்கூட தமிழ் நிலம் அடிமைப்பட்டிருக்கவில்லை. விந்திய மலைக்குத் தெற்கே வருவதற்கு அன்றைய ஆட்சியாளர்களுக்கு இயற்கையே பெரும் தடையாக இருந்தது. அதனால், தமிழ்நாட்டின் மூவேந்தர்களும் வேளிர்களும் தங்களுக்குள் மோதிக்கொண்டு அதிகாரத்தை நிலைநாட்டினார்களேதவிர, வடஇந்திய ஆட்சியாளர்களுக்கு அடிமைகளாகும் சூழலை வரலாறு உருவாக்கவில்லை. தமிழ் மன்னர்களை இழிவு செய்த வடஇந்திய ஆட்சியாளர்களான கனகனையும் விஜயனையும் எதிர்த்து சேர மன்னன் செங்குட்டுவன் படையெடுத்துச் சென்றதாக இலக்கியங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இமயவரம்பன் சேரலாதன் என்ற மன்னன் இமயத்தில் வில் சின்னத்தைப் பொறித்தபோது, கனகரும் விசயரும் தங்களைப் போன்ற வலிமையான மன்னர்கள் தமிழ்நாட்டில் கிடையாது என எள்ளிநகையாடினார்களாம். இதனைக் கேள்விப்பட்ட செங்குட்டுவன், தன் தம்பி இளங்கோ படைத்த சிலப்பதிகாரத்தின் காப்பிய நாயகி கண்ணகிக்கு சிலை வைக்கத் திட்டமிட்டபோது, வடதிசைக்குப் படையெடுத்து, கனக-விசயர்களைப் போரில் வென்று, அவர்களை கல் சுமக்க வைத்து அதனை கங்கையில் நீராட்டி, தன் நாட்டுக்கு கொண்டு வந்து கண்ணகிக்கு கோட்டம் எழுப்பினார் என்பது வரலாற்றுக் குறிப்பு. சோழ மன்னன் கரிகாலன் வச்சிரம், மகதம், அவந்தி ஆகிய வடபுலத்தினை தனக்கு உட்பட வைத்ததையும் இலக்கியங்கள் கூறுகின்றன. பிற்காலச் சோழர்களில் மாமன்னன் இராசராசனைத் தொடர்ந்து, பட்டம் சூட்டிய அவரது மகன் இராசேந்திர சோழன் மகிபாலன் என்ற வங்காளத்து மன்னனை வென்றதுடன் இன்றைய ஒடிசா, சட்டீஸ்கர் பகுதிகளையும் தனது ஆளுகையின்கீழ் கொண்டு வந்தததை வரலாறு சுட்டிக்காட்டுகிறது. கங்கை கொண்டான் என்ற பட்டப் பெயரும் இராசேந்திர சோழனுக்கு கிடைத்தது. அதன் அடையாமாக, கங்கை கொண்ட சோழபுரம் என்ற தலைநகரினை உருவாக்கி, அங்கே தஞ்சை பெரியகோவிலைப் போன்ற கோவிலையும் கட்டினார் இராசேந்திர சோழன். இது அவரது மெய்க்கீர்த்தியில், ‘தங்காத சாரல் வங்காள தேசமும் தொடுகழற் சங்குகொட டடல்மகிபாலனை வெஞ்சமர் வளாகத் தஞ்சுவித்தருளி ஒண்டிறல் யானையும் பெண்டிற் பண்டாரமும் நித்தில நெடுங்கடலுத்தர லாடமும் வெறிமலர்த் தீர்த்தத் தெறிபுனற் கங்கையும்...’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்குக்கு அடிமையான ஆட்சியாளர்களைக் காணும் பாக்கியத்தை தற்காலத் தமிழர்கள்தான் பெற்றுள்ளனர்.