கே.ஆர்.உபேந்திரன், தஞ்சாவூர்
தேசநலன் கருதி தமிழக மக்கள் அனைவரும் தம்மிடம் இருக்கும் தங்க நகைகளை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று தமிழக பா.ஜக. தலைவர் முருகன் கூறுகிறாரே?
அசாதாரண சூழல்களில் மக்கள் தங்கள் நகைகளை தலைவர்களிடம் ஒப்படைத்த வரலாறு இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் உண்டு. சுதந்திரப் போராட்ட காலத்தில் காந்தியிடமும், பாகிஸ்தானுக்கு எதிரான போரின்போது லால்பகதூர் சாஸ்திரி யிடமும் மக்கள் நகைகளை ஒப்படைத்தனர். ஆனால், கடந்த 6 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் நகைக்கடைகளை விட நகை அடகுக்கடைகள்தான் தமிழகத்தில் அதிகரித்துள்ளன. வைத்த நகைகளை மீட்பதற்கான வருமானம் இல்லாத மக்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கச் செய்யும்படி தனது மேலிடத்திடம் தமிழக பா.ஜ.க. தலைவர் பேசினால் நன்றாக இருக்கும்.
நித்திலா, தேவதானப்பட்டி
நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்து வதில் ட்ரம்ப்பை மிஞ்சிவிட்டாரே மோடி?
உலகளாவிய அளவில் ட்ரம்ப், மோடி, போரிஸ் ஜான்சன், இம்ரான்கான்களைவிட, பெண் ஆட்சியாளர்கள் உள்ள நாடுகளில்தான் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் சிறப்பாக உள்ளன என ஆதாரங்களுடன் சுட்டிக் காட்டுகிறார்கள். ஜெர்மனி அதிபர் மார்கெல், நியூசிலாந்து பிரதமர் ஜகிந்தா, பெல்ஜியம் பிரதமர் சோபி வில்ம்ஸ், ஃபின்லாந்து பிரதமர் சன்னா மரின், ஐஸ்லாந்து பிரதமர் கத்ரீன், டென்மார்க் பிரதமர் மெட்டே ஆகியோர்தான் இந்த சாதனைப் பெண்மணி கள்.
கே.ஆர்.ஜி.ஸ்ரீதரன், பெங்களூரு 77
எம்.பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண் டாண்டுகளுக்கு நிறுத்தி, அதனை கொரோனா தடுப்பு நடவடிக் கைக்கு திருப்பியுள்ளதே மத்திய அரசு?
தாங்கள் தேர்ந்தெடுத்த மக்கள் பிரதிநிதிகளால் தங்கள் தொகுதிக்கு உருப்படியாக கிடைக்கக்கூடிய திட்டங்களுக்குப் பயன்படுவது எம்.பி#எம்.எல்.ஏ தொகுதி மேம் பாட்டு நிதிதான். கொரோனாவைக் காரணம் காட்டி, எம்.பி. நிதிக்கு வேட்டு வைத்து, ஜனநாயகத்தில் வேரில் வெந்நீர் ஊற்றியிருக்கிறது மத்திய அரசு.
ம.தமிழ்மணி, வெள்ளக்கோவில்
ஊரடங்கு காலம் முடிந்தும் மீண்டும் நீட்டிக்கப்படும் என்ற சூழலில் கொரோனா குறைந்தது போல தெரியவில்லையே?
வெளிநாடுகளில் கொரோனா பரவிய போது அரசு காட்டிய அலட்சியம், திட்டமிடப்படாத அவசர ஊரடங்கு உத்தரவு, தனித்திருப்பதே தற்போதைய பாதுகாப்பு என்பதை அலட் சியப்படுத்தும் மக்கள், மருத்துவத்துறையினருக்கே பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத நிலை, கடவுளின் முகவர்கள் போல நினைத்துக்கொண்டு செயல்பட்ட மத அமைப்பினர் என வரிசையாக நின்று கொரோனாவுக்கு வரவற்பு அளித்த அம்சங்கள் நிறைய உள்ளன.
பா.ஜெயப்பிரகாஷ், பொள்ளாச்சி
கொரோனா வைரஸ் விளக்கு புரட்சி வெற்றியா?
ஆபரேஷன் சக்ஸஸ். பேஷண்ட்...?
___________
தமிழி
தூயா, நெய்வேலி
நமது தமிழ் மருத்துவம் என்பதற்காக நோய்த் தொற்றுக் காலத்தில் நமக்கு நாமே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியுமா?
எந்த மருத்துவமும் அதற்குரிய சரியான மருத்துவர்களின் ஆலோசனைப்படிதான் எடுக்க வேண்டும். சித்த மருத்துவமும் அப்படித்தான். அதேநேரத்தில், பாட்டி வைத்தியம் போன்ற வீட்டு நடைமுறை சிகிச்சை முறைகள் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றன. அது பாரம்பரிய முறையில் கையாளப்படுகிறது. வழக்கமான சூழலில் இத்தகைய வீட்டு வைத்தியம் கைக் கொடுக்கும். காய்ச்சல், சளி, தலைவலி போன்ற நேரத்தில் வீட்டளவில் வைத்து தரப்படும் கசாயம்கூட எளிதாக நோயை விரட்டிவிடும். உலகை அச்சுறுத்தும் வைரஸ் தொற்றுநோய்க் காலத்தில் வீட்டு மருத்துவம் என்பது உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கக்கூடியதாக இருக்கும். அதற்கு மேற்பட்ட தடுப்பு மருந்துகளையோ சிகிச்சை முறைகளையோ அந்தந்த துறை சார்ந்த மருத்துவர்கள்தான் பரிந்துரைக்க வேண்டும். மருத்துவர்களை சந்திக்காதபோது, காதுக்கும் கவனத்திற்கும் வரும் அனைத்தும் உண்மையா வதந்தியா என்பதை பிரித் தறியமுடியாத சூழல் ஏற்படும். புளிப்பு சுவை கொண்ட நெல்லிக்காய், எலுமிச்சை போன்றவற்றில் வைட்டமின்#சி இருக்கிறது என்பதும், வைட்டமின்#சி சத்து என்பது இத்தகைய நோய்த்தொற் றுக் காலத்தில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும் என்பதும் உண்மை. ஆனால் அது எந்தளவு உடலில் இருக்கவேண்டும், அதற்கு எந்தளவு வைட்டமின்#சி சத்து உள்ள பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை சித்த வைத்தியத்தில் உரிய பட்டங்கள் பெற்ற மருத்துவரிடமோ, ஆங்கில மருத்துவ ரிடமோ ஆலோசனை பெற்றே எடுத்துக் கொள்ளவேண்டும். வறட்சியான தொண்டை என்றால் நோய்த் தொற்று பரவும் என்றும், எச்சில் ஊறும் தன்மை இருந்தால் கொரோனா தாக்காது என்பதும் பரவலான நம்பிக்கையாக இருக்கிறது. அது குறித்து மருத்துவத்துறை இன்னமும் உறுதி செய்யவில்லை. வெயில் காலத்தில் வைரஸ் அழிந்துவிடும் என்பதும் அத்தகைய நம்பிக்கைதான் என்கிற மருத்துவர்கள், குறைந்த மணி நேரமே வைரஸ் ஓரிடத்தில் இருக்கும் என்பதையும் மறுக்கிறார்கள். அந்தந்த இடத்தின் தட்பவெப்பம், வைரஸ் இருக்கக்கூடிய இடத்தின் தன்மை இவற்றையெல்லாம் பொறுத்துதான் வைரஸின் தாக்கம் இருக்கும் என்கிறார்கள். மத்திய அரசின் சுகாதாரத்துறை இதனை மக்களிடம் தெளிவுபடுத்துகிறது. அதேநேரத்தில், ஆயுர்வேத முறையிலான ஆரோக்கிய உணவு முறைகளை பரிந்துரைக்கும் மத்திய அரசு, தமிழர் மரபுவழி உணவு முறைகளையும் மக்களிடம் விளக்க வேண்டும். இந்த நேரத்திலும் மாற்றாந்தாய் மனப்பான்மை கூடாது.